ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். கத்தார் பிரதமருடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு டிரம்ப் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் நடைபெற்று வரும் நிலையில், கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து தனது Truth Social சமூக வலைதளப் பக்கத்தில் டிரம்ப் கூறியுள்ளதாவது: கத்தார் பிரதமருடனான பேச்சுவார்த்தை சிறப்பாக நடைபெற்றது. ஈரான் தொடர்பாகப் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தோம்.
கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட நாடுகள் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று விரும்புகின்றன. அதாவது, ஈரான் மீது அமெரிக்கா மேற்கொண்டுள்ள கடற்படை முற்றுகையும், புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ‘ஆபரேஷன் அயர்ன் கேட்’ (Operation Iron Gate) நடவடிக்கையும் தொடர வேண்டும் என்பதே அந்த நாடுகளின் விருப்பம். இதன் மூலம் ஈரானுக்கு எதிரான கடல்வழி மற்றும் தரைவழி நடவடிக்கைகள் தொடரும்.

ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்பதில் அனைவரும் உடன்பட்டுள்ளோம். இதில் எந்தச் சமரசத்துக்கும் இடமில்லை. மத்திய கிழக்கில் நிலைமையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், அமெரிக்கா உடனடியாக ராணுவ நடவடிக்கை எடுக்க முழுத் தயார்நிலையில் உள்ளது.
அமெரிக்க ராணுவம் “locked and loaded” நிலையில் இருக்கிறது. அதாவது, எப்போது வேண்டுமானாலும் நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறது. ஆனால் தற்போதைய சூழலில் அத்தகைய நடவடிக்கை தேவைப்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே தெரிகிறது.
ஈரானால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் மற்றும் அச்சுறுத்தல்களில் இருந்து இஸ்ரேலும் ஒட்டுமொத்த மத்திய கிழக்கு பிராந்தியமும் பாதுகாக்கப்பட்டுள்ளன. இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் சாதகமான முன்னேற்றம் ஏற்பட்டுவருகிறது. அமெரிக்காவின் நலன்கள் எல்லா நேரங்களிலும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வோம். இந்த ராணுவ நடவடிக்கை முடிவடையும்போது அமெரிக்க மக்களும் உலக மக்களும் முன்பைவிட மிகவும் பாதுகாப்பாக இருப்பார்கள். இவ்வாறு டிரம்ப் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே கத்தாரும் சவுதி அரேபியாவும் ஈரான் போரை அமைதியான முறையில் முடிக்க விரும்புவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் டிரம்ப் தெரிவித்துள்ளார்.









