கோவையில் நேற்று நடைபெற்ற அரசு மருத்துவக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிப் பாடல்களும், பின்னணி இசையும் ஒலிக்கவிடப்பட்ட சம்பவத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் அக்கட்சியின் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தவெக அமைச்சர்கள் அருண்ராஜ், சம்பத், விக்னேஷ் ஆகியோர் ஆகியோர் பங்குபெற்ற கோவை அரசு மருத்துவக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில், தவெக கட்சியின் பிரத்யேகப் பாடல் ஒலிபரப்பப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. திரு. ஜோசப் விஜய் அவர்கள் முதல்வராக என்றைக்கு பொறுப்பேற்றுக் கொண்டாரோ அன்றில் இருந்து, விளம்பர வெறி முற்றிய தவெகவினரின் அட்டூழியங்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன.
அரசுப் பள்ளிகளில் வகுப்பு நடக்கும் போதே அத்துமீறி நுழைந்து சினிமா வசனம் பேசி ரீல்ஸ் எடுப்பது, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் கொடுத்து “விஜய் மாமா வாழ்க” என அவர்களை கோஷம் போட வைத்து ரீல்ஸ் எடுப்பது, அரசு நிகழ்ச்சி என்று கூறி பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்று, தவெக சார்பாக சான்றிதழ் வழங்குவது, அரசு நிகழ்வுகளில் தவெகவின் பாடலை ஒலிபரப்புவது என ஒட்டுமொத்த தமிழகத்தையே சர்க்கஸ் கூடாரம் போல தவெகவினர் மாற்ற முயன்றுக் கொண்டிருப்பது அப்பட்டமான விளம்பர அரசியல்.
பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியவுடன், படிக்கும் பிள்ளைகளை தங்கள் கட்சியின் விளம்பரத் தூதர்களாகவும், அரசு பட்டமளிப்பு விழாக்களை கட்சி கொண்டாட்டங்கள் போலவும் நினைப்பதை நிறுத்தி விட்டு, அரசு நிகழ்ச்சிகளுக்குரிய மாண்பை கற்றுக் கொள்ளுமாறு முதல்வரையும் அவரது அமைச்சரவையையும் வலியுறுத்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
வானதி சீனிவாசன் கண்டனம்:
இதேபோல், பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் பதிவில், “கோவை அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மூன்று அமைச்சர்கள் கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சியில் தவெக பிரச்சாரப் பாடல் ஒலிபரப்பப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. நேற்று காஞ்சிபுரம் பள்ளி, இன்று கோவை அரசு மருத்துவக் கல்லூரி என கல்விக் கூடங்களை அரசியல் மேடைகளாக மாற்றுவது ஆளுங்கட்சிக்கு அழகல்ல. அரசு நிகழ்ச்சிகளில் என்ன பாடல்களை ஒலிபரப்ப வேண்டும் என்ற அடிப்படை புரிதல் கூட கல்லூரி நிர்வாகத்திற்கு இல்லையா? நிகழ்ச்சி நிரல் தயாரிப்பில் இதுபோன்ற அரசியல் சார்ந்த பாடல்களை பயன்படுத்தக் கூடாது என்பது அங்கிருந்த ஒருவருக்குக் கூட தெரியாதா?
முதலமைச்சர் அவர்களே, அரசு நிகழ்ச்சிகள் உங்கள் புகழ் பாடும் மேடைகள் அல்ல என்பதை உங்கள் கட்சியினருக்கும் அதிகாரிகளுக்கும் எப்போது உணர்த்தப் போகிறீர்கள்? இனிவரும் காலங்களில் அரசு நிகழ்ச்சிகளை அரசியல் கலப்பின்றி, முறையான நிகழ்ச்சி நிரலுடன் நடத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.” என தெரிவித்துள்ளார்.
