தமிழ்நாட்டுக்கு 3,000 கன அடி நீரை திறந்துவிட வேண்டும் என்று கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது.
டெல்டாவில் போதிய நீர் இன்றி பயிர்கள் வாடி வரும் நிலையில், காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு 12,500 கன அடி நீர் திறந்துவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால் கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிடவில்லை.
இந்நிலையில், காவிரி ஒழுங்காற்று குழு 5,000 கன அடி நீரை திறந்து விட வேண்டும் என்று கூறியும் அதனை கர்நாடக அரசு ஏற்கவில்லை.
உச்ச நீதிமன்றத்துக்கு சென்ற பிறகு தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட்டது. ஆனாலும் 5,000 கன அடி நீரை திறந்துவிட வில்லை.
இந்நிலையில், கடந்த 27ஆம் தேதி மாநிலம் முழுவதும் கன்னட அமைப்புகள் பந்த் நடத்தின. அன்றைய தினம் மீண்டும் காவிரி ஒழுங்காற்று குழு கூடியது. அப்போது தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டிய நீரில் 2000 கன அடியை குறைத்து, 3000 கன அடி நீரை திறந்து விட வேண்டும் என்று பரிந்துரைத்தது.
இதனை ஏற்காமல் கர்நாடக அரசு உச்ச நீதிமன்றம் செல்ல திட்டமிட்டிருக்கிறது.
இந்தசூழலில் இன்று காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் அவசரமாக கூடியது. இதில் தமிழ்நாடு – கர்நாடக அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
தமிழ்நாட்டு அரசு சார்பில் நீர்வளத்துறை செயலாளர்(பொறுப்பு) மணிவாசன், காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் என்.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டனர்,
கூட்டத்தில், “காவிரி நீரை திறந்து விட முடியாது. எங்கள் மாநிலத்துக்கே போதிய நீர் இல்லாததால் தண்ணீரை திறந்துவிட முடியாது” என்று கர்நாடக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இதற்கு தமிழ்நாட்டு அதிகாரிகள் காவிரி நீர் இல்லாததால் டெல்டா விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். உச்ச நீதிமன்ற உத்தரவுபடி நீரை திறந்துவிட வேண்டும். 12,500 கன அடி நீரை திறந்துவிட்டால் மட்டுமே நெற் பயிர்களை காப்பாற்ற முடியும் என்று தெரிவித்திருக்கின்றனர்.
ஆனால் பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் நிலையில் தண்ணீரை திறந்துவிட முடியாது என்று கர்நாடக அரசு அதிகாரிகள் மறுப்புத் தெரிவித்திருக்கின்றனர்.
இதனால் இரு தரப்பு அதிகாரிகளுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.
இந்தசூழலில், கூட்டத்தின் முடிவில் தமிழ்நாட்டுக்கு 3000 கன அடி நீரை அக்டோபர் 15ஆம் தேதி வரை திறக்க வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்று குழு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்தநிலையில் காவிரி ஒழுங்காற்று குழுவில் தங்கள் தரப்பு உண்மைகளை சமர்ப்பித்துள்ளதாகவும், காவிரி விவகாரம் குறித்து ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகளுடன் சட்ட வல்லுநர்களுடனும் இன்று ஆலோசனை நடத்த இருப்பதாகவும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடக்கூடாது என்று பந்த் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
காவிரி பிரச்சினை : நடிகர் சங்கம் போராடாதது ஏன்?: பிரேமலதா கேள்வி!
விஷாலின் ஊழல் புகார் : மத்திய அரசு நடவடிக்கை!