எம்.எஸ்.சுவாமிநாதன்: பசுமைப் புரட்சியும் ஆன்மீக வேளாண்மையும்!

By Kavi

|

Published on 29 Sep 2023, 7:07 PM

Agronomist MS Swaminathan Green Revolution
Follow us on
Google News
Add As A Preferred
Source On A Google

Share:

ரவிக்குமார் 

இந்தியாவை உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறச் செய்ததில் பெரும் பங்காற்றிய வேளாண் விஞ்ஞானி எம். எஸ்.சுவாமிநாதன் ( 1925 -2023) 98 வயதுவரை நிறை வாழ்வு வாழ்ந்து மறைவெய்தியுள்ளார். இந்தியாவை உணவுப் பற்றாக்குறையிலிருந்து மீட்டதில் அவருக்குப் பெரும் பங்கு உண்டு. அதனால் அவருக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் நன்றிக்கடன் பட்டுள்ளது.  

ADVERTISEMENT

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் அலை அலையாக ஏற்பட்ட பஞ்சங்களின் காரணமாக கோடிக் கணக்கானோர் உயிரிழந்தனர். இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகும் கூட உணவு உற்பத்தியில் நாம் தன்னிறைவடையவில்லை. பாரம்பரியமாக நாம் பயிரிட்டுக் கொண்டிருந்த கோதுமை, நெல் ரகங்கள் அதிக மகசூலை தரக்கூடியவையாக இல்லை. அது மட்டுமின்றி மழையைத் தாக்கு பிடிக்கக் கூடியவையாகவும் அவை இல்லை.

அதற்குக் காரணம் நமது நெல் ரகங்கள் உயரமானவையாகவும் அதிக கதிர்களைத் தாங்க முடியாமல் சாய்ந்து விடக் கூடியவையாகவும் இருந்தது தான்.  இதை ஆராய்ந்த  எம்.எஸ்.சுவாமிநாதன் கோதுமை மற்றும் நெற்பயிரின் உயரத்தைக் குறைப்பதன் மூலமே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என உணர்ந்தார்.

ADVERTISEMENT

அப்படி குறைந்த உயரம் கொண்ட புதிய பயிர் ரகத்தை அவர் உருவாக்கியபோது அவை அதிக அளவு மகசூல் தரக்கூடியவையாக இல்லை. அந்த நேரத்தில் தான் அமெரிக்காவில் குறைந்த உயரம் கொண்ட கோதுமை ரகம் ஒன்று அதிக மகசூல் தருவதை அவர் அறிந்தார்.

ADVERTISEMENT

ஜப்பான் நாட்டில் பயிரிடப்பட்டு வந்த கோதுமை வகை ஒன்றை அமெரிக்காவில் ஒரு தாவரவியல் விஞ்ஞானி மரபணு மாற்றத் தொழில் நுட்பத்தின்மூலம் அதன் உயரத்தைக் குறைத்து அதிக மகசூல் தருவதாக மேம்படுத்தி இருந்தார்.

அதைக் கேள்விப்பட்ட எம்.எஸ்.சுவாமிநாதன் அந்தத் தொழில்நுட்பத்தை மெக்ஸிகோவில் அறிமுகம் செய்த விஞ்ஞானி நார்மன் பொர்லாக்கை தொடர்பு கொண்டு அவரை இந்தியாவுக்கு வரவழைத்தார்.

Image
நார்மன் பொர்லாக் – எம்.எஸ்.சுவாமிநாதன்

அவரது உதவியின் மூலமாக மெக்ஸிகோவில் பயிரிடப்படும் குட்டை ரக கோதுமை வகை இந்தியாவில் சோதனை முறையில் பயிரிடப்பட்டது . அப்போது அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம்  அதற்கு உதவியாக இருந்து ஊக்கமளித்தார். சுமார் 150 இடங்களில் அதை சோதனை முறையில் பயிரிட ஏற்பாடு செய்தார். 

கோதுமையில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்ட பின் அதே முறையை நெல்வகையிலும் எம்.எஸ் சுவாமிநாதன் பரிசோதித்தார். உயரமாகவும் அதிக மகசூல் தருவதாகவும் இருந்த இந்தோனேஷியாவின் பீட்டா என்ற நெல் ரகத்தையும், குட்டையாக அதிக மகசூல் தந்த சீன நாட்டின் டி.ஜி.டபுள்யு.ஜி என்ற நெல் ரகத்தையும் இணைத்து பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள ‘சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தில் ( ஐ.ஆர்.ஆர்.ஐ) ஐ.ஆர் 8 என்ற  நெல் ரகம் உருவாக்கப்பட்டது.

Image

அது மழைக்குத் தாக்குப் பிடிப்பதாகவும் சுமார் 10 மடங்கு கூடுதல் மகசூல் தருவதாகவும் இருந்தது. அதை இந்தியாவில் பயிரிட ஊக்குவித்ததோடு அதே அறிவியல் அடிப்படையைப் பயன்படுத்தி புதிய வகை பாசுமதி நெல் ரகம் ஒன்றை உருவாக்க அவர் நடவடிக்கை எடுத்தார். புதிய நெல் ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதால்  நம்முடைய உணவு உற்பத்தி பல மடங்கு அதிகரித்தது மட்டுமின்றி விவசாயிகளும் கூடுதல் வருமானம் பெற்றனர். இதற்கு அடித்தளமிட்டவர் எம் எஸ் சுவாமிநாதன்.  அதனால்தான் அவர் பசுமைப் புரட்சியின் தந்தை எனப் போற்றப்படுகிறார்.

எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு மரியாதை செலுத்தும் இந்த நேரத்தில் மரபு வேளாண்மை என்ற பெயரில் முன்வைக்கப்படும் கருத்துகளைப் பற்றி நாம் விவாதிப்பது அவசியம். மரபான நெல் ரகங்களைப் பயிரிட்டு அந்த அரிசியை சாப்பிடுவதே எல்லாவிதமான நோய்களுக்கும் மருந்து என்பது போன்ற ஒரு கருத்து அண்மைக் காலமாகப் பரப்பப்படுகிறது. இயற்கை வேளாண்மை முறைப்படி மரபான இந்த நெல் ரகங்கள் பயிரிடப்பட்ட காலத்தில்தான் இந்தியாவில் அடிக்கடி பஞ்சம் ஏற்பட்டு லட்சக் கணக்கானோர் உயிரிழந்தனர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

பிரிட்டிஷ் ஆட்சியின்போது 1770 ஆம் ஆண்டு முதல் 1943 வரை பல்வேறு ஆண்டுகளில் ஏற்பட்ட பஞ்சங்கள் ஒவ்வொன்றிலும் 5 லட்சம் முதல் 1 கோடி பேர் வரை உயிரிழந்துள்ளனர். அதற்கு முன் ஏற்பட்ட பஞ்சங்கள் ஆவணப்படுத்தப்படவில்லை.

எனவே அவற்றில் இறந்தவர்களின் எண்ணிக்கை நமக்குத் தெரியவில்லை. 1960 களில் கூட பஞ்சம் வந்து நாம்  உணவுப் பொருளுக்காக அமெரிக்காவிடம் கையேந்தி நின்றோம். அறிவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் புதிய கோதுமை, நெல் ரகங்கள் அறிமுகம் செய்யப்பட்டதாலும் டிராக்டர், ஆழ்துளைக் கிணறு, உரம் முதலானவற்றின் பயன்பாடு காரணமாகவும்தான் இந்த அவலநிலைக்கு முடிவு கட்டப்பட்டது. 

இதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். உணவு உற்பத்தியில் இந்தியா இப்போது தன்னிறைவு பெற்றாலும் சமையல் எண்ணெய் உற்பத்தி போதுமான அளவில் இல்லை. அதனால், சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சமையல் எண்ணெயைக் கடந்த ஆண்டு இந்தியா இறக்குமதி செய்து இருக்கிறது. இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு மரபணு மாற்ற கடுகு உற்பத்தி அவசியம் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர்.

ஆனால் மரபணு மாற்ற விதைகள் சுற்றுச்சூழலுக்கும் மக்களின் ஆரோக்கியத்துக்கும் கேடு விளைவிக்கும் என்று சூழலியல்  செயல்பாட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். 

மரபணு மாற்றக் கடுகு விதையை உருவாக்கியுள்ள விஞ்ஞானி தீபக் பெண்டால் : “ களைக்கொல்லிகள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் பூஞ்சைக் கொல்லிகள் போன்ற அனைத்து மருந்துகளும் பொதுவாக தீங்கு விளைவிப்பவைதான். ஆனால் பரிந்துரைக்கப்பட்ட அளவுகளில் உபயோகித்தால் அவை பாதுகாப்பானவை என நிரூபிக்கப்பட்டுள்ளன. மரபணு மாற்ற கலப்பினக் கடுகு வகையான DMH-11 வணிகப் பயன்பாட்டுக்காக இன்னும் வெளியிடப்படவில்லை.

இதைப் பயிரிடும்போது களைக்கொல்லியான குளுஃபோசினேட்டினை விவசாயிகளின் வயல்களில் பயன்படுத்தத் தேவையில்லை. அது அனுமதிக்கப்படவும் இல்லை. களைக்கொல்லியின் பயன்பாடு இன்றியமையாத கலப்பின விதை உற்பத்தி நிலங்களில் மட்டும்தான் அனுமதிக்கப்படுகிறது. மரபணு மாற்ற வகை அல்லாத விதைகளைப் போலவே, DMH-11ஐ வளர்ப்பதற்கும் அதே நடைமுறைகளை விவசாயிகள் பின்பற்றலாம்.

இதைப் பயன்படுத்தினால் நிலத்தில் உள்ள கிருமிகள் மாசுபடுவதாகவும், விவசாயிகள் விதையை வைத்துக்கொள்ள முடியாது என்றும் தவறான அச்சங்கள் பரப்பப்படுகின்றன” எனக் கூறுகிறார்.

Image எம்.எஸ்.சுவாமிநாதனும் அவரது மாணவர் கேசவன் என்பவரும் எழுதிய மூன்று கட்டுரைகள் மரபணு மாற்ற விதைகளின் பயன்பாடு குறித்து எதிர்மறையான கருத்துகளை முன்வைத்தன. பி.டி. கத்தரிக்காய் பயிரிடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கும்கூட அவர்தான் காரணம் என்று சொல்கிறார்கள். அந்தக் கட்டுரைகள் விஞ்ஞானி தீபக் பெண்டால் உட்பட பலராலும் விமர்சிக்கப்பட்டது.

அப்போது பதிலளித்த எம்.எஸ்.சுவாமிநாதன், “ விஞ்ஞானிகள் புதிய தொழில்நுட்பங்களைப் பற்றி விமர்சன ரீதியாக சிந்திக்க வேண்டும்.  அவற்றின் பயன்பாடு சிறு விவசாயிகள் போன்ற பயனர்களை எவ்வாறு பாதிக்கும் எனப் பார்க்கவேண்டும். எனது கருத்துக்களில் நான் தெளிவாக இருக்கிறேன். ஒரு புதிய மரபணு கலவையைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், நீங்கள் அதைப் பயன்படுத்த வேண்டும்,

ஆனால், அடிப்படையான விஷயம் விவசாயிகளின் நலன் மற்றும் நுகர்வோரின் நலன் என்பதுதான். தொழில்நுட்பத்தை மக்கள் வழிபடக்கூடாது, மாறாக தொழில்நுட்பம் எந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பதையும், அது எதற்காக உருவாக்கப்பட்டதோ அந்தக் காரணத்தையும் மதிக்கவேண்டும்.”எனத் தெரிவித்தார்.

Image “வறட்சி அல்லது அதிக வெப்பத்தை எதிர்க்கும் மரபணு மாற்ற பயிர்களை உருவாக்குவது காலநிலை மாற்றம் போன்ற அச்சுறுத்தல்களை சமாளிக்க பயனுள்ளதாக இருக்கும். ஆனால் பூச்சிகள் மற்றும் பூஞ்சைகளை எதிர்ப்பதற்கான மரபணு மாற்ற விதைகள் நீண்ட காலத்திற்குப் பயன்படாதவையாக இருக்கலாம், குறிப்பாக பூச்சிகளில் எதிர்ப்பு சக்தி உருவாகும்போது அந்தப் பயிர்கள் பூச்சிகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளும் திறனை இழக்கக்கூடும்” என அவர் எச்சரித்தார்.

மரபணு மாற்ற பருத்தியை அதற்கு உதாரணமாக அவர் சுட்டிக் காட்டினார். ஆனால், எம்.எஸ்.சுவாமிநாதனின் கருத்துகளை முற்றாக மறுத்து ஏராளமான ஆதாரங்களோடு  விஞ்ஞானி தீபக் பெண்டால் கட்டுரை ஒன்றை வெளியிட்டார் ( When Scientists turn against science: Exceptionally flawed analysis of plant breeding technologies, Current Sciences, Volume 117, No 6, 25 september 2019).  “1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, அறிவியல்மற்றும்  தொழில் நுட்பத்தை மிகவும் முறையாகவும், தொழில்மயத்துக்கேற்பவும் ஏற்றுக்கொண்ட கிழக்கு ஆசியாவின் பல நாடுகள், வறுமையின் பிடியிலிருந்து விரைவாக வெளியேறின, அதன் விளைவாக, அவற்றின் மக்கள்தொகை நிலைப்படுத்தப்பட்டது.

அந்த வேகத்தில் நம்மால் நகர முடியவில்லை. இந்திய மக்களில் பெரும் பகுதியினர் இன்னும் வறுமைப் பொறியில் சிக்கித் தவிக்கின்றனர். ஊட்டச்சத்து மற்றும் எடுத்துக்கொள்ளப்படும் கலோரி அளவில் ஒட்டுமொத்த முன்னேற்றம் இருந்தபோதிலும், பசி இன்னும் நம் மக்களில் பெரும் பகுதியினரைத் துரத்துகிறது. ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களின் சதவீதம் குறைந்து, குழந்தை இறப்பு விகிதமும் குறைந்துள்ளது; ஆனால் நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. ” என அக்கட்டுரையில் கவலை தெரிவித்துள்ளார் தீபக் பெண்டால்.

Agronomist MS Swaminathan Green Revolution

வட இந்தியாவில் தொடர்ச்சியான கோதுமை-அரிசி சாகுபடி சுழற்சி மற்றும் தென் இந்தியாவில்  பல நெல் பயிர்கள் நிலத்தடி நீர் ஆதாரங்களே இல்லாமல் ஆக்கியுள்ளன. நிலையான விவசாயத்திற்கான இரண்டு அடிப்படை நடைமுறைகளான – பாதுகாப்பான உழவு மற்றும் பயிர் சுழற்சி ஆகியவற்றில் எந்த கவனமும் செலுத்தப்படவில்லை. எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள் மற்றும் மானவாரி தானிய பயிர்களின் விளைச்சல் ஹெக்டேருக்கு 1 டன் என்ற அளவில் தேங்கி நிற்கிறது. பல பயிர்கள் பூச்சிகள் மற்றும் நோய்க்கிருமிகளால் மிகவும் பாதிக்கப்படக் கூடியவையாக உள்ளன.

இந்நிலையில் அதிக மகசூல் கொண்ட, ஆனால் மிகக் குறைந்த நீர்த்தேவை கொண்ட நெற்பயிரை உருவாக்க வேண்டும், வெப்ப அழுத்தத்திலும் அதிக மகசூல் தரும் கோதுமை வகைகள் மற்றும் வெள்ளத்தைத் தாங்கும் மக்காச்சோளத்தை வளர்ப்பதற்கு அறிவியல் தொழில்நுட்பம் தேவைப்படுகிறது. இத்தகைய சவால்களை எதிர்கொள்ள, மரபணு மாற்றத் தொழில்நுட்பங்கள் உட்பட அனைத்து பொருத்தமான தொழில்நுட்பங்களையும் பயன்படுத்த வேண்டும். இதற்கு அரசாங்கம் அதிக அளவில் ஆராய்ச்சிக்கு ( R&D ) நிதி ஒதுக்கவேண்டும் என்பதையும் தீபக் பெண்டால் சுட்டிக்காட்டியுள்ளார். 

விவசாய ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் சிறந்து விளங்குமாறு விஞ்ஞான சமூகத்தை அறிவுறுத்துவதற்குப் பதிலாக; விவசாய ஆராய்ச்சிக்கு நிதி உதவியை அதிகரிக்குமாறு அரசாங்கத்தைக் கோருவதற்குப் பதிலாக, கேசவனும் எம்.எஸ்.சுவாமிநாதனும் ‘இயற்கை’ ‘மரபணு மாசுபாடு’ ‘இயற்கை உணவு’ மற்றும் ‘ஆன்மீக விவசாயம்’ என்ற தெளிவற்ற கருத்துகளுக்கு விலைபோன சித்தாந்தவாதிகளின் பின்னால் அலைகிறார்கள்” என்று வேதனையோடு விஞ்ஞானி தீபக் பெண்டால் எழுதியிருக்கிறார். 

Agronomist MS Swaminathan Green Revolution  

எம்.எஸ்.சுவாமிநாதன் நிறுவிய ஆராய்ச்சி மையம் சென்னை தரமணியில்தான் உள்ளது. தற்போது வேளாண் துறைக்கென தனி பட்ஜெட்டை அறிவித்துள்ள தமிழ்நாடு அரசு இயற்கை வேளாண்மை ( அங்கக வேளாண்மை) கொள்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

எம்.எஸ்.சுவாமிநாதன் எழுதிய கட்டுரைகள் குறித்தும் அவற்றுக்கு வந்த எதிர்வினைகள் குறித்தும் அவர் உயிரோடு இருந்தபோது ஏற்படாத அக்கறை அவருக்கு அஞ்சலி செலுத்தப்படும் இன்றைய சூழலிலாவது உருவானால் நல்லது. தீபக் பெண்டால் முன்வைத்துள்ள ‘ ஆன்மீக வேளாண்மை’ என்னும் ஆபத்து குறித்த அறிவார்ந்த விவாதம் அதற்கான துவக்கமாக இருக்கக்கூடும். 

கட்டுரையாளர் குறிப்பு

Agronomist MS Swaminathan Green Revolution by Ravikumar MP

ரவிக்குமார் – நாடாளுமன்ற உறுப்பினர் (விழுப்புரம் தொகுதி), எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மதுரைக்கு மாற்றம்!

3000 கன அடி நீர் திறக்க உத்தரவு : சட்டவல்லுநர்களுடன் ஆலோசிக்கும் சித்தராமையா

காவிரி பிரச்சினை : நடிகர் சங்கம் போராடாதது ஏன்?: பிரேமலதா கேள்வி!

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel

Comments are closed.