எங்கு கொண்டுபோய் நிறுத்தும் இந்த இணையதள வணிகப்போட்டி?

Published On:

| By Minnambalam Desk

பாஸ்கர் செல்வராஜ்

பகுதி – 1

 டிரம்ப் ஆட்சிக்கு வந்த மூன்று மாதத்தில் இந்தியாவில் “முத்தான” மூன்று அறிவிப்புகள் வந்திருக்கிறது. online business competition

தனது முன்னாள் நண்பரான அவரை இந்தியத் தலைமை அமைச்சர் மோடி தேடிச் சென்று பார்த்ததும் இந்திய ஏற்றுமதி வாய்ப்புகளைக் கூட்டும் சலுகைகளைக் கேட்டு பெற்று வருவார் என்று பார்த்தால் இதுவரையிலும் மஸ்கின் விலை அதிகம் கொண்ட டெசுலா மின்மகிழுந்தை இறக்குமதி செய்து விற்க இருந்த தடைநீங்கி கடைகளைத் திறக்கும் வேலை மும்முரமாக நடக்கிறது. 

மூன்று செய்திகள் online business competition

 online business competition

பணக்காரர்கள் வாங்கும் வாய்ப்புள்ள ஜாகுவார் மின் மகிழுந்துகளைத் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப் போவதாகச் சொன்ன டாட்டா நிறுவனம் இப்போதைக்கு அதனைத் தள்ளிவைத்து இருக்கிறது. இரண்டும் ஒரே சந்தையைக் குறிவைத்து இறங்கும் முயற்சி என்பதால் ஒப்பீட்டளவில் முன்னேறிய நுட்பங்களைக் கொண்ட டெசுலாவை இப்போதைக்கு எதிர்கொள்வது கடினம் என்பதால் டாட்டா பின்வாங்கி இருக்கலாம். இரண்டுக்கும் தொடர்பு இருக்கிறதோ இல்லையோ டாட்டாவின் தொழிற்சாலை அமைய இருந்த தமிழ்நாட்டுக்கு இதனால் நிச்சயம் இழப்புதான். அந்த வகையில் அவர் எப்போதும் போல நமக்கு “நன்மை” பயக்கும் செயலையே செய்திருக்கிறார்.

இரண்டாவதாக மஸ்கின் செயற்கைக்கோள்வழி இணையத்தைச் ஜியோவும் ஏர்டெல்லும் சந்தைபடுத்தப் போவதாகச் செய்தி வந்திருக்கிறது. இந்திய இணைய தொலைத்தொடர்புத்துறை சந்தையின் பெரும்பகுதியைக் கைப்பற்றி ஏகபோகம் பெற்று இருக்கும் இந்த இருவரும் சொந்தமாக செயற்கைக்கோள் இணையத்தை வழங்க தனித்தனியாக முயற்சி செய்து வந்தார்கள். 

சமீபத்தில் இஸ்ரோ உருவாக்கிய மலிவான விலையில் செயற்கைக்கோள்களை ஏவும் நுட்பத்தை ஒன்றியம் அதானிக்குக் கொடுத்ததைப் பார்த்து குஜராத்தின் கோமகன்கள் மூவரும் கூட்டமைத்து முற்றுமுழுதான இந்திய தேசிய செயற்கைக்கோள் கட்டமைப்பை ஏற்படுத்தி ஒரு சுதேசி இயக்கத்தை முன்னெடுக்கப் போகிறார்களோ என்று எண்ணி இருந்த வேலையில் இப்படி அடுத்தவன் இணையத்தை விற்க வரிசைகட்டி நிற்கிறார்கள். அடுத்து அமேசான் நிறுவனத்தின் டோப்லர் உள்ளே வருமா? இதன்பிறகு இவர்களின் சொந்த முயற்சி என்னவாகும்? இஸ்ரோவின் தொழில்நுட்பம் வீணாகுமா? நாம் கண்டிராத அவர்களின் கடவுளுக்குத்தான் வெளிச்சம்.

 மூன்றாவதாக இந்திய நிறுவனங்களான ஜியோ, டாட்டாவைப் போன்று எங்களின் வால்மார்ட், அமேசான் நிறுவனங்களும் சரக்குகளை மொத்தமாக வாங்கி வைத்துக் கொண்டு விற்க அனுமதிக்கவேண்டும் என்று நமது மோடி நண்பரின் அரசு செல்லமாக மோடியின் அரசின் கழுத்தை நெருக்குவதாகச் செய்தி வந்திருக்கிறது. இது எல்லாம் ஒரு விடயமா என்று எழுந்துவிட வேண்டாம். சற்று பொறுங்கள். நேரடி அமெரிக்க இணையம், அவர்களின் நிறுவனங்கள் சரக்கை வாங்கி வைத்துக்கொண்டு விற்க அனுமதி என்று மாறும் இந்த மாற்றத்தில் எவ்வளவோ இருக்கிறது. 

இணையதள வணிகம் அறிமுகம் online business competition

 இந்தத் தொடர்பைப் புரிந்துகொள்ள அதற்கு பின்னிருக்கும் நீண்ட கதையைச் சோர்வடைய விடாமல் சுருங்கச் சொல்ல வேண்டுமானால் இந்த இணையதள வணிகப் பெருநிறுவனங்கள் வருவதற்கு முன்பு ஒரு பொருளைச் செய்து சுவரொட்டி, செய்தித்தாள், வானொலி, திரையரங்கம், தொலைக்காட்சி நிறுவனங்கள் வழியாக நிறுவனங்கள் விளம்பரம் செய்யும். 

 அதனை அறிந்த நாம் குடியிருக்கும் பகுதியில் உள்ள கடைக்குக் சென்று அங்கே அடுக்கி வைத்திருக்கும் பொன்வண்டு சலவைக்கட்டி அல்லது கோபால் பற்பொடி கொடுங்கள் என்று கேட்டு எடுத்துச் சென்ற பணத்தை நீட்டினால் அவர் பொருளை எடுத்துக் கையில் கொடுத்து விடுவார். 

 கடைக்காரர் அந்தப் பொருளை மொத்த விற்பனையாளரிடம் வாங்கி வந்திருப்பார். மொத்த விற்பனையாளர் பொருளைச் செய்யும் நிறுவனத்திடம் அந்தப் பகுதி முழுக்க சந்தைப்படுத்த உரிமம் வாங்கி சிறு கடைகாரர்களுக்கு விற்றுக் கொண்டிருப்பார். பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, கொரோனாவிற்குப் பிறகு இது பெருமளவு மாறிவிட்டது. online business competition

 இப்போது கடைகளில் அடுக்கியதற்குப் பதிலாக மெய்நிகர்வெளியில் ஒரு இடத்தை உருவாக்கி பொருளை அங்கே கடை பரப்புகிறார்கள். மொத்த, சில்லறை விற்பனையாளர்கள் வழியாக நம்மை வந்தடைந்த பொருள் இப்போது இவர்கள் வழியாக நம்மை வந்தடைகிறது. அந்த இருவரையும் இவர்கள் ஓரம் கட்டிவிட்டு அவர்கள் பொருள்களை வாங்கிய நிறுவனங்களிடம் இவர்கள் மொத்தமாக வாங்கி வைத்துக்கொண்டு நம்மிடம் விற்கிறார்கள். 

 நேரடியாகப் பணத்தை எடுத்துக் கொண்டு போகாமல் நாம் திறன்பேசியில் துழாவி இது எனக்கு வேண்டுமென கடனட்டை அல்லது வங்கிக் கணக்கின் வழியாகப் பணத்தைச் செலுத்தி அழைப்பானை அனுப்பினால் வீட்டுக் கதவைத் தட்டி ஆட்கள் பொருளைக் கொடுத்துவிட்டு சென்று விடுகிறார்கள். கடைக்குப் போனாலும் ஜிபேயில் பணத்தை அனுப்பிவிட்டு பொருளை வாங்கிக் கொண்டு வந்துவிடுகிறோம். எல்லாமே வேகமாக வசதியாக மாறிவிட்டது. நல்லதுதானே! 

கடைக்காரர் தொழிலாளர் வாடிக்கையாளர் நிலை

 என்ன… நாம் இந்த வசதியைப் பெறவேண்டுமானால் இணையமும் திறன்பேசியும் அவசியம் என்றாகிவிட்டது. வீட்டில் நால்வர் என்றால் நான்கு பத்து-இருபது ஆயிரம் பெறுமான திறன்பேசி, நால்வருக்கும் இணையத்துக்கான மாதச்செலவு என இதற்கு ஆகும் செலவு இதனுடன் கூடியிருக்கிறது. நான்கைந்து ஆண்டுக்கு ஒருமுறை பழுதுபடும் திறன்பேசியை மாற்றுவது குடும்பம் செய்யவேண்டிய அத்தியாவசிய செலவாக மாறியிருக்கிறது. வாங்க வசதி படைத்த நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு இது பிரச்சனை இல்லை. எல்லாமே இணையமயம் என்று மாறும் நிலையில் மற்றவர்க்கு இது பெரும் நிதிச்சுமை. online business competition

 நடுத்தர வர்க்கம் தொலைவில் இருக்கும் கடையைத் தேடி வெயிலில் அலைய வேண்டியது இல்லை. அவர்களுக்குப் பதிலாக குளிர்சாதன வசதி இல்லை என்றாலும் குறைந்தபட்சம் நிழலில் கடைக்குள் நின்று வேலை செய்தவர்கள் பொருளைத் தூக்கிக் கொண்டு வெயிலில் தெருவில் அலைகிறார்கள். முன்பு வெறும் ஆளாக வேலைக்குச் சென்றவர்களுக்கு இணையம், திறன்பேசியோடு, இருசக்கர வண்டியும் வேண்டும் என்னும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. 

 இப்படி வெயிலில் அலைந்து கொஞ்சம் முதலீடு செய்தால்தான் வேலை என்று ஆகியதால் அவர்களின் வேலையின் தரமோ வருமானமோ கூடியிருக்கிறதா? என்று பார்த்தால் முன்பு நாள், வாரம், மாதச் சம்பளம் பெற்றதற்குப் பதிலாக மணித்தியாளக் கூலியாகி இருக்கிறார்கள். 

 எத்தனை மணிநேரம் என்றுகூட இல்லை எத்தனை அனுப்பானை முடிக்கிறார்களோ அவ்வளவு கூலி. சற்று அயர்ந்தால், சிறு விபத்து நேர்ந்தால், உடல்நிலை கெட்டால், பிள்ளையின் பள்ளியில் கூப்பிட்டு அனுப்பினால் அந்த நாள் வருமானம் இல்லை. அவர்கள் குடும்பத்துடன் நேரம் செலவிட, குழந்தை வளர்ப்பில் அக்கறை செலுத்த எதற்கும் நேரம் இல்லை. 

 இவர்கள் குறித்து எல்லாம் நமக்கு என்ன அக்கறை. எவன் எக்கேடு கெட்டால் நமக்கென்ன? நமக்கு கொஞ்சம் குறைவான விலையில் நாம் கேட்ட பொருள் நம்மை வந்தடைந்ததா? அதுதான் முக்கியம். இது குறித்தெல்லாம் பேசி விவாதித்து தகுந்த சட்ட விதிகளை உருவாக்கி நெறிப்படுத்த நாம் என்ன பண்பட்ட நாகரிக (civilized) சமூகமா? முழுமையாகப் பண்படாத அநாகரிக (semi barbarians) சமூகம்தானே! கொணன் தி பார்பேரியன் என்று அமெரிக்கர்கள் படம் எடுத்ததைப்போல நாமும் “தமில்ஸ் தி செமிபார்பேரியன்ஸ்” என்று நம்மிடம் உள்ள நல்ல இயக்குநரைக் கொண்டு “பெருமையாக” ஒரு படம் எடுக்கலாம். 

விலை குறைந்திருக்கிறதா?  online business competition

இப்படி வாடிக்கையாளர், பணியாளர் என அனைவருக்கும் செலவைக் கொண்டுவரும் இந்த இணையதள வணிகம் அதில் ஈடுபடும் நிறுவனத்துக்கோ ஊருக்கு ஊர் வாடகை கொடுத்து கடை திறந்து, உள்ளே தேவையான வசதிகள் செய்து பொருளை அடுக்கி, மின்சார கட்டணம் மற்றும் மாநகராட்சிக்கு வரி செலுத்தி, சம்பளம் கொடுத்து நிலையான பணியாளரை வைக்கவேண்டிய தேவை இல்லாமல் போய் பெருமளவு செலவைக் குறைக்கிறது. இணையதள கட்டமைப்பு, சில இணையதள வடிமைப்பாளர்கள், ஆட்களின்றி பணத்தை வாங்கக் கொடுக்க தானியியங்கி மின்னணு பணப்பரிமாற்ற அமைப்பு, சரக்கைக் கெடாமல் வைப்பதற்கான கூடம், சரக்குப் போக்குவரத்து, கொண்டுபோய் கொடுக்க மணித்தியாளக் குறைகூலிகள், மீதம் தானியியங்கி மனிதர்கள் ஆகியவை போதும். 

 இவ்வளவு செலவு மிச்சம் ஆகிறதே இதனால் அவர்கள் விற்கும் பொருள்களின் விலை குறைந்து இருக்கிறதா? நிச்சயமாக. அண்ணாச்சிக் கடையைவிட கொஞ்சம் குறைவாக. நாமும் அவரைவிட இவர்கள் குறைவான விலையில் கொடுக்கிறார்கள் என்று இங்கே வாங்குகிறோம். அதனால் முப்பது விழுக்காட்டுக்கும் மேலான சிறுமளிகை கடைகள் மூடுவிழா கண்டிருக்கின்றன. 

அதேசமயம் இவர்கள் உள்ளே நுழைந்தது முதல் ஒட்டுமொத்த பொருள்களின் விலைவாசி ஒவ்வொரு ஆண்டும் ஆறு-ஏழு விழுக்காடு தொடர்ந்து கூடி வந்திருக்கிறது. உணவுப் பொருள்களின் விலைவாசி இதைவிட அதிகமாகக் கூடியிருக்கிறது. ஆனால் இவர்கள் வாங்கும் மொத்தப் பொருள்களின் விலைவாசி உயர்வு ஓரிரு விழுக்காட்டைத் தாண்டவில்லை. அதாவது உற்பத்தியாளர்கள் முன்பு விற்ற அதே விலைக்குத்தான் பெரும்பாலும் விற்று வருகிறார்கள்.

விலைவாசியும் பங்குச்சந்தையும் ஏன் உயர்கிறது?

பின்பு ஏன் பொருள்களின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கிறது. ஒன்றுமில்லை ஊபர் செயலியில் காலை வேலை நேரத்தில் அலுவலகம் செல்ல மகிழுந்தைத் தேடினால் காட்டும் விலைக்கும் அலுவலகம் செல்லும் நேரத்திற்குப் பிறகு காட்டும் விலைக்குமான வேறுபாட்டைக் காணுங்கள். கிட்டத்தட்ட இருமடங்கு வித்தியாசம் இருக்கும். 

 ஒரு பகுதி முழுக்க எத்தனை பேர் மகிழுந்து சேவை வேண்டுகிறார்கள் என்று ஒரு செயலியின் வழியாகக் காணும் இப்பெறுநிறுவனங்கள் அந்த நேரத்துக்குச் சட்டென விலையைக் கூட்டி நம் பையில் இருக்கும் பணத்தைக் கறந்து விடுகிறார்கள். முதலில் மலிவாக சேவையைக் கொடுத்து மற்றவர்களைச் சந்தையில் இருந்து வெளியேற்றிய பின்பு இப்படிக் கைவரிசையைக் காட்டுகிறார்கள் இந்த இணையதளத் திருடர்கள். 

 இதேபோல முன்பு இலவசமாகச் ஜியோ இணையம் கொடுக்கிறது என்று வாங்கிப் பயன்படுத்தினோம். நாம் ஒவ்வொருவரும் யார், வயது, வாழிடம், வருமானம், தேடும் வாங்கும் பொருள்களைக் கண்டறிந்து அந்தந்தப் பகுதியில் கடையைப் பரப்பி சந்தையைப் பிடித்தது ஜியோ. மொத்தமாக ஒருங்கிணைக்கப்பட்ட செயலியின் வழியாக இவர்கள் விற்கும் போது எந்தப் பொருளுக்கு எங்கே எப்போது அதிகம் கிராக்கி இருக்கிறது என்று கண்டறிந்து அதன் விலையை உடனே உயர்த்தி இலாபம் பார்க்கிறார்கள். 

 இவர்களே மொத்தமாக வாங்கி வைத்துக்கொண்டு விற்பதால் பொருள்களைச் சந்தைக்கு வராமல் பதுக்கும்போது அல்லது குறைக்கும் போது செயற்கையாகச் சந்தையில் கிராக்கியை ஏற்படுத்தி அதிக விலையில் விற்று இலாபம் பார்க்கவும் அது வழி வகுக்கிறது. 

இப்படி வாடிக்கையாளருக்கும் தொழிலாளருக்கும் தேவையான பொருள்கள் மற்றும் திறன்பேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கு சந்தையில் தேவை பெருகி அதனை விற்கும் இந்தப் பெருநிறுவனங்களின் விற்பனை கொடிகட்டிப் பறக்கிறது. இலாபம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டுகிறது.

 இவ்வளவு இலாபம் தரும் இந்த நிறுவனங்களின் பங்குக்கு பங்குச்சந்தையில் கிராக்கி உண்டாகி பெருநிறுவனத்தின் மதிப்பு டிரில்லியன் டாலர் மதிப்பைப் பெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சந்தையில் மற்றவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு இவர்கள் விற்கும் பொருளின் அளவு உயரவுயர இலாபம் பெருகிக் கொண்டே செல்கிறது. நிறுவன சொத்தான பங்குக்கு கிராக்கி கூடி பங்கின் மதிப்பும் அதனுடன் உயர்ந்து பெருநிறுவனங்களின் மொத்த மதிப்பு மேலும் உயர்ந்து கொண்டே செல்கிறது. 

 அதேசமயம் அந்த பங்குச்சந்தை உயர்வுக்கு ஏற்ப பொருள்களின் விலையும் ஆண்டுதோறும் உயர்ந்துகொண்டே செல்கிறது. இவர்களுக்குப் பொருளை விற்கும் உற்பத்தியாளர், வேலைசெய்யும் தொழிலாளர், இவர்களிடம் பொருளை வாங்கும் வாடிக்கையாளர் என எல்லோரையும் எல்லாவற்றையும் இழக்க வைத்து கடனில் விழவைக்கிறது. 

சரி! இதற்கும் அமெரிக்கர்கள் இணைய சேவை வழங்கவும் அமேசான், வால்மார்ட் நிறுவனங்கள் மொத்தமாக பொருளை வாங்கி விற்க அனுமதிக்கக் கோருவதற்கும் என்ன தொடர்பு? இவ்வளவு கெடுதல் கொண்டது என்பதால் இந்த இணைய தொழில்நுட்பமே வேண்டாம் என்று சொல்ல முடியுமா? இப்பவே உங்களுக்குக் கண்ணைக் கட்டுவது புரிகிறது. இந்தக் கேள்விகளுக்கான விடையை நாளை பார்க்கலாம். online business competition

கட்டுரையாளர் குறிப்பு  

பாஸ்கர் செல்வராஜ் – தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர். online business competition

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share