துணை சபாநாயகர் ரவிசங்கர் சர்ச்சை: தாக்குதல் புகார் முதல் தவெக விசாரணைக் குழு வரை- நடந்தது என்ன?

By Mathi

|

Published on 10 Nov 2026, 3:54 AM

Deputy speaker Ravi Shankar

தமிழக சட்டசபை துணை சபாநாயகரும் துறையூர் தவெக எம்.எல்.ஏ.வுமான ரவிசங்கர், அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் குமாரைத் தாக்கியதாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் பெரும் சர்ச்சையாகியுள்ளன.

குடிநீர் பிரச்சினைக்காக சென்றவருக்கு நேர்ந்தது என்ன?

திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த கார்த்திக் குமார், தனது பகுதியில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாடு மற்றும் குப்பைகள் அகற்றப்படாதது குறித்து தொகுதி எம்.எல்.ஏ. ரவிசங்கரிடம் முறையிடச் சென்றதாகக் கூறினார். அப்போது ரவிசங்கர் தன்னைத் தாக்கியதாகவும், மிரட்டியதாகவும் கார்த்திக் குமார் குற்றம்சாட்டினார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து சர்ச்சை உருவானது.

ADVERTISEMENT

ரவிசங்கருடன் அமர்ந்து வெளியிட்ட மறுப்பு வீடியோ

இந்த தாக்குதல் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ரவிசங்கருடன் அமர்ந்தபடி கார்த்திக் குமார் பேசிய மற்றொரு வீடியோ வெளியானது. அதில் தன்னை யாரும் தாக்கவில்லை என்றும், கூட்ட நெரிசலில் தள்ளுமுள்ளு மட்டுமே ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதனால் தாக்குதல் குற்றச்சாட்டு தொடர்பாகக் குழப்பம் ஏற்பட்டது. ஆனால், அந்த மறுப்பு வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே கார்த்திக் குமார் மீண்டும் புதிய குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

ADVERTISEMENT

‘6, 7 டேக் எடுத்தார்கள்; மிரட்டிப் பேச வைத்தார்கள்’

தனது புதிய வீடியோவில், ரவிசங்கருடன் அமர்ந்து பேசிய மறுப்பு வீடியோவைத் தாம் விருப்பப்பட்டு வெளியிடவில்லை என்று கார்த்திக் குமார் தெரிவித்தார். “6, 7 டேக் எடுத்தாங்க. என் மனசார கொடுக்கல. உயிரோட போகணும்னா நான் சொல்ற மாதிரி பேசுன்னு வலுக்கட்டாயமா மிரட்டி வீடியோ பதிவு பண்ணாங்க. இல்லைனா என் குடும்பத்தைக் கொன்னுடுவேன்னு சொன்னாரு” என்று அவர் குற்றம்சாட்டினார். மேலும், “நான் யார் தெரியுமா? புஸ்ஸி ஆனந்த்கிட்ட கேளு. அவரே நான் சொன்னா செய்வாரு” என்று ரவிசங்கர் தன்னை மிரட்டியதாகவும் கார்த்திக் குமார் கூறியிருந்தார்.

ADVERTISEMENT

எனக்கும் என் குடும்பத்துக்கும் பாதுகாப்பு வேண்டும்

மற்றொரு பேட்டியில், தனக்கும் தனது குடும்பத்துக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், துணை சபாநாயகர் ரவிசங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கார்த்திக் குமார் வலியுறுத்தியுள்ளார். கார்த்திக் குமார் மதுபோதையில் இருந்ததாகக் காவல் ஆய்வாளர் கூறியிருப்பது குறித்தும் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் காவல்துறையினரின் செயல்பாடுகள் குறித்தும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

திருச்சி அரசு மருத்துவமனையில் படுக்கை ஒதுக்கப்படவில்லையா?

தாக்குதலுக்கு உள்ளானதாகக் கூறப்படும் கார்த்திக் குமார், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னரும் அவருக்குப் படுக்கை ஒதுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் சமூக வலைதளங்களில் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்குப் பின்னால் அமைச்சர் ரமேஷ் மற்றும் ரவிசங்கரின் அழுத்தம் இருக்கிறதா என்று நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் கேள்வி எழுப்பி வீடியோ வெளியிட்டிருந்தார். இதற்கிடையே, கார்த்திக் குமாருக்கு மருத்துவமனையில் படுக்கை ஒதுக்கப்பட்டதாகவும், அவர் சிகிச்சை பெறும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

ரவிசங்கர் மீது விசாரணை நடத்த தவெக முடிவு?

ரவிசங்கர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கத் தவெக ஒழுங்கு நடவடிக்கைக் குழு நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேநேரத்தில் தவெகவின் வடக்கு மண்டல ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினராகவும் துணை சபாநாயகர் ரவி சங்கர் இருக்கிறார். இதனால், ஒழுங்கு நடவடிக்கைக் குழுவில் ஏற்கெனவே இடம்பெற்றுள்ள ரவிசங்கர் மீதான புகாரை யார் விசாரிப்பார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

வைரலாகும் ‘பழைய போட்டோ’

ரவிசங்கர் துணை சபாநாயகராக அறிவிக்கப்பட்டபோது, அவர் மதுபான பாரில் அமர்ந்து மது அருந்துவது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது கார்த்திக் குமாரைத் தாக்கியதாக ரவிசங்கர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அந்தப் பழைய புகைப்படம் மீண்டும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel