காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன் விஜய் பாட்டிற்கு நடனமாடியது குறித்து சிங்காநல்லூரில் போட்டியிட்ட ஸ்ரீநிதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
கோவை மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஸ்ரீநிதி, கடந்த தேர்தலில் திமுக கூட்டணி தோல்வி அடைந்த நிலையில், காங்கிரஸ் கட்சி விஜய்யின் அரசுக்கு ஆதரவு அளித்தது குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்து வந்தார். இந்நிலையில், அவர் சமீபத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
இதற்கிடையே, தவெக தலைவர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சி ஒன்றில், உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் விஜய்யின் பாடல் ஒன்றுக்கு மேடையில் நடனமாடினார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பலரும் தங்களது கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், அந்த காங்கிரஸ் அமைச்சரின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்து ஸ்ரீநிதி கூடா நட்பு என குறிப்பிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாட்டு மக்களே, காங்கிரஸ் கட்சியினரிடம் ‘ஏன் விஜய் கூட்டணிக்கு போறீங்க? நீங்க திமுக கூட்டணியில்தானே தேர்தலை சந்திச்சீங்க’ என்று கேட்கும்போது, ‘இல்லை, நாங்க போய் கட்சியை வளர்க்கப் போறோம். ஏன்னா விஜய் தான் எங்களுக்கு இரண்டு அமைச்சர் பதவிகளும், ஒரு ராஜ்யசபா எம்பி பதவியும் தர்றேன்னு சொல்லியிருக்காரு’ என்று கூறிவிட்டுப் போனார்கள்.
ஆனால், இன்னைக்கு நடந்த கூத்தைப் பார்த்தீர்களா? உயர்கல்வித் துறை அமைச்சர் என்பது எவ்வளவு பெரிய பொறுப்பான பதவி! அமைச்சரவையில் இடம் கிடைத்துவிட்டது, நாங்க கட்சியை வளர்க்கப் போறோம் என்று சொன்ன காங்கிரஸ்காரர்கள் இன்னைக்கு பண்ணியிருக்கிற செயலைப் பாருங்க. விஜய் பாட்டு போட்டு உயர்கல்வித் துறை அமைச்சர் மேடையில் டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கிறார். இந்த கண்றாவியை எல்லாம் பார்க்க வேண்டும் என்று உங்களுக்கு இருக்கா?
அந்த வீடியோவில் பின்னாடி நிற்கும் கட்சிக்காரரைப் பாருங்கள், எவ்வளவு பாவமாக நின்று கொண்டிருக்கிறார் என்று. மரியாதையான (திமுக) கூட்டணியை விட்டுட்டு, இன்னைக்கு அவங்க கூட்டணிக்கு போன உங்களால், சத்தியமாக கட்சி அணியை வளர்க்கவே முடியாது. இப்படி மரியாதையை இழந்து போனதால், இனிவரும் நாட்களில் இதுபோன்ற இன்னும் பல சம்பவங்களை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்.”” என்று விமர்சித்துள்ளார்.
