மே முதல் நாளான இன்று வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ள சம்பவம் வணிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை கருத்தில் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை தாங்களே தீர்மானித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து நிறுவனங்கள் சிலிண்டர் விலையை அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றன.
இந்நிலையில், மே 1ம் தேதியான இன்று வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை சென்னையில் ரூ.990.50 உயர்ந்து ரூ.3,237-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வணிக சிலிண்டர் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலை இன்று உயர்த்தப்படவில்லை.
ஈரான்-இஸ்ரேல் இடையேயான போர் பதற்றம் காரணமாக ஏற்கனவே சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஹோட்டல்கள் மற்றும் டீக்கடைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உணவுப் பொருட்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. பல்வேறு உணவு தயாரிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று வணிக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டிருப்பதால் ஹோட்டல் உணவுப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.993 உயர்ந்து ரூ.3071.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கொல்கத்தாவில் இந்த விலை ரூ.3,202-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மாநிலங்களுக்கு ஏற்ற விலையில் மாற்றங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.









