திராவிட பேரழகி என வர்ணிக்கப்பட்ட நடிகை சில்க் ஸ்மிதாவின் 66வது பிறந்த நாளை ஈரோட்டில் ரசிகர் ஒருவர் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
ஈரோடு அகில்மேடு வீதியைச் சேர்ந்தவர் குமார். இவர் நடிகை நடிகை சில்க் ஸ்மிதாவின் தீவிர ரசிகர் . இந்நிலையில் இன்று சில்க் ஸ்மிதாவின் 66 ஆவது பிறந்த நாளை குமார் கேக் வெட்டி கொண்டாடி உள்ளார். இவர் ஆண்டுதோறும் சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளை தொடர்ந்து கொண்டாடி வருகின்றார்.
பெண்களுக்கு சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கியதோடு அன்னதானமும் அளித்தார். இந்த நிகழ்ச்சியில் சில்க் ஸ்மிதாவின் ரசிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டம் ஏலூரு கிராமத்தில் பிறந்தவர் சில்க் ஸ்மிதா. தமிழை பூர்வீகமாக கொண்ட அவரது இயற்பெயர் விஜயலெட்சுமி.
வறுமையால் 4ம் வகுப்போடு படிப்பை நிறுத்திய விஜயலட்சுமிக்கு சிறு வயதில் திருமணம் நடந்தது. அந்த வாழ்க்கை சரியாக அமையவில்லை. இந்நிலையில் சென்னை வந்து சினிமா வாய்ப்புகளை தேட ஆரம்பித்தார். வினு சக்கரவர்த்தியின் வண்டிச்சக்கரம் படத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஒரு கட்டத்தில் சில்க் நடிப்பிற்காகவே படங்கள் வெற்றிகரமாக ஓடியது. ஆண்கள் கோலோய்ச்சிய தமிழ் சினிமாவில் நாயகர்களுக்கு இணையாக சம்பளம் பெற்றார்.
தமிழ் திரை உலகில் தனது நடிப்பாலும், நடனத்தாலும் ரசிகர்களை கட்டி போட்ட நடிகைகளில் ஒருவராக திகழ்ந்த சில்க் ஸ்மிதா தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட 450க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
ஒரு காலத்தில் சில்க் ஸ்மிதாவின் கால்ஷீட்டுக்காகவே படங்கள் தள்ளி வைக்கப்பட்டன. மிகக் குறுகிய காலகட்டத்தில் திரை உலகில் வெற்றிகரமாக வலம் வந்த சில்க் ஸ்மிதா தனது தனிப்பட்ட வாழ்வில் நடந்த பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியாத விரக்தியில் கடந்த 1996ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் சில்க் ஸ்மிதா மறைந்து 28 ஆண்டுகள் கடந்து அவரது பிறந்த நாளை ரசிகர் ஒருவர் கேக் வெட்டி கொண்டாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
