தவெக எம்.எல்.ஏ. மீதான பாலியல் தொல்லை புகாரில் உள்ளக விசாரணைக் குழு அமைக்கப்பட்டிருப்பது, குற்றச்சாட்டுக்கு உள்ளான எம்.எல்.ஏ.வை பாதுகாக்கும் முயற்சியாகவும், காவல்துறை விசாரணையைத் தாமதப்படுத்தும் நடவடிக்கையாகவும் அமைந்துவிடுமோ என தமிழக அரசு ஊழியர் சங்கம் சந்தேகம் எழுப்பியுள்ளது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் லியாகத் அலி, பொதுச்செயலாளர் சு.ஜெயராஜராஜேஸ்வரன் ஆகியோர் இன்று (நவ.26) வெளியிட்ட அறிக்கை: கள்ளக்குறிச்சி தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் சி. அருள் விக்னேஷ், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்திகள் அனுப்பியதாக எழுந்துள்ள பாலியல் தொல்லை புகார் தொடர்பாக, மூத்த ஐஏஎஸ் அதிகாரி காகர்லா உஷா தலைமையில் நான்கு பேர் கொண்ட உள்ளகப் புகார்கள் குழுவைத் தமிழக அரசு அமைத்துள்ளது.
பெண் அரசு ஊழியர்களுக்கு பணியிடங்களில் ஏற்படும் பாலியல் தொல்லைகளைத் தடுப்பதற்கும், அத்தகைய புகார்கள் மீது விசாரணை நடத்துவதற்கும் சட்டப்படி உள்ளகப் புகார்கள் குழு (Internal Committee) அமைக்கப்படுகிறது. ஆனால், இந்தச் சட்டத்தின் நோக்கத்தையும், புகாரின் தன்மையையும் கருத்தில் கொள்ளாமல், இப்புகாரை உள்ளக விசாரணைக் குழுவின் வரம்பிற்குள் கொண்டு வந்திருப்பது பொருத்தமற்ற நடவடிக்கையாகவே தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கருதுகிறது.
பணியிடத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இடையே ஏற்படும் பாலியல் தொல்லைகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்படும் உள்ளகப் புகார்கள் குழுவின் முன்பு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர் அல்லாத ஒரு சட்டமன்ற உறுப்பினர் மீதான புகாரை விசாரணைக்கு உட்படுத்துவது எவ்வாறு பொருத்தமானதாக இருக்கும்? ஒரு பெண் அரசு ஊழியருக்கு வெளிநபர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்தால், அந்தப் புகாரின் தன்மைக்கேற்ப காவல்துறை மூலம் உரிய விசாரணை நடத்தப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இத்தகைய புகார்களில் உள்ளக விசாரணைக் குழுவை அமைப்பது, காவல்துறையின் சட்டப்படியான விசாரணைக்கு மாற்றாக அமைந்துவிட முடியாது.
குறிப்பாக, புகாருக்கு உள்ளாகியுள்ள நபர் சட்டமன்ற உறுப்பினர் என்பதற்காக, அவருக்கு எதிரான புகாரின் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதில் எவ்விதத் தாமதமும் ஏற்படக்கூடாது. புகாரின் உண்மைத்தன்மையைச் சட்டப்படி விசாரித்து, குற்றச்சாட்டில் உண்மை இருப்பின் உரிய நடவடிக்கை எடுப்பதே அரசின் கடமையாகும்.
ஆனால், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அளித்துள்ள பாலியல் தொல்லை புகாரில் உள்ளக விசாரணைக் குழு அமைக்கப்பட்டிருப்பது, குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள சட்டமன்ற உறுப்பினரைப் பாதுகாக்கும் நோக்கத்திலான முயற்சியாகவும், காவல்துறை விசாரணையைத் தாமதப்படுத்தும் நடவடிக்கையாகவும் அமைந்துவிடுமோ என்ற வலுவான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
பெண் அரசு ஊழியர்களின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் பணியிட உரிமைகளைப் பாதுகாப்பதில் தமிழக அரசு எவ்வித சமரசத்திற்கும் இடமளிக்கக் கூடாது. புகார் அளித்துள்ள பெண் அதிகாரிக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்வதுடன், அவருக்கு நீதி கிடைப்பதற்கான நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொள்ள வேண்டும். எனவே, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அளித்துள்ள பாலியல் தொல்லை புகார் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள உள்ளக விசாரணைக் குழுவைக் கலைத்துவிட்டு, புகாரின் மீது காவல்துறை மூலம் உரிய சட்ட நடவடிக்கையைத் துரிதப்படுத்த வேண்டும். விசாரணை நியாயமாகவும், எவ்வித அரசியல் தலையீடுகளுக்கும் இடமின்றியும் நடைபெறுவதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
பெண் அரசு ஊழியர்களின் பாதுகாப்பையும், அவர்களின் பணியிட உரிமைகளையும் பாதுகாப்பதில் தமிழக அரசு எவ்வித சமரசமுமின்றி தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். இவ்வாறு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.









