கோவையில் நேற்று நடைபெற்ற இரண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளின் பட்டமளிப்பு விழாக்களிலும் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிப் பாடல்களும், பின்னணி இசையும் ஒலிக்கவிடப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்திலும், கல்வித் துறையிலும் பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ கல்லூரி நிகழ்வு:
கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ அரசு மருத்துவக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பவன குமார் கிரியப்பானவர், இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி முதல்வர் வீரமணி மற்றும் மருத்துவப் பேராசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர். தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினர். விழா நிறைவடைந்து சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் மேடையை விட்டு வெளியேறிச் சென்றபொழுது, அரங்கில் திடீரென தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ கட்சிப் பாடல் ஒலிக்கவிடப்பட்டது அங்கிருந்தவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அரசு மருத்துவக் கல்லூரி சர்ச்சை:
இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, கோவை பீளமேடு பகுதியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். மாவட்ட ஆட்சியர், மருத்துவக் கல்லூரி டீன் உட்படப் பல்வேறு உயர் அதிகாரிகளும் இந்த நிகழ்வில் முன்னிலை வகித்தனர்.
இந்த விழா தொடங்குவதற்கு முன்பாகவே, தவெக தலைவரும் தற்போதைய முதல்வருமான விஜய், முன்னதாக நடிகராக இருந்தபொழுது நடித்த திரைப்படங்களின் பாடல்கள் அரங்கில் ஒளிபரப்பப்பட்டன. அதனைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் பட்டமளிப்பு விழா முறைப்படி தொடங்கியது.
அப்பொழுது, மருத்துவ மாணவர்கள் ஒவ்வொருவராகத் தங்களது பட்டங்களைப் பெறுவதற்காக மேடை நோக்கி நடந்து வந்தனர். அந்தச் சமயம், ”நான் தன்னந்தனி ஆளு, நீ ஏளனமா பாரு கொஞ்ச நகுந்தேனா எட்டு கோடி பேரு” என்ற தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பாடல் மிக உரத்த சத்தத்துடன் ஒலிக்கவிடப்பட்டது. மேடையில் மூன்று அமைச்சர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் அமர்ந்திருந்த நிலையிலேயே, பட்டமளிப்பு விழாவில் ஒரு அரசியல் கட்சியின் பாடல் பின்னணியாக இசைக்கப்பட்டது அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, கோவை அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள வந்த சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ், மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்பொழுது கோவை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பாக இடம் பார்ப்பதற்காக வந்திருக்கின்றோம். தகுதியான இடம் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பேசியிருக்கிறோம். முதல்வர் விஜய் அவர்கள் பிரதமரைச் சந்திக்கும்பொழுது கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அனுமதி கேட்டிருந்தார். கூடிய விரைவில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவோம், இடத்தை முழுமையாகக் கண்டறிந்து விட்டுச் சொல்கிறோம்” எனத் தெரிவித்தார்.
மேலும் நீட் தேர்வு காரணமாக இரு மாணவர்கள் உயிரிழந்தது குறித்து ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்த அமைச்சர், “நீட் தேர்வு வேண்டாம் என்பது தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதியான நிலைப்பாடு. நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது. இதற்கு நிரந்தரத் தீர்வாகக் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும். இதனை ஆளுநர் உரையிலும் நாங்கள் தெளிவாகச் சொல்லியிருக்கிறோம். சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது மட்டுமல்லாமல், சட்ட ரீதியிலும் இதற்கான அனைத்து வழிகளையும் தீவிரமாக ஆலோசனை செய்வோம்” என்றார்.
தமிழக அரசு பிரத்தியேகமாக ‘104’ என்ற உதவி மையம் வைத்திருக்கிறது. அதில் மனநல நிபுணர்கள் இருப்பார்கள், மாணவர்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். தேர்வு என்பது வெறும் நடைமுறைதான். மருத்துவம் என்பது ஒரு படிப்பு மட்டும்தான்; அது கிடைக்கவில்லை என்றால் வாழ்க்கை முடிந்துபோய்விடவில்லை.”என்றார்.
இறுதியாக, தமிழகத்தில் பாழடைந்த நிலையில் உள்ள அரசு மருத்துவமனைக் கட்டடங்களைச் சீரமைக்க உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்கள் சந்திப்பில் உறுதிபடத் தெரிவித்தார்.
