ED-ன் ரூ.4,700 கோடி மணல் கொள்ளை புகார்- அமைச்சர் துரைமுருகன் மீது வழக்கு பதிவு செய்ய கோரி அதிமுக கடிதம்

Published On:

| By Mathi

Duraimurugan Sand ED

தமிழ்நாட்டில் ரூ.4,700 கோடி மணல் கொள்ளை நடந்துள்ளதாக அமலாக்கத்துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அதிமுக கடிதம் அனுப்பி உள்ளது.

இது தொடர்பாக மாநிலங்களவை எம்.பி.யும் அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளருமான இன்பதுரை தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: 4700 கோடி ரூபாய் மணல் கொள்ளை குறித்து அமலாக்கத்துறை அனுப்பியுள்ள ஆதாரங்களின் அடிப்படையில் திமுக அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் துணைச் செயலாளர் தமிழ்ச் செல்வன் மூலம் லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் அளித்துள்ளோம். இவ்வாறு இன்பதுரை தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மணல் கொள்ளை புகாரும் பின்னணியும்

தமிழகத்தில் மணல் கொள்ளை நடப்பதாகவும் வழக்கு பதிவு செய்ய கோரியும் கடந்த ஆண்டு, தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியது. தமிழ்நாட்டில் பல இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையும் நடத்தியது பெரும் சர்ச்சையானது.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்திலும் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது. அதில் ”தமிழகத்தில் மணல் கொள்ளை தொடர்பான வழக்குகளில் மாநில அரசு ஒத்துழைக்கக் கோரியும், அமலாக்கத்துறை தகவலின் பேரில் எப்.ஐ.ஆர் பதிவு செய்ய டிஜிபிக்கு உத்தரவிடக் கோரியும் அமலாக்கத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் கடந்த அக்டோபர் மாதம் விசாரணை நடந்த போது, “ஒரு விசாரணை அமைப்பான அமலாக்கத்துறை, மற்றொரு விசாரணை அமைப்பான மாநில காவல் துறைக்கு உத்தரவிட கோரி எப்படி வழக்கு தொடர முடியும்?’ என்று கேள்வி எழுப்பி இருந்தது.

இந்த வழக்கில் கடந்த 10-ந் தேதி விசாரணை நடைபெற்றது. அப்போது, மணல் கொள்ளையைத் தடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று அறிக்கை தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இவ்வழக்கில் அமலாக்கத்துறையும் தமது நடவடிக்கைகளை நியாயப்படுத்தி பதில் மனுவைத் தாக்கல் செய்திருக்கிறது.

ADVERTISEMENT

இந்நிலையில் அதிமுக, அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கடிதம் அனுப்பி உள்ளது.

தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தால் மட்டுமே அதன் அடிப்படையில் இவ்வழக்கில் அமலாக்கத்துறை அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share