“திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து நீடிக்கிறது. ‘சமூக நீதி முற்போக்கு கூட்டணி’ என்ற புதிய கூட்டணியில் நாங்கள் இடம்பெறவில்லை. தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சிக்கு வெளியிலிருந்து மட்டும்தான் நாங்கள் ஆதரவு அளித்து வருகிறோம். தற்போது வரை எங்களது கூட்டணி நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக வசம் உள்ள ஒரு மாநிலங்களவை சீட், அக்கட்சியின் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்பிருந்தே தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாகப் பேசி வந்த பிரவீன் சக்கரவர்த்திக்கு இந்த எம்பி சீட் வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பிரவீன் சக்கரவர்த்தி இன்று தனது எக்ஸ் பக்கத்தில், ““தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் (TVK+INC+VCK+IUML+CPI+CPM) கூட்டணியின் முதல் MP வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை பெருமையாகவும் பெரும் பொறுப்பாகவும் கருதுகிறேன்” எனப் பதிவிட்டிருந்தார்.
எங்களுக்கும் தவெக-விற்கும் சம்பந்தமில்லை:
இந்நிலையில், தவெக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) தவெகவின் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் கூட்டணியில்என்று அக்கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில், “சமூக நீதி கூட்டணி எனப் பெயரிட்டு உங்களுடைய கட்சியையும் தவெக இணைத்திருக்கிறதே, இதில் உங்களுக்கு உடன்பாடு உள்ளதா?” என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த முத்தரசன், “எங்களுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நாங்கள் அந்த கூட்டணியிலேயே இல்லை. கடந்த சட்டமன்ற தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தவெக கூடுதலான இடங்களை வெற்றி பெற்றது. அப்போது ஆளுநர் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்லி இருக்க வேண்டும். ஆனால் அவர் காலம் தாழ்த்தினார்.
குடியரசுத் தலைவர் ஆட்சி என்ற பெயரில், வேறொரு வழியில் பாஜக ஆட்சியை உள்ளே கொண்டு வர முயற்சிகள் நடந்தது. அதை தடுக்கும் நோக்கத்தில் மட்டும்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்தது. மற்றபடி நாங்கள் கூட்டணியில் இல்லை. இந்த கூட்டணியின் பெயருக்கும் எங்களுக்கும் சம்பந்தம் கிடையாது. நாங்கள் திமுகவின் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில்தான் தொடர்கிறோம்” என்றார்.
மேலும், “ராஜ்யசபா தேர்தல் வரும்போது நாங்கள் இதுபோன்ற ஒரு முடிவை எடுக்கிறோம் என்பது குறித்து தவெக தரப்பில் எங்களை அணுகி எதுவும் சொல்லவில்லை; எங்களுடைய கருத்தையும் கேட்கவில்லை” என்றார்.
