நெல்லையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “அருமை சகோதரர் அண்ணாமலைக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஆரோக்கியத்துடனும், குடும்பத்தினருடன் நல்ல சுகத்துடனும் வாழ்வதற்கு இறைவன் எல்லா வகையிலும் வழிவகை செய்ய வேண்டும்” என்று வாழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து, அண்ணாமலை புதிய கட்சி ஆரம்பிக்க உள்ளதாக வெளியாகும் தகவல்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “புதிய கட்சி தொடங்குவது குறித்து அவர் இதுவரை யாரிடமும் பேசவில்லை; நாங்களும் அவரிடம் இது குறித்துப் பேசவில்லை. பொதுவான கட்சி ரீதியாக வழக்கம்போல் நாங்கள் அவரிடம் பேசிக் கொண்டுதான் இருக்கிறோம்” என்றார். மேலும், அவர் புதிய கட்சி தொடங்குவது போன்ற செய்திகள் வெளியாவது குறித்த கேள்விக்கு, “ஊடகங்கள் சிறிய விஷயத்தைக் கூட பூதாகரமாகக் காட்டுகின்றன. இது குறித்து நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, அண்ணாமலை கட்சியில் இருந்து ராஜினாமா செய்யக் கடிதம் கொடுத்ததாகக் கூறப்படுவது உண்மைதானா என்ற கேள்விக்கு, “மாநிலத் தலைவர் என்ற முறையில் என்னிடம் இதுவரை எந்தவிதமான ராஜினாமா கடிதமும் வரவில்லை. இதுவரை அண்ணாமலை என்னிடம் எந்த விதமான கருத்து வேறுபாட்டோடும் பேசவில்லை” என்று விளக்கமளித்தார்.
“அண்ணாமலையைப் பொறுத்தவரை, கடந்த தேர்தலில் கூட தனி ஹெலிகாப்டர் மூலமாக எல்லாத் தொகுதிகளுக்கும் சென்று தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். அதனால், எங்களுக்குள் எந்தவிதமான கருத்து வேறுபாடும் கிடையாது” என்றும் நயினார் நாகேந்திரன் தெளிவுபடுத்தினார்.
