வைஃபை ஆன் செய்ததும், “சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்
யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்”ன் பாட்டை ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னங்க ப்ரோ, தளபதி விஷயங்களை பேசுவீங்கன்னு பார்த்தா ‘தல’ பாட்டை பாடுறீங்க?
பாட்டு நல்லா ரைமிங்கா இருக்குது ப்ரோ.. தளபதி விஷயத்தையும் சொல்றோம்.. அதிமுக ‘தலை’கள் விவகாரத்தையும் சொல்றோம்..
அதிமுகவுல ஓரளவுக்கு பிரச்சனைகள் எல்லாம் செட்டில் ஆன மாதிரிதான்.. முதல்ல எஸ்பி வேலுமணி கோஷ்டிகிட்ட பறிச்ச பதவிகளை தரவே மாட்டேன்னு எடப்பாடி சொன்னார்.. அப்புறமா 2 தொகுதிகளுக்கு ஒரு மா.செ. போஸ்ட்தான்னு கொஞ்சம் விட்டு கொடுத்தார்.. அப்புறமா எடப்பாடியும், “சரி உங்ககிட்ட பறிச்ச பதவிகளை கொடுத்துடுறேன்னு”ம் சொன்னாரு..
ஆனா எஸ்பி வேலுமணி கோஷ்டி ரொம்பவே பிடிவாதம் பிடிச்சது.. இப்ப ஒருவழியா சமாதானம் ஆகியிருக்காங்க..
அமித்ஷாவின் அன்பு கலந்த எச்சரிக்கை
எப்படி இந்த சமாதானத்துக்கு எல்லாரும் வந்தாங்கன்னு அதிமுக சீனியர்கள்கிட்ட பேசுனப்ப, “எடப்பாடி சொல்றதை ஏத்துக்கிற மனநிலையில இல்லாமதான் எஸ்பி வேலுமணி கோஷ்டி இருந்துச்சு.. ஆனா டெல்லியில இருந்து அமித்ஷா லெவல்ல தலையீடு வர ஆரம்பிச்சது… அதாவது, “ஒரு முதல்வரா இருந்த இபிஎஸ் இவ்வளவு தூரம் இறங்கி வந்து பேசுறாரு.. ஆனா நீங்க இப்படி பிடிவாதமா இருக்கிறது எல்லாம் சரியில்லை”ன்னு எஸ்பி வேலுமணி கோஷ்டிக்கு ஒரு கட்டத்தில ”அன்பு கலந்த எச்சரிக்கை”யும் கொடுத்தாங்க..
ஆஹா.. இதுவேற மாதிரியா போகுமோன்னுதான் எஸ்பி வேலுமணி கோஷ்டி ஒரேயடியாக ‘சரண்டர் ரிட்டர்ன்’ ஆனாங்க.. எடப்பாடி டீம்ல அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கேபி முனுசாமி, ஓஎஸ் மணியன்.. அங்கிட்டு எஸ்பி வேலுமணி இவங்கதான் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை முடிச்சாங்க”ன்னு சொல்றாங்க..
ஆனால் எஸ்பி வேலுமணி டீம்ல இருந்த சிவி சண்முகம், புதுக்கோட்டை விஜயபாஸ்கர், அருண்மொழித் தேவன் இந்த 3 பேரும் தனித் தனியா நிற்கிறாங்க.. இவங்க என்ன முடிவு எடுக்கப் போறாங்கன்னுதான் எதிர்பார்ப்பா இருக்கு..
சிவி சண்முகம் ஷாக் யோசனை
சிவி சண்முகம் தரப்புல விசாரிச்சப்ப, “ அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்துல சிவி சண்முகத்துக்கும் எடப்பாடிக்கும் இடையே கை கலப்பு வரை போனது பிரச்சனை.. இப்ப மறுபடியும் எடப்பாடி கூட போய் எப்படி நிற்கிறதுன்னு ரொம்பவே சிவி சண்முகம் யோசிக்கிறாரு..
அதோட, ”விஜய்யே என்கிட்ட பேசுனாரு.. எங்க ஆபீசுக்கே வந்தாரு.. அமைச்சரவையில இடம் கிடைக்கும்னு ரொம்பவே நம்பிக்கையா இருந்தோம்.. ஆனா விஜய்யும் நம்ப வெச்சு கழுத்தை அறுத்துட்டாரு.. அதனால தவெகவுக்குப் போகவும் எனக்கு பிடிக்கலை.. பேசாம எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செஞ்சுடறேன்..”ன்னும் சிவி சண்முகம் தன்னோட குடும்பத்தினர்கிட்ட சொன்னாரு..
ஆனா சிவி சண்முகத்தோட அண்ணன் ராதாகிருஷ்ணன் கோபமா, “ஏற்கனவே எம்.பி. பதவியை ராஜினாமா செஞ்சாசு.. இப்ப எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்யுறதா? உனக்காக வேலை பார்த்து இப்பவும் உன்கூடவே நிற்கிற கிளை செயலாளர்கள், நகர செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் எல்லாத்தையும் நினைச்சு பார்க்கனும்.. உன்னை நம்பி ஓட்டுப் போட்ட ஜனங்களையும் நினைச்சு பார்க்கனும்.. அதனால எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யுறேன்னு எல்லாம் சொல்லாம அமைதியா இருந்தாலே போதும்”னு கொஞ்சம் காட்டமாகவே சத்தம் போட்டுட்டார்.. இதனால சிவி சண்முகம் இப்போதைக்கு எதுவும் பேசாம அமைதியா இருக்கிறார்”ன்னு சொல்றாங்க..
விஜயபாஸ்கர் அதிரடி முடிவு
விஜயபாஸ்கரை பொறுத்தவரைக்கும் இன்னைக்கு புதுக்கோட்டை இலுப்பூரில இருக்கிற வீட்டுல ரொம்ப தீவிரமா ஆலோசனை நடத்துனாரு.. பிரஸ் மீட்டுல, ”கட்சிக்காரங்க சொல்றதை கேட்டுக்கிட்டேன்”ன்னும் சொன்னாரு..
இதை பத்தி புதுக்கோட்டை விஜயபாஸ்கருக்கு நெருக்கமானவங்ககிட்ட பேசுனப்ப பல விஷயங்களை ஓபனாகவே சொல்றாங்க.. அதாவது, “திமுக ஆட்சி நடக்கும் போதே முதல்வராக இருந்த ஸ்டாலின் செக்ரட்டரி உமாநாத்துடன் நல்ல தொடர்பில்தான் இருந்தார் விஜயபாஸ்கர்.. அவரு சுகாதாரத்துறை அமைச்சரா இருந்தப்ப அந்த துறை செயலாளரா உமாநாத் இருந்தாரு.. திமுக ஆட்சி வந்ததுக்கு பிறகும் உமாநாத்துடன் நல்ல தொடர்பில் இருந்தாரு..
இன்னொரு பக்கம் தவெகவுடனும் விஜயபாஸ்கர் தொடர்பில்தான் இருந்தாரு.. அதிமுக- தவெக கூட்டணி அமையனும்னு ரொம்பவே எடப்பாடிகிட்ட அழுத்தம் கொடுத்தும் பார்த்தாரு விஜயபாஸ்கர்… ஆனா அது ஒர்க் அவுட் ஆகாததுல ரொம்பவே அப்செட்.. எலக்ஷனுக்கு முன்னாடியே அதிமுகவில அதிருப்தியாதான் விஜயபாஸ்கர் இருந்தாரு..
தேர்தல் முடிஞ்ச பின்னர் ஸ்டாலின் கொடைக்கானலுக்கு போயிருந்தார் இல்லையா? அப்ப திமுக ஐ.பெரியசாமி, சக்கரபாணி, சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் எல்லாரையும் கொடைக்கானலில் ஸ்டாலின் சந்திச்சு பேசுனாரு.. திமுகதான் ஜெயிக்கும் அப்படிங்கிற நம்பிக்கையில அமைச்சரவை பட்டியலும் கூட அங்கே தயாரிச்சாங்க..
அந்த டைம்ல, அனிதா ராதாகிருஷ்ணன் போன் மூலமா ஸ்டாலின் கிட்டேயும் விஜயபாஸ்கர் பேசினார்.. திமுகதான் ஆட்சி அமைக்கும் அப்படிங்கிறதால, “நான் உங்க கட்சிக்கே வந்துடலாம்”னு இருக்கிறேன் தலைவரேன்னும் விஜயபாஸ்கர் சொல்லி இருந்தார்..
ஆனா மே 4-ந் தேதிக்கு பிறகுதான் நிலைமை வேறாகிடுச்சே.. அதனால திமுக சாய்ஸை கைவிட்டுட்டாரு விஜயபாஸ்கர்..
தன்னோட பழைய தொடர்புகள் மூலமாக இப்ப திரும்பவும் தவெகவுக்கே போகலாம்னு மூவ் பண்ணிகிட்டு இருக்கிறாரு.. அதுக்கு முன்னோட்டமாதான் கட்சிக்காரங்களுடன் ஆலோசனை என்பது எல்லாம்..
சிஎம் விஜய்யும் கூட, “நீங்க எம்.எல்.ஏ. பதவியை ரிசைன் பண்ணிட்டு தவெகவில சேர்ந்துடுங்க.. இடைத்தேர்தலில்ல நின்னு ஜெயிச்சுட்டு வாங்க.. அப்புறம் என்னான்னு பார்க்கலாம்”னு சொன்னார்..
தவெகவுக்கு போறது அப்படிங்கிறதுதான் விஜயபாஸ்கர் முடிவு.. எப்ப வேணும்னாலும் இதை அறிவிப்பார்”ன்னு சொல்றாங்க..
அருண்மொழித்தேவனையும் விஜயபாஸ்கர், ”வாங்க ரெண்டு பேரும் சேர்ந்து ராஜினாமா செஞ்சுட்டு தவெகவுக்கு போகலாம்”னு கூப்பிட்டு இருக்கிறாரு.. ஆனா அருண்மொழித் தேவன் தரப்புல எந்த பதிலும் வரலையாம்.. இதை பத்தி அருண்மொழித் தேவன் சர்க்கிளில் கேட்டப்ப, “விஜயபாஸ்கர் கூட சேர்ந்து தவெகவுக்கு போற சான்ஸ் அதிகமா இல்லைங்க.. எடப்பாடி பக்கம் போகத்தான் வாய்ப்பு அதிகமா இருக்கு”ன்னு சொல்றாங்க ப்ரோ என டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடியே ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
