வைஃபை ஆன் செய்ததும், “குத்துங்கடா குத்து.. என்கூட சேர்ந்து குத்து”ன்னு ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னங்க ப்ரோ.. ரொம்ப பரபரப்பா இருக்கீங்க போல?
எலக்ஷன் முடிஞ்ச பிறகுதான் நிமிஷத்துக்கு நிமிஷம் பரபரப்புன்னு நினைச்சா இன்னும் அந்த ட்விஸ்டுகள் ஓயவே இல்லையே ப்ரோ..
இப்ப என்னங்க ப்ரோ ட்விஸ்ட்டுகள்?
ம்ம்.. இன்னைக்கு காலையில காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி, “தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் (TVK+INC+VCK+IUML+CPI+CPM) கூட்டணியின் முதல் MP வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை பெருமையாகவும் பெரும் பொறுப்பாகவும் கருதுகிறேன்”ன்னு சோசியல் மீடியாவில பதிவு போட்டிருந்தார்.

ஆனா சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம், “தவெக- காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பது குறித்தோ, ராஜ்யசபா வேட்பாளருக்கு ஆதரவு கேட்டோ யாரும் எங்களை அணுகவோ, ஆலோசிக்கவோ இல்லை”ன்னு காட்டமாக சொல்லிட்டார்..
சிபிஐ கட்சியின் முன்னாள் தலைவர் முத்தரசன், “நாங்க இன்னமும் திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்.. தவெக கூட்டணியில சிபிஐ இல்லை”ன்னு அறிவிச்சார்.
சிஎம் விஜய் கேபினட்டுல இருக்கக் கூடிய விசிகவின் தலைவர் திருமாவளவனும், “பிரவீன் சக்கரவர்த்தி கூட்டணி பெயரை அறிவிச்சது அதிகாரப்பூர்வமானது இல்லை”ன்னும் அடுத்தடுத்து காங்கிரஸுக்கு குட்டு விழுந்து கிட்டே இருக்குதுங்க ப்ரோ..

எல்லாமே தவெக தலைமையில ஒன்னாதானே இருக்காங்க ப்ரோ.. ஏன் இந்த திடீர் ட்விஸ்ட்?
இதை பத்தி நாம கம்யூனிஸ்ட் தலைவர்கள்கிட்ட பேசுனப்ப, “தவெக ஆட்சி அமைக்கதான் ஆதரவு கொடுத்திருக்கிறோம்னு ஏற்கனவே சொல்லிட்டோம்.. அமைச்சரவையில நாங்க சேரலை.. இந்தியா கூட்டணியில கூட எல்லா ஜனநாயக சக்திகளும் இருக்கிறதாலதான் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இருக்கு.. இப்ப ”காங்கிரஸ் இருக்கிறதால இந்தியா கூட்டணி கூட்டத்துக்கு வரலை”ன்னு திமுக தலைவர் ஸ்டாலின் சொல்லிட்டாரு.. எங்களுக்கும் காங்கிரஸ் இருக்கிற கூட்டணியில இடம் பெறுவது அப்படிங்கிறதுல சிக்கல் இருக்கு.. அதே மாதிரி காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா வேட்பாளரை ஆதரிக்கிறதா? இல்லையா? என்பதை பத்தி கூட விவாதித்துதான் சொல்வோம்”ன்னு பொடி வெச்சு சொல்றாங்க..

அதோட “என்னதான் சிஎம் விஜய் கேபினட்டில் விசிக இருந்தாலும் இன்னமும் திருமாவளவன் ஊசலாட்டமாதான் இருக்கிறார்.. இப்ப கூட காங்கிரஸ் கட்சி நிறுத்தி இருக்கிற ராஜ்யசபா வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தியை தோற்கடிக்க, காங்கிரஸ்- தவெக இல்லாத பொதுவேட்பாளரை நிறுத்தலாமே? திமுக- அதிமுக- கம்யூனிஸ்ட் கட்சிகள்- விசிக- முஸ்லிம் லீக் ஆதரிச்சா அந்த பொது வேட்பாளர் ஜெயிச்சருவாரே?ன்னு கூட திருமாவளவன் சிலரிடம் ஆலோசனை செஞ்சாருன்னு எங்களுக்கு தகவல் வந்திருக்கு..
அதே மாதிரி திருமாவும் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீனும் “விஜய் அமைச்சரவையில சேர வேண்டாம்” அப்படின்னு ஸ்டாலின் எங்ககிட்ட அழுத்தமா சொல்லி இருக்கலாமே.. நாங்க சேராமலேயே இருந்திருப்போமே”.. அப்படின்னு சகாக்கள்கிட்ட ஷேர் செஞ்சிருக்காங்க”ன்னும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் நம்மகிட்ட சொல்றாங்க ப்ரோ..
ஓஹோ.. மறுபடியும் முதல்ல இருந்தா?
இன்னும் சில விஷயங்களை சொல்றேன் ப்ரோ.. காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே கூட இன்னமும் ”திமுகவுக்கு துரோகம் செஞ்சுட்டு தவெக பக்கம் தாவுனதை எப்படிங்க நியாயப்படுத்த முடியும்”ன்னு குரல் கேட்டுகிட்டுதான் இருக்குங்க ப்ரோ..
இன்னைக்கு காலையில காயிதே மில்லத் நினைவிடத்துல செல்வப்பெருந்தகைக்கு எதிரா திமுகவினர் கோஷம் போட்டாங்க.. இதுக்காக செல்வப்பெருந்தகை கோபப்படலை.. ஆனா, “திமுகவை விட்டுட்டு திடீர்னு வெளியே வந்ததால கோபம் இருக்கத்தானே செய்யும்”னு ஒரு தினுசா பதில் சொல்லி இருக்கிறார்.

இதுல இன்னொரு விஷயமும் சொல்லனும்.. ஜூன் 18-ந் தேதி செல்வப்பெருந்தகை மகளோட திருமணம் நடக்குது.. இதுக்காக போன மாசம் கடைசியில டெல்லிக்கு போய் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கேவுக்கு பத்திரிகை வெச்சாரு செல்வப் பெருந்தகை..
ராகுல் காந்தியை செல்வப்பெருந்தகை சந்திக்கிறப்ப மகளும்தான் கூட இருந்தாங்க.. செல்வப்பெருந்தகை மகள் பாலிட்டிக்ஸ்ல ஆக்டிவ்வா இருக்கிறாங்க.. செல்வப்பெருந்தகைக்கே பல நேரங்களில்ல ஸ்பீச் ரெடி செய்யறதும் இன்புட்ஸ் கொடுக்கிறதும் கூட அவங்கதான்…
ராகுல் காந்தியை சந்திச்சப்ப, “உங்ககிட்ட சில விஷயங்கள் சொல்லனும்”னு செல்வப்பெருந்தகை மகள் சொல்லி இருக்காங்க..
ராகுலும் சிரிச்சுகிட்டே என்னான்னு கேட்க, எடுத்த எடுப்பிலேயே, “திமுக கூட்டணியைவிட்டு காங்கிரஸ் வெளியே வந்தது தப்பு.. ஸ்டாலினை விட்டுட்டு நீங்க ஏன் வந்தீங்க? இதனால தமிழ்நாட்டுல உங்க இமேஜ் குறைஞ்சு போச்சு”ன்னு முகத்து நேரா சொல்லிட்டாங்க செல்வப்பெருந்தகை மகள்..
அதிர்ச்சியடைஞ்ச செல்வப்பெருந்தகை, மகளை ”பேசாம இருப்பா”ன்னு தடுத்து பார்த்தாரு..
அங்கிட்டு ராகுல் காந்தி சமாளிச்சுகிட்டே, “பேசட்டும் பேசட்டும்”னு சொல்ல செல்வப்பெருந்தகையின் மகள், திமுக கூட்டணியை விட்டு காங்கிரஸ் விலகுனதால தமிழகத்துல இருக்கிற கோபத்தை சீரியசாகவே சொல்லி முடிச்சாரு..
அதுக்கு பிறகு ராகுல் காந்தி, “தமிழ்நாட்டுல காங்கிரஸ் கட்சி அதிகாரத்தை இழந்து 59 வருஷமாச்சு.. எங்க பாட்டி இந்திரா காந்தி மெஜாரிட்டியோட ஆட்சி நடத்துனாங்க.. அவங்க கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில வாய்ப்பு தரலைதான்..
ஆனா டெல்லியில நம்ம கவர்மெண்ட் நடக்குறப்ப திமுகவுக்கு அமைச்சர் பதவிகளை கொடுத்திருக்கிறோம்.. ஆனா ஸ்டாலின் நமக்கு அமைச்சர் பதவியை தரலையே? கூட்டணி ஆட்சிக்கு ஏன் ஸ்டாலின் ஒப்புக்கவில்லை?”ன்னு திருப்பி கேள்வி கேட்டிருக்காரு..
இதுக்கும் செல்வப்பெருந்தகை மகள், “டெல்லியில நம்ம கவர்மெண்ட் ஆட்சி அமைக்க நமக்கு மெஜாரிட்டி இல்லை.. அதனால திமுக மாதிரி கட்சிகளோட ஆதரவு தேவைப்பட்டுச்சு.. அதுக்கு அமைச்சர் பதவி கொடுத்தோம்.. ஆனா ஸ்டாலினுக்கு அப்படி ஒரு சூழ்நிலை வரலைதானே.. அதனால ஆட்சியில எப்படி ஸ்டாலின் பங்கு கொடுப்பாருன்னு நாம எதிர்பார்க்கலாம்?”ன்னு சிரிச்சுகிட்டே ரிப்ளை கொடுக்க ராகுல் சீரியசாகிட்டாராம்.. செல்வப்பெருந்தகையோ அந்த சில நிமிடங்கள் ரொம்பவே தத்தளிச்சுட்டாராம்.

இதே மாதிரிதான் ப்ரோ இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள் நம்மகிட்ட பேசுறப்ப, “எங்க தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன்கிட்ட, “கொஞ்ச நாளைக்கு நீங்க எந்த பேட்டியும் கொடுக்காம இருங்க… நீங்க ஏதாவது சொல்ல அதுவேற மாதிரி ஆகிடுது.. திமுகவுக்கும் நமக்குமான உறவு அண்ணா, கலைஞர் காலத்துல இருந்து இருக்குது.. எதுக்காக நாம திமுகவோட மோதி பகைக்கனும்”னு சொல்லி வெச்சிருக்கிறோம் அப்படிங்க ப்ரோ..
காங்கிரஸ் ராஜ்யசபா வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி சும்மா இருக்கமாட்டாம எம்பி பதவி கிடைக்குதுங்குற ஆர்வ கோளாறுல ஒரு ட்வீட்டை போட அதுவே இன்னைக்கு பெரிய ட்விஸ்ட்டா மாறி புது புது பரபரப்புகளை உருவாக்கிகிட்டு இருக்கு.. தவெக ஆட்சிக்கே ‘உலை’ வெக்கிற வேலையாகூட மாறிடும்போல ப்ரோன்னு டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
