எந்தத் தேர்தலிலும் எந்தக் கட்சியையும் இப்படி யாரும் துரத்தியது இல்லை. திமுக, பாஜக, மக்கள் நலக் கூட்டணி என எல்லோர் கண்களும் சாலிகிராமத்தை நோக்கியே இருக்கிறது.
’எல்லாம் முடிந்துவிட்டது!’ என்று வெளிப்படையாகச் சொல்லாமல், நாளுக்கு நாள் பிபி எகிற வைக்கிறார் விஜயகாந்த். தமிழ் சினிமாவில் சொல்வார்களே! முக்கோண காதல் கதை என்று… கிட்டத்தட்ட விஜயகாந்த் கட்சியில் நடப்பதும் அதுதான். இது, முக்கோண அரசியல் கதை. ஒருபக்கம் விஜயகாந்த், மறுபக்கம் அவரது மனைவி பிரேமலதா, இன்னொருபக்கம் மச்சான் சுதீஷ்.
பிஜேபி-யின் தமிழ் மாநிலத் தலைவராக தமிழிசை பொறுப்பேற்கும்வரை, பிரேமலதாவுடன் பிஜேபி-யில் இருந்து பேசிய ஒரே நபர் பொன்.ராதாகிருஷ்ணன் மட்டும்தான். தமிழிசை, தமிழகத் தலைவரானதும் பிரேமலதாவை தேடிப்போய் பேச ஆரம்பித்தார். சாலிகிராமத்தில் தமிழிசை வீடு இருப்பது லோகய்யா நாயுடு காலனியில். விஜயகாந்த் வீடு இருப்பது கண்ணபிரான் காலனியில். ஒரே ஏரியாவில் வீடு என்பது தமிழிசைக்கு வசதியாகப் போனது. அதிகாரபூர்வ சந்திப்பு சிலமுறை நடந்தாலும், அடிக்கடி நடந்தது பெர்சனல் சந்திப்பு. ‘நாம ஒண்ணா இருக்கலாம் அக்கா!’ என்று அடிக்கடி உருகியிருக்கிறார் தமிழிசை. ஆனால், பிஜேபி-யில் தமிழிசைதான் எல்லோருக்கும் அக்கா. பிரேமலதா பிஜேபி-யை விரும்ப முக்கியக் காரணமே தமிழிசைதான். ’2021ல் நீங்கதான் அக்கா முதல்வர் வேட்பாளர்’ என்று சொல்லியே பிரேமலதாவிடம் பேசி வருகிறாராம் தமிழிசை.
‘தேமுதிக-வைப் பொறுத்தவரைக்கும் டிசைடிங் அத்தாரிட்டி பிரேமலதாதான். அதனால அவங்களை சரி பண்ணிட்டா போதும்!’ என்பதுதான் டெல்லிக்கு தமிழிசை கொடுத்த ரிப்போர்ட். ஜவ்டேகர் கடந்த 3ம் தேதி ரகசியமாக சென்னைக்கு வந்தார். பிரேமலதாவை சந்தித்தார். டெல்லியில் இருந்து வெங்கய்யா நாயுடு பிரேமலதாவுடன் தொடர்ந்து போனில் பேசியிருக்கிறார். வெங்கய்யா நாயுடுக்கு தெலுங்கு தெரியும் என்பதால் பிரேமலதாவுடம் தெலுங்கில் பேசுகிறார். ஒருநாளைக்கு இரண்டு முறையாவது பிரேமலதாவுடன் அவர் தொடர்ந்து பேசி வருகிறார். பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் ஜுவல் ஓரம். இவரும் பிரேமலதாவிடன் தொடர்ந்து பேசுபவர்களில் ஒருவர். பிஜேபி-யில் உள்ள முக்கியமானவர்கள் எல்லோரிடமும் பிரேமலதாவின் நம்பரை கொடுத்திருக்கிறார் தமிழிசை.அதில் ஐந்து மத்திய அமைச்சர்கள் அடக்கம். ‘நான் மட்டும் பேசினா நடக்காது. எல்லோரும் சேர்ந்துதான் முயற்சி செய்யவேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார். அதன்பிறகுதான், டெல்லியில் இருந்து பிரேமலதாவுக்கு போன் வந்தபடியே இருக்கிறது.
சுதீஷ்-க்கு இது எதுவும் பிடிக்கவில்லை என்று சொல்கிறார்கள். கட்சிக்காரர்களுடன் அதிக தொடர்பில் இருப்பது சுதீஷ்தான். அவரிடம் பேசும் கட்சி நிர்வாகிகள் எல்லோருமே திமுக-தான் வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். சுதீஷ்-க்கு நெருக்கமான நண்பர்களும், திமுக கூட்டணி அமைந்தால் நிச்சயம் நிறைய இடங்களில் ஜெயிக்கலாம். நீங்கள் மாநிலங்களவை உறுப்பினர் ஆகிடலாம் என்று சொல்ல ஆரம்பித்துள்ளனர். அவரால் இந்த விசயத்தை நேரடியாக மாமாவிடமும் சொல்ல முடியவில்லை. அக்காவிடம் சொல்ல முடியவில்லை. அதற்கு, சுதீஷ் கையில் எடுத்த ஆயுதம்தான் சண்முகபாண்டியன். விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியனிடம் பிஜேபி ஒத்துவராது என்பதை சொல்லியிருக்கிறார் சுதீஷ். என்னோட ஃப்ரண்ட்ஸும் அதேதான் சொல்றாங்க மாமா. என்று சொன்னாராம் சண்முகபாண்டியன். இதை, நீ அப்பாகிட்ட பேசு என்று சுதீஷ் சொல்லியிருக்கிறார்.
இந்தச் சூழ்நிலையில்தான் இன்று காலை ஒரு அதிரடி நிகழ்ந்திருக்கிறது. ‘பிஜேபி-யில் இருந்து நேற்று வெங்கய்யா நாயுடு பேசினாரு. அவரு சொல்றதெல்லாம் சரியா இருக்கும்னு தோணுது’ என்று பிரேமலதா பேசியிருக்கிறார். அதற்கு விஜயகாந்த், ‘கட்சிக்காரங்க எல்லோரும் திமுக-தானே வேணும்னு சொல்றாங்க!’ என்று சொல்லியிருக்கிறார். அதற்கு பிரேமலதா, ‘நீங்க காலம் முழுக்க இப்படியே இருக்கப் போறீங்களா?’ என்று கோபப்பட்டதாகச் சொல்கிறார்கள். அந்த நேரத்தில்தான் விஜயகாந்த்தின் மகன் சண்முகபாண்டியன் உள்ளே வந்திருக்கிறார். ‘என்னோட ஃப்ரண்ட்ஸ் எல்லோர்கிட்டயும் நான் பேசிட்டேன். இந்த தடவை நாம திமுக கூட்டணிக்குப் போனால் மட்டும்தான் சரியா இருக்கும். தப்பு தப்பா யோசிக்காதீங்க. பிஜேபி எல்லாம் ஒத்து வரவே வராது. அப்புறம் நாம ஒரு சீட்கூட ஜெயிக்க முடியாது. மானம் மரியாதை மிஞ்சனும்னா நாம திமுக-வோட கூட்டணி வெச்சுதான் ஆகணும்’ என்று சொல்லியிருக்கிறார் சண்முகபாண்டியன்.
அதற்கு பிரேமலதா, ‘உனக்கு என்னடா அரசியலைப் பத்தி தெரியும்?’ என்று அவரை அடக்கியிருக்கிறார். ஆனால், சண்முகபாண்டியன் அடங்கவில்லை. ‘அம்மா… என்னோட ஃப்ரண்ட்ஸ்கிட்ட யாருகிட்ட கேட்டாலும் திமுக-தான் சரியா இருக்கும்னு சொல்றாங்க. அவங்க ஓட்டு போட்டாதான் நாம ஜெயிக்க முடியும். சும்மா பிஜேபி-ன்னு பேசிட்டு இருக்காதீங்க. அது சரியா வராது!’ என்று சொல்லியிருக்கிறார். ’வெளியில என்ன பேசுறாங்கன்னுதான் சம்மு சொல்றான் இல்ல… அவன் சொன்னா சரியாத்தான் இருக்கும்’ என்று விஜயகாந்த் சொன்னதாகச் சொல்கிறார்கள். மகனைப் பற்றித்தான் அரசியல் திருப்புமுனை மாநாட்டில் பெருமையாகச் சொன்னார் விஜயகாந்த்.
உள்ளாட்சித் தேர்தலில் ஒதுக்கீடு உள்ளிட்ட சில விஷயங்களில் திமுக கூட்டணி இழுத்துக்கொண்டிருக்கும் சூழ்நிலையை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என நினைக்கிறது பிஜேபி. அதற்கு, பகடைக்காயாக பிரேமலதாவை பயன்படுத்துகிறது. பிரேமலதாவும் முடிந்தவரை முயற்சி செய்தபடியே இருக்கிறார். ’தேமுதிக-வை உங்க கூட்டணிக்குள் கொண்டு வாங்க.. அவங்க திமுக பக்கம் போகக்கூடாது’ என அதிமுக-வும் இன்னொருபக்கம் மறைமுகமாக வேலைகளைச் செய்துவருகிறது.
திமுக தரப்பில் இருக்கும் இழுபறிகள் முடிவுக்கு வராததால்தான் விஜயகாந்த்தின் அறிவிப்பு தாமதமாகிறது.
இந்தச் சூழ்நிலையில் திருமண நாளுக்காக குடும்பத்துடன் திருப்பதிக்குச் செல்கிறார் சுதீஷ். திரும்பி வந்ததும் நல்ல அறிவிப்பு வருமென எதிர்பார்க்கிறார்கள் தேமுதிக-வினர்.









