சென்னையில் ஜல்லிக்கட்டு!

By Balaji

|

Published on 16 Dec 2017, 12:00 AM

தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை மற்றும் சென்னை ஜல்லிக்கட்டு அமைப்பு சார்பில் சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் ஜல்லிக்கட்டு பிரீமியர் லீக் போட்டிகள் நடத்த முடிவு செய்துள்ளனர்.

கடந்த ஜனவரியில் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரி உலகம் முழுவதும் போராட்டம் வெடித்தது. தமிழனின் அடையாளத்தைக் காப்பாற்ற இளைஞர்களும், பொது மக்களும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். போராட்டம் வலுப்பெற தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தும் வகையில் அவசரச் சட்டத்தை அமல்படுத்தியது. இந்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார்.

ADVERTISEMENT

இதைத்தொடர்ந்து பிப்ரவரி மாதம் முதல் தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடந்தது. இந்த நிலையில் தமிழகக் கிராமங்களில் நடத்துவதைப்போன்று சென்னை மாநகரத்தில் ஜல்லிக்கட்டு விழாவை நடத்த திட்டமிட்டு வருகின்றனர்.

சென்னையில் ஜல்லிக்கட்டு என்ற முழக்கத்துடன் ஜனவரி 7ஆம் தேதி கிழக்கு கடற்கரை சாலையில் பிரீமியர் லீக் போட்டிகள் நடைபெறவுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து 500க்கும் மேற்பட்ட காளைகள் இந்த வீர விளையாட்டில் கலந்துகொள்ள உள்ளன. ஆயிரக்கணக்கான வீரர்களும் பங்கேற்க உள்ளார்கள்.

ADVERTISEMENT

இதுகுறித்து இதன் ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் ஸ்ரீநிவாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், “தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவையின் தலைவர் ராஜசேகர் மற்றும் சென்னை ஜல்லிக்கட்டு பேரவையின் செயலாளர் அமர் பிரசாத் ரெட்டி இருவரும் சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்தும் யோசனையோடு என்னை அணுகினர். அந்த யோசனை எனக்கு மிகவும் பிடித்தது. எனவே, அதை வெற்றிகரமாக நடத்தத் திட்டமிட்டுள்ளோம். சென்னையில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி அனைவரையும் ஈர்க்கும் வகையில் தயாராகி வருகிறது. கிராமப் புறங்களில் நடத்தப்படுவதைப் போலவே, இந்த நிகழ்ச்சியிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். ஆனால், வேறு வடிவத்தில் இது இருக்கும். இது ஐந்து சுற்று, ஐந்து குழுக்கள் என்றளவில் நடத்தப்படவுள்ளது. 2018ஆம் ஆண்டைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை இனி எல்லா ஆண்டும் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்” என்று மகிழ்ச்சியோடு கூறியுள்ளார்.

“தமிழர்களின் வீரத்தைப் பறைசாற்றும் இந்த விளையாட்டு, சென்னையில் இதுவரை நடத்தப்படவில்லை. 80 சதவிகிதத்துக்கும் மேலான சென்னை மக்கள் இதை நேரலையில் மட்டுமே பார்த்து மகிழ்கின்றனர். எனவே, இந்த முறை இதைச் சென்னையில் நடத்துவதென்று முடிவு செய்தோம்” எனத் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவையின் தலைவர் ராஜசேகர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel