இந்திய அரசு அதிகாரிகளுக்கு கௌதம் அதானி சுமார் 250 மில்லியன் அமெரிக்க டாலர்கள் லஞ்சம் கொடுக்க திட்டம் வகுத்தார் என்று அமெரிக்காவின் கிழக்கு நியூயார்க் நீதிமன்றம் குற்றம் சாட்டியதை அடுத்து அமெரிக்காவில் கடன் பத்திரங்கள் மூலம் திரட்ட இருந்த நிதி திட்டத்தை அதானி கிரீன் எனர்ஜி குழுமம் தள்ளி வைத்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர் கௌதம் அதானி. துறைமுகம், விமான நிலையம், மின்சார உற்பத்தி எனப் பல துறைகளில் அவரது குழுமம் முதலீடு செய்துள்ளது.
இந்நிலையில், “அதானி க்ரீன் எனர்ஜி லிமிடெட் மற்றும் அசூர் குளோபல் பவர் லிமிடெட் என்ற நிறுவனமும் 12 ஜிகாவாட் சூரிய ஒளி மின்சக்தியை இந்திய அரசுக்கு விநியோகிப்பதற்காக சுமார் 250 மில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.2,100 கோடி) இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுப்பதற்காகத் திட்டம் வகுத்தார்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் அவரது நிறுவனம் 20 வருட காலகட்டத்தில் ஏறத்தாழ 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.8,400 கோடி) லாபம் ஈட்ட இருந்தது.
ஆனால், இதை அவரது சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டத்தில் முதலீடு செய்திருக்கும் அமெரிக்க முதலீட்டாளர்களிடமிருந்து மறைத்துவிட்டார்” என்று அமெரிக்க அரசு சார்பாக அமெரிக்கா அட்டார்னி பிரியன் பீஸ் கிழக்கு நியூயார்க் நீதிமன்றத்தில் கிரிமனல் வழக்குத் தொடுத்திருந்தார்.
இது மட்டுமல்லாமல் அமெரிக்காவின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையமும் அதானி க்ரீன் எனர்ஜி நிறுவனம் மீது இதே நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடுத்திருந்தது.
இந்நிலையில்தான், நியூயார்க் நீதிமன்றம் கௌதம் அதானி அவரது உறவினரான சாகர் அதானி, வினீத் ஜெய்ன் உள்ளிட்ட 8 பேர் மீது குற்ற வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும், அந்த நீதிமன்றம் கௌதம் அதானி மற்றும் சாகர் அதானிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில்தான் அமெரிக்கா பங்குச்சந்தையில் கடன் பத்திரங்கள் மூலம் 600 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ.5,040 கோடி) திரட்ட வைத்திருந்த திட்டத்தைத் தள்ளி வைத்துள்ளதாக அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனம் இன்று (நவம்பர் 21) அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில், இந்தியப் பங்குச் சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகளின் விலை ஏறத்தாழ 20 சதவீதம் வீழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி இந்த மாநிலத்துக்காரரா?
இதுக்கு என்டே கிடையாதா? – மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!
அரசு அதிகாரிகளுக்கு ரூ.2,110 கோடி லஞ்சம் … அதானி மீது அமெரிக்க நீதிமன்றம் குற்றச்சாட்டு!
Comments are closed.