தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணிக்கு பெயர் சூட்டியதால் காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா இடைத் தேர்தல் வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்திக்கு (Praveen Chakravarty) சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஜூன் 18-ந் தேதி நடைபெறும் 1 இடத்துக்கான ராஜ்யசபா இடைத் தேர்தலில் தவெக ஆதரவுடன் காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியிடுகிறார்.
இது குறித்து தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பிரவீன் சக்கரவர்த்தி, “ தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் (TVK+INC+VCK+IUML+CPI+CPM) கூட்டணியின் முதல் MP வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை பெருமையாகவும் பெரும் பொறுப்பாகவும் கருதுகிறேன்
என் மீது நம்பிக்கை வைத்த LoP @RahulGandhi மற்றும் தமிழக CM @TVKVijayHQ-க்கு மனமார்ந்த நன்றி
தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, இந்திய நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் துணிச்சலான, விசுவாசமான மற்றும் நேர்மையான குரலாக ஒலிப்பேன் என்று லட்சக்கணக்கான கூட்டணித் தொண்டர்களுக்கு உறுதியளிக்கிறேன்” என கூறியிருந்தார்.
ஆதரவு கேட்கலையே.. அதிக பிரசங்கி
இது தொடர்பாக பெ.சண்முகம் தமது எக்ஸ் பக்கத்தில், “புதிய கூட்டணியின் சார்பில் தான் மாநிலங்களவை வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், அதில் சிபிஐ(எம்) பெயரையும் குறிப்பிட்டு இருப்பது தவறானது.
கூட்டணி அமைப்பது குறித்தோ, இந்த வேட்பாளருக்கு ஆதரவு கேட்டோ யாரும் எங்களை அணுகவோ, ஆலோசிக்கவோ இல்லை. தவெக ஆட்சி அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதன் அடிப்படையில் ஆதரவு தெரிவித்துள்ளோம் என்பது ஏற்கனவே தெளிவாக கூறப்பட்டுள்ளது.
பிரவீன் சக்கரவர்த்தி அவர்களின் பதிவை “அதிக பிரசங்கித்தனம்” என்று தான் சொல்ல வேண்டும்” என கூறியுள்ளார்.
