‘உதயநிதி திருத்தத்தை’ முதல்வர் விஜய் எப்படி ஏற்கலாம்? சிபிஎம் கேள்வி

Published On:

| By Mathi

CPM Shanmugam Vijay

தமிழக சட்டசபையில் கர்நாடகாவின் மேகதாது அணைக்கு எதிரான அரசினர் தீர்மானத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கொடுத்த திருத்தத்தை முதல்வர் விஜய் (Vijay) ஏற்றதற்கு சிபிஎம் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறியுள்ளதாவது: சட்டமன்றத்தில் தீர்மானங்கள் கொண்டு வருகிற போது, முன்கூட்டியே சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கொடுத்து, அதன் மீது சட்டமன்றப் குழுத் தலைவர்கள் எல்லாம் பேசி, பிறகு இறுதியாக முதலமைச்சர் அவர்கள் பேசி தீர்மானம் நிறைவேற்றப்படும்.

ADVERTISEMENT

ஆனால் சட்டசபையில், அரசாங்கம் ஒரு தீர்மானத்தைக் கொடுத்திருக்கிறது. அதன் மீது எல்லா கட்சித் தலைவர்களும் பேசியிருக்கிறார்கள், முதலமைச்சரும் பேசியிருக்கிறார். அதிலே பிரச்சனை இல்லை.

ஆனால் முதலமைச்சர் பேசி முடித்ததற்குப் பிறகு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திமுகவைச் சார்ந்த உதயநிதி ஸ்டாலின் , “நான் ஒரு திருத்தம் கொடுத்தேன், அந்தத் திருத்தம் குறித்து நீங்கள் எதுவும் சொல்லவில்லை” என்று கேள்வி எழுப்புகிறார். அதுவும் பிரச்சனை இல்லை.

ADVERTISEMENT

உடனடியாக முதலமைச்சர் விஜய் அந்தத் திருத்தத்தை ஏற்று தீர்மானத்தை நிறைவேற்றுங்கள் என்று சொல்லுகிறார். என்ன திருத்தம் கொடுத்தார்கள் என்பது அங்கே சபையில் இருக்கிற சட்டமன்ற உறுப்பினர்கள் யாருக்கும் தெரியாது. சட்டமன்றக் கட்சித் தலைவர்களுக்குத் தெரியாது. என்ன திருத்தம் என்பதே தெரியாமல் நாங்கள் எப்படி கையை உயர்த்தி ஆதரவு தெரிவிக்க முடியும்? ஆனால் அரசாங்கம் கொண்டுவந்த தீர்மானம் என்கிற முறையில் எல்லா சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.

அரசாங்கம் கொண்டுவந்த தீர்மானத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட ஆதரவு தெரிவித்திருக்கிறது. நானும் வரவேற்றேன்.

ADVERTISEMENT

அதெப்படி உதயநிதி திருத்தத்தை ஏற்கலாம்?

ஆனால் இடையிலே புகுந்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கொடுத்த திருத்தம் என்ன என்பதைச் சபைக்குச் சொல்லாமல், அதை நாங்கள் ஏற்று தீர்மானத்தை நிறைவேற்றுகிறோம் என்கிற இந்த அணுகுமுறை என்பது, தமிழ்நாடு சட்டமன்ற விதிகளுக்குப் புறம்பானது. ஒருவேளை முதலமைச்சருக்கு இத்தகைய விதிகள் தெரியவில்லை என்று சொன்னால், சபாநாயகர் சொல்ல வேண்டும். பல ஆண்டுகாலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த பல மூத்த சட்டமன்ற உறுப்பினர்கள் தவெக (TVK) கட்சியிலே இருக்கிறார்கள். அவர்கள் சொல்லியிருக்க வேண்டும். ஆனால், திருத்தம் எது என்பதையே மற்ற உறுப்பினர்களுக்குத் தெரிவிக்காமல், அது உட்படச் சேர்த்து தீர்மானத்திற்கு வாக்கெடுப்பு நடத்தியது, வாக்கு கோரியது என்பது மிக மிக மிகத் தவறான ஒரு நடைமுறை. ஆகவே, நாளை மறுநாள் சட்டமன்றம் நடைபெறுகிற போது இந்தத் திருத்தத்தை ஏற்கவில்லை, அல்லது திருத்தம் சம்பந்தமாக மீண்டும் சபையினுடைய கவனத்திற்குக் கொண்டுவந்து, சபையில் இருக்கக்கூடிய எல்லா கட்சியினுடைய உறுப்பினர்களுடைய கருத்துக்களைக் கேட்டுத்தான் அந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு பெ.சண்முகம் தெரிவித்தார்.

இதேபோல உதயநிதி ஸ்டாலின் திருத்தத்தை முதல்வர் விஜய் ஏற்றதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share