பள்ளிகளின் பாதுகாப்பு விஷயத்தில் விளையாடி உள்ளனர், கும்பகோணம் பள்ளி தீவிபத்தை நினைத்தால் மனது பதறுகிறது என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தோ்வில் சட்டமன்ற தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவ – மாணவிகளுக்கு கடந்த 2023-ம் ஆண்டு முதல் கல்வி விருது மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகளை த.வெ.க. தலைவரும், முதலமைச்சருமான விஜய் வழங்கி வருகிறார்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இந்த ஆண்டுக்கான இரண்டாவது கட்ட கல்வி விருது வழங்கும் விழா சென்னை நீலாங்கரையில் இன்று (நவம்பர்26) நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் கலந்து கொண்ட முதல்வர் விஜய் பேசுகையில், “என் நெஞ்சில் குடியிருக்கும் என் அன்பான நண்பா, நண்பி… உங்கள் அனைவருக்கும் எனது வணக்கம். உங்களுடைய பெற்றோருக்கு என்னுடைய வணக்கம். இங்கு ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். சில பேர் இதை அரசியலாக்க முயற்சிப்பார்கள்; அவர்களைப் பற்றிக் கவலை இல்லை. யார் என்ன சொன்னாலும் உங்களிடம் நான் இதைச் சொல்லியே ஆக வேண்டும். என் செல்லங்களிடம் இதை நான் சொல்லியே ஆக வேண்டும். ஏனென்றால், இது உங்களுக்குச் சம்பந்தப்பட்ட விஷயம்; மாணவர்கள் சம்பந்தப்பட்ட விஷயம். மாணவர்கள் எங்கெல்லாம், எப்போதெல்லாம் உஷாராக இருக்க வேண்டும் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதால் சொல்கிறேன்.
ஊழல் என்பது பழைய விஷயம்தான். மக்கள் எல்லோரும் அதற்குப் பழகிவிட்டார்கள் என்று நினைத்து கடந்து போக முடியாது. ஏனென்றால், அது நீண்டகால நோய் போன்றது. அதைச் சரிசெய்ய என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ, அதை நாம் செய்துதான் ஆக வேண்டும். ‘இதையெல்லாம் சரிப்படுத்த முடியுமா?’ என்று சிலர் கேட்கலாம். குறைந்தபட்சம் நாம் அதைக் கட்டுப்படுத்தலாம் அல்லவா? அதற்கான முயற்சியையாவது எடுக்கலாம் அல்லவா? அப்படி நான் எடுத்த முயற்சியால்தான் சில பேஸ்மென்ட் (Basement) ஆடிப்போய்க் கிடக்கிறது; அது இங்கு வேண்டாம்.

சமீபத்தில் நடந்த ஊழலைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்; செய்திகளைப் பார்த்திருப்பீர்கள். மற்ற துறைகளில் ஏதாவது தவறு நடந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்; நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம்; அதன் பிறகு நீதிமன்றம் அதைக் கையில் எடுக்கும். ஆனால், கல்வித்துறையில் இதுபோன்று நடக்கிறது என்றால் அதை எப்படிப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியும்? சில அறிவுஜீவிகள் கேட்பார்கள், ‘எல்லா துறையும் நமது துறைதானே?’ என்று. எந்தத் துறையில் தவறு நடந்தாலும் தவறு, தவறுதான். ஆனால், கல்வித்துறைதானே எல்லாவற்றிற்கும் ஒரு அடிப்படை! நம் பிள்ளைகளுக்கு எல்லாவற்றையும் விட இதுதான் முக்கியம். எதிர்காலத் தலைமுறை அவர்கள்தானே!
பள்ளியின் பாதுகாப்புகளில் எல்லாம் சும்மா விளையாடியிருக்கிறார்கள். அதில் வந்த பிரச்சனைதான் கும்பகோணம் பள்ளிப் பிரச்சனை; இப்போது நினைத்தாலும் பதறுகிறது. அதையேதான் இவர்களும் தொடர்ந்து வந்துள்ளனர். எப்படிப் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பது? அப்போது கூட நான், ‘எனது டேபிளில் மூன்று ஃபைல் (File) இருக்கிறது’ என்றுதான் சொன்னேன். உடனே எதிர்க்கட்சியிலிருந்து, ‘அது என்ன ஃபைல்? இருக்காமல் திறங்களேன், திறந்துதான் பாருங்களேன்…’ என்றார்கள். யாரு? ஐயோ, வந்துட்டாரே கலாய்ப்பாரே அவர் தான்…” என்று திமுகவை மறைமுகமாகச் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், “நானே சட்டமன்றத்தில் கையைக் கட்டிக்கொண்டு சும்மா உட்கார்ந்திருப்பேன். அவர்களே ஆசைப்பட்டுக் கேட்கிறார்கள், வேறு என்ன செய்வது? ‘சரி பைலை திறங்க சார் என்றேன் , வேறு என்ன செய்வது?’
அதுமட்டுமில்லாமல், பசங்க, பிள்ளைகள் படிக்கும் லைப்ரரி (Library) புத்தகங்களில் கூடவா ஊழல்? நான் சரி, ஏ.ஐ டெக்னாலஜி எல்லாம் வந்துள்ளது, பயங்கரமாக டெவலப்மெண்ட் வரப்போகிறது, எல்லா துறைகளிலும் நாம் வளர்ச்சியைப் பார்க்கப் போகிறோம் என்று ஆசையாக, எதிர்பார்ப்போடு இருந்தால், அதே ஏ.ஐ-யை வைத்துக்கொண்டு ஆரம்பக் காலத்திலேயே இவர்கள் இப்படி ஒரு ஊழலைச் செய்து கொண்டிருக்கிறார்கள் என்றால் சத்தியமாக எனக்குப் புரியவில்லை. இவர்களையெல்லாம் எங்கே கொண்டு சென்று வைப்பது, என்ன செய்வது என்று எனக்குப் புரியவில்லை.
கோவை பெரியார் அறிவுலகம், திருச்சி காமராஜர் அறிவுலகம், சேலம் பாரதிதாசன் அறிவுலகம், திருநெல்வேலி காயிதே மில்லத் அறிவுலகம், கடலூர் அஞ்சலையம்மாள் அறிவுலகம் – இதெல்லாம் மாணவர்கள் படிப்பதற்கான நூலகங்கள். அதில் கோவை பெரியார் அறிவுலகத்தில் இப்படி ஒரு முறைகேடு நடந்திருப்பது இப்போது வெளியேறி வருகிறது. இன்னும் மற்ற நூலகங்களில் எல்லாம் என்னென்ன நடந்திருக்கிறதோ, ஒன்று ஒன்றாக வெளியில் வரும். இதெல்லாம் அறிவுலகமா இல்லை ஊழல் உலகமா என்று தெரியவில்லை!

நான் அரசியலுக்கு வந்தது ஒவ்வொரு குடும்பத்திற்காகவும், ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கும் பசங்கள், பிள்ளைகள், அடுத்த தலைமுறைக்காகவும்தான் வந்திருக்கிறேன் என்று சும்மா எல்லாம் சொல்லவில்லை. அப்படிப்பட்ட உங்களுக்கு, உங்கள் வாழ்க்கையைப் பாதிக்கும் அளவிற்கு இந்த மாதிரி நடப்பதை எப்படிப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியும்? அதனால் சொல்கிறேன், என்னுடைய நண்பா, நண்பிஸ்.. உங்கள் அண்ணன் உங்களை எப்போதும் நல்ல வழியில் மட்டும்தான் நடத்தி அழைத்துச் செல்வான். கான்ஃபிடன்ட் (Confident) ஆக இருங்கள். நல்லதே நடக்கும், நல்லது மட்டுமே நடக்கும்” என்று தெரிவித்தார்.









