Video : மாணவர்கள் முன் அமைச்சர் போட்ட ‘அடேங்கப்பா’ குத்தாட்டம்- பெற்றோர் அதிருப்தி!

Published On:

| By Pandeeswari Gurusamy

மதுரை மாவட்டம் மேலூரில் அரசுப் பள்ளி வளாகத்தில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர், தவெக பெண் நிர்வாகியுடன் சினிமா பாடலுக்கு நடனமாடிய சம்பவம், பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் விமர்சனங்களையும் கிளப்பியுள்ளது.

தமிழக முதலமைச்சர் விஜய்யின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை மாவட்டம் மேலூரில் மாபெரும் மாரத்தான் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கிய இந்த மாரத்தான் போட்டி, சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்றது. இதில் 1500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT

இந்த மாரத்தான் போட்டியைத் தொடங்கி வைப்பதற்காக, மேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சருமான விஸ்வநாதன் வருகை தந்திருந்தார். போட்டி தொடங்குவதற்கு முன்பாக, பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஒலிபரப்பப்பட்ட தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் “தளபதி கச்சேரி” பாடலுக்கும், ‘சச்சின்’ திரைப்படத்தின் “வாடி வாடி கைப்படாத சிடி” என்ற பாடலுக்கும், தமிழக வெற்றிக் கழகத்தின் பெண் நிர்வாகி மற்றும் கட்சி இணைச்செயலாளருடன் இணைந்து அமைச்சர் விஸ்வநாதன் நடனமாடினார்.

அரசுப் பள்ளி வளாகத்தில், அதுவும் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள் முன்னிலையில் பொறுப்புள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் ஒருவர் இவ்வாறு சினிமா பாடலுக்கு நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

“மாணவர்களுக்கு ஒழுக்கத்தையும், நல்வழிப்படுத்துதலையும் கற்றுத்தர வேண்டிய கல்வித்துறையின் அமைச்சரே, இது போன்ற செயல்களில் ஈடுபடுவது மாணவர்களைத் தவறான பாதைக்கு வழிநடத்தும்” என்று பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் தங்களது கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share