தவெகவுக்கு தாவலா? மாஜி அதிமுக அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சொன்னது என்ன?

Published On:

| By Mathi

C Vijayabaskar AIADMK TVK

அதிமுகவில் (AIADMK) தொடர்ந்து நீடிப்பதா? தவெகவில் (TVK) இணைவதா? என்பது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ. சி. விஜயபாஸ்கர் (Vijayabaskar) தமது ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுகவில் எஸ்பி வேலுமணி அணியில் இணைந்து கொறடாவாக அறிவிக்கப்பட்டவர் சி. விஜயபாஸ்கர். முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் எஸ்பி வேலுமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு இடம் மறுக்கப்பட்டது. இதனையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சந்தித்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி, எஸ்பி வேலுமணி அணிகளின் எம்.எல்.ஏக்கள் நேற்று நேரில் சந்தித்தனர். அப்போது இருதரப்பும் சபாநாயகரிடம் கொடுத்திருந்த மனுக்களை திரும்பப் பெற்றனர். அப்போதும் சி. விஜயபாஸ்கர் உடனிருந்தார்.

அதிமுகவில் கலகம் ஏற்பட்ட பின்னர் பெரும்பாலான அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர். ஆனால் சி. விஜயபாஸ்கர் இன்னமும் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவில்லை.

ADVERTISEMENT

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள தமது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் இன்று மே 28-ந் தேதி விஜய பாஸ்கர் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், “ நான் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் பயணிக்கிறேன். இன்றைக்கு அரசியல் களம் என்ன? அடுத்து என்ன? என்பது குறித்து ஆலோசித்தோம். இந்த இயக்கத்திற்கு ஒரு மகத்தான வெற்றியை அளித்த எங்களுடைய தொகுதி மக்கள்… அவர்களின் உணர்வு எனக்கு ரொம்ப ரொம்ப முக்கியம்.

ADVERTISEMENT

62,000 வாக்கு வித்தியாசத்துல மக்கள் வெற்றி பெற வைத்துள்ளனர்.. நம்பிக்கையோடு அந்த வாக்களித்த மக்களுடைய உணர்வுகள், கருத்துக்கள் ரொம்ப முக்கியம்.

அதோட இந்த வெற்றிக்காக மிகக் கடுமையாக உழைத்திருக்கக்கூடிய எங்களுடைய கழக நிர்வாகிகள், கிளைச் செயலாளர்கள், ஒன்றிய, நகரக் கழகத்துடைய செயலாளர்கள்… இத்தனை காலம் ஒன்றாகப் பயணித்துக் கொண்டிருக்கக்கூடிய எங்களுடைய நிர்வாகிகள்… மாவட்டத்தில் இருக்கக்கூடிய அனைத்து ஒன்றிய, நகரக் கழகச் செயலாளர்கள்… அவர்கள்ட்ட நான் வந்து கருத்து கேட்டுக்கிட்டு இருக்கிறேன். அவ்வளவுதான்.

அவர்களுடைய கருத்தை, அவர்களுடைய எண்ணங்களை, அவர்களுடைய உணர்வுகளை நான் உள்வாங்கிக்கிட்டு இருக்கிறேன்.

அதனால அவர்களுடைய கருத்துக்கு ஏற்ப, அவருடைய உணர்வுகளுக்கு ஏற்ப… இந்தத் தொகுதி மக்களின், எனக்காக வாக்களித்த என்னுடைய தெய்வங்கள்… அவங்க எல்லாரோடையும், எல்லாரோட கருத்தையும் கேட்டுட்டுத்தான்… அடுத்த நகர்வைப் பற்றி உங்கள்ட்ட நான் பேசுறேன்” என்றார்.

தவெகவுக்கு தாவலா?

அப்போது, தவெகவில் இணைவீர்களா? என்ற கேள்விக்கு, “தொகுதி மக்களின் முடிவுதான் என் முடிவு. அவர்கள் நிறைய கருத்துகளை சொல்லி இருக்கிறார்.. அது என்ன என்பதை பின்னர் சொல்கிறேன். மற்றபடி யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது” என்றார் சி.விஜயபாஸ்கர்.

Photo of author
Mathi

நான் 1993-ம் ஆண்டு முதல் இதழியல் துறையில் பணிபுரிகிறேன். அச்சு, இணையம், காட்சி, ஒலி என அனைத்து ஊடகத் துறையிலும் பணியாற்றிய அனுபவம் இருக்கிறது. தமிழின் பழம் பெரும் நாளேடான தினமணியில் செய்தியாளராக பணியை தொடங்கினேன். உலகின் முதல் தமிழ் செய்தி இணையதளமான தற்போது பயன்பாட்டில் இல்லாத ‘இன்தாம்’ இணையத்தில் செய்திப் பொறுப்பாசிரியராகப் பணியாற்றினேன். இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா தமிழ் வானொலியின் இந்திய பொறுப்பாளராக, சன் நியூஸ் செய்தி சேனலில் சிறப்பு தொகுப்பு ஆசிரியராக, ஒன் இந்தியா தமிழ் இணையதளத்தில் இணை ஆசியராக தற்போது மின்னம்பலத்தில் பணியாற்றுகிறேன்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share