‘அவர் வந்தால் நான் ஒதுங்கிடுறேன்! – ஸ்டாலின்’

By Balaji

|

Published on 12 Apr 2016, 12:00 AM

முரண்பாட்டுக்கு இன்னொரு பெயர் இருக்கும் என்றால் அது அழகிரிதான்!

தி.மு.க எப்பொழுதெல்லாம் ஆளுங்கட்சியாக இருக்கிறதோ அப்பொழுதெல்லாம் தி.மு.வி-ல் பவர்புல்லாக இருப்பார். தி.மு.க ஆட்சியில் இல்லாத நேரங்களில் எல்லாம் இவரே எதிர்க்கட்சியாக மாறி தி.மு.க-வை விமர்சனம் செய்வார். குறை சொல்வார். இதுதான் அழகிரி. இவர்தான் அழகிரி.

ADVERTISEMENT

அரசு வேலைக்குப் போக வேண்டும் என்பதுதான் அழகிரியின் பள்ளிப் பருவத்துக் கனவு. நினைத்தது போலவே சென்னையில் உள்ள பாரத் ஓவர்சீஸ் வங்கியில் வேலைக்குக் சேர்ந்தார். அந்த வேலையில் இருந்த சமயத்தில்தான் காட்பாடி தொகுதியில் போட்டியிட்ட துரைமுருகனுக்கான தேர்தல் வேலை பார்த்தார் அழகிரி. அதான் அவரது முதல் அரசியல் என்ட்ரி. அழகிரி பார்த்த வேலையை பாராட்டி எம்.ஜி.ஆர். அவருக்கு தங்க மோதிரம் பரிசாக கொடுத்திருக்கிறார். அதை அழகிரி இன்று வரை பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறார்.

முரசொலியின் மதுரைப் பதிப்பைக் கவனித்துக் கொள்ள அழகிரியை மதுரைக்கு கிளம்பச் சொன்னார் கருணாநிதி. ‘மதுரைக்கா….’ என்று அரை மனதுடன் வங்கி வேலையை உதறிவிட்டு புறப்பட்ட அழகிரிக்கு இன்று அதுவே அவருக்கு பிடித்த ஊராக மாறிவிட்டது. அழகிரிக்கு அரசியல் ஆசான் முன்னாள் அமைச்சரான வே.தங்கபாண்டியன். அதாவது தங்கம் தென்னரசுவின் அப்பா.

ADVERTISEMENT

மதுரைக்கு வந்த புதிதில் பேருந்து நிலையத்துக்கு அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான கடையை வாடகைக்கு எடுத்து காந்தி சில்க்ஸ் என்ற பெயரில் துணிக்கடையும், வீடியோ கடையும் ஆரம்பித்தார். அதெல்லம் இன்று வரை தொடர்ந்து நடத்தியும் வருகிறார்.

அழகிரி நன்றாகப் பாடக்கூடியவர். அதுவும் எம்.ஜி.ஆருக்காக டி.எம்.எஸ். பாடிய பாடல்கள் என்றால் அவருக்கு உயிர். காரில் போகும் போதெல்லாம் பெரும்பாலும் வாய்விட்டு அழகிரி பாடியபடியே வருவாராம்.

ADVERTISEMENT

இப்படி நல்ல பிள்ளையாக சுற்றிவந்த அழகிரிக்கு என்னதான் பிரச்னை? அவரது ஒரே பிரச்னை ஸ்டாலின் தான்! கருணாநிதிக்கு அடுத்து ஸ்டாலின் தான் என்று எப்போது பேச்சு ஆரம்பித்ததோ அப்போதே அழகிரியின் கோபமும் ஆரம்பித்துவிட்டது. கருணாநிதிக்கு மூத்த பிள்ளை என்பதால் கட்சி தன்னுடைய கட்டுப்பாட்டில் வர வேண்டும் என்பது அழகிரியின் எண்ணம். ஆனால் அதற்கான பக்குவமும் செயல்பாடுகளும் அவரிடம் இல்லை.

கருணாநிதிக்கு எதிர்க்கட்சிகளால் தொல்லை இருக்கிறதோ இல்லையோ மகன் அழகிரியால் எப்போதும் அவருக்கு தலைவலிதான்! ஒரு அப்பாவாகவும் சரி… தி.மு.க தலைவராகவும் சரி… அழகிரிக்கு பலமுறை வாய்ப்புகள் கொடுத்தார். தென்மண்டல அமைப்புச் செயலாளர் பதவி கொடுத்தார். அப்போது தென்மண்டலத்தில் கோஷ்டிகளை வளர்த்தாரே தவிர கட்சியை வளர்க்கவில்லை. ஒரே ஒருமுறை மாவட்டச் செயலாளர்களை கூட்டி கூட்டம் நடத்தியதுடன் அவர் வேலை முடிந்துவிட்டதாக ஓய்ந்துவிட்டார்.

அடுத்து மத்திய கேபினெட் அமைச்சர் பதவி வாங்கிக் கொடுத்தார். டெல்லிக்கு பெரும்பாலும் போகவில்லை. டெல்லிக்குப் போனாலும் நாடாளுமன்றத்துக்குப் போகவில்லை. அதையும் தாண்டி நாடாளுமன்றத்துக்குப் போன சமயங்களிலும் வாய் திறக்கவே இல்லை. ஆங்கிலமும், இந்தியும் தெரியாது என்று அவருக்கு அவரே சமாதானம் சொல்லிக் கொண்டார். அமைச்சராக இருந்தும் அந்த துறை சார்ந்த எந்த நல்லதையும் அழகிரி உருப்படியாக செய்யவில்லை. தன்னைச் சுற்றி மிரட்டும் தோரணையில் சிலரை வைத்துக் கொண்டு வலம் வந்தாலே போதும் என நினைத்திருந்தார் அழகிரி. அதனால்தான் கட்சிக்குள்ளும் ரவுடியிசத்தையும், ரவுடிகளையும் வளர்த்தார். அவர் வளர்த்த கடாக்கள் எதுவும் இப்போது அவரோடு இல்லை.

கடநந்த 2014 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் ஸ்டாலினையும், கருணாநிதியையும் கடுமையான வார்த்தைககளால் விமர்சித்தார் அழகிரி . பொறுத்தது போதும் என பொங்கிய கருணாநிதி, அழகிரியை கட்சியை விட்டே நீக்கினார். மகனே இல்லை என்றும் சொன்னார். கட்சியை விட்டு நீக்கப்படுவது அழகிரிக்கு புதிய விஷயம் இல்லை. ஏற்கெனவே 2000-வது ஆண்டிலும் கட்சியை விட்டு நீக்கப்பட்டிருக்கிறார்.

‘குழந்தைக்கு காது குத்துவது எப்படி வேதனையை தருமோ, அதேபோல் கட்சியில் இருந்து நீக்கியது நெஞ்சில் வேதனையை ஏற்படுத்துகிறது’ என்று கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து அப்போது சொன்னார் அழகிரி. ஆனாலும் அழகிரி அத்துடன் அசரவில்லை. தன்னுடைய ஆதரவாளர்களுடன் மதுரையை வலம் வந்தார். அவருடன் இருவந்தவர்களில் ஒவ்வொருவராக விலல ஆரம்பித்தார்கள். தனித்துவிடப்பட்டு விட்டோமோ என்ற பயம் ஒருபக்கமும், தேர்தலுக்கு நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்ற ஏக்கம் ஒருபக்கமும் அவரை வாட்ட ஆரம்பித்தது. அதனால்தான் மீண்டும் தூதுவிடுகிறார். தூது விட்டுக் கொண்டே இருக்கிறார்.

பிறந்தநாளுக்கு ஆசிர்வாதம் வாங்குவதற்காக மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து நாள் கணக்கில் காத்திருக்கிறார். ‘நானும் அவருக்கு புள்ளைதானே.. சண்டை போட்டா சமாதானம் ஆகவே கூடாதா?’ என்று கருணாநிதிக்கு நெருக்கமானவர்களிடம் கேட்கிறார்.

ஆனால், அண்ணன் அழகிரியை மீண்டும் கட்சிக்குள் எந்தக் காரணத்துக்காகவும் சேர்க்கக் கூடாது என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். ‘அவரை கட்சியில் சேர்க்கிறதா இருந்தால் சொல்லுங்க… நான் ஒதுங்கிடுறேன்!’ என்று ஸ்டாலின் சொன்னதாகச் சொல்கிறார்கள்.

மகன்கள் இருவருக்கும் மத்தியில், என்ன செய்வதென்று தெரியாமல் திக்கி திணறுகிறார் அப்பா கருணாநிதி. குடும்பம்தான் கட்சி என அந்த அப்பா நினைத்ததுதான் இத்தனை சிக்கலுக்கும் காரணம்!

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel