உலக – அமெரிக்க – ஒன்றிய முரணில் நமது பாதையும் தெரிவும் என்ன? பகுதி 5

அரசியல் சிறப்புக் கட்டுரை

பாஸ்கர் செல்வராஜ் What is our path and choice in the US-India conflict?

இன்றைய உலக முரண் தனியார் லாபத்தை முன்னிறுத்தி உலக உற்பத்தியைக் கட்டுப்படுத்தி வந்த மேற்குலக நிதிமூலதனத்துக்கும் பகுதி அளவேனும் மூலதனத்தை சமூகமயமாக்கி சிறப்பாக நிர்வகித்து தொழில்நுட்பத்தை வளர்த்து உற்பத்தித் திறனைப் பெருக்கி உற்பத்தியை சமூகமயமாக்கி இருக்கும் கிழக்கின் அரச முதலாளித்துவ மூலதனத்துக்குமான முரண்.

உலக – ஒன்றிய மூலதன முரணின் வழியாக நாம் கற்கும் பாடம் என்ன?

“மூலதனத்தைச் சரியாக ஒதுக்கீடு செய்து நிர்வகிக்க இயலாது” என்ற அரச முதலாளித்துவத்தின் மீதான விமர்சனத்தை ஏற்று கிழக்கு சரியாகச் செய்ய முடியும் என்று (சீனா) நிரூபித்து இருக்கிறது. அரச முதலாளித்துவ மூலதனத்தை நிதி மூலதனத்துக்கு எதிராக நிறுத்தி வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கையை உலகுக்கு ஊட்டியிருக்கிறது. அதேசமயம் இந்த விமர்சனத்தை வைத்த ஏகாதிபத்தியம் உற்பத்தியில் ஈடுபடாமல் அதன்மீது ஊக பேர வணிகம் செய்து வயிறு வளர்க்கும் மூலதனப் பொதியாகி நிற்பது மட்டுமல்ல… உலக உற்பத்தியைப் பெருக்கவிடாமல் தடுத்து நிறுத்திக்கொண்டிருக்கும் பெரும் தடைக்கல்லாகவும்  மாறி நிற்கிறது.

இதன்மூலம் உற்பத்தியைத் தன்னிடம் குவித்து லாபத்தைப் பெருக்க முயலும் ஏகாதிபத்தியம் உற்பத்தித் திறனையும் வேலைவாய்ப்பையும் பெருக்கி விலையைக் குறைத்து சந்தையை விரிவாக்கும் போட்டி முதலாளித்துவத்துக்கு எதிரானது என்ற லெனினின் ஏகாதிபத்திய வரையறை உண்மைதான் என உறுதிப்படுத்தி இருக்கிறது. சந்தையில் போட்டியற்ற ஏகபோகம் செல்வக் குவிப்புக்கும், உற்பத்தித்திறன் வீழ்ச்சிக்கும், வேலைவாய்ப்பின்மைக்கும், விலைவாசி உயர்வுக்கும் வழிவகுக்கும் என நிறுவி இருக்கிறது. இது சந்தையில் போட்டி நிலவுவதை உறுதி செய்வது அரசின் முக்கிய கடமைகளில் ஒன்றாக நிர்ணயித்துக் கொள்ளக் கோருகிறது.

ஆனால், சீனாவைப் போன்றே பொதுத்துறை வங்கி சேமிப்பின் வழியாக மூலதனத்தைச் சமூக மயமாக்கிய இந்தியா சீனாவைப் போன்று தொழில்நுட்பங்களை அடைந்து உற்பத்தியைப் பெருக்காமல் அதற்கு நேரெதிராக அந்த மூலதனத்தை மக்களிடம் கந்துவட்டி வசூலிக்கும் மூலதனப் பொதியாகவும் ஊக பேர வணிகத்தால் ஊதிப்பெருக்கப்பட்ட பெருநிறுவனங்களின் மதிப்பைச் சரியாமல் தாங்கி நிற்கும் பணக் குவிப்பாகவும் மாற்றி இருக்கிறது. இதனை ஏகாதிபத்தியம் அரச முதலாளித்துவம் மூலதனத்தைச் சரியாக ஒதுக்கீடு செய்து நிர்வகிக்காது என்று பிரச்சாரம் செய்ய முற்படும்.

ஆனால், இங்கே உண்மை என்னவென்றால் ஏகாதிபத்தியம் தனக்குப் போட்டியாக மற்றொரு மூலதனம் உருவாகாமல் தடுத்து அதனைத் தந்திரமாகப் பங்குச்சந்தை விளையாட்டின் வழியாக சிதைக்கும் சதிச் செயலில் ஈடுபடுகிறது. அதற்கு இந்திய இந்துத்துவ ஒன்றியம் உடந்தையாக இருந்து செயல்படுத்துவதோடு அதில் தரகு கூட்டுக் களவாணிகளும் பலனடையும் வகையில் செயல்படுத்துகிறது. எனவே, இங்கே அரசு மூலதனத்தைச் சரியாக ஒதுக்கீடு செய்து நிர்வகிப்பது அல்ல பிரச்சினை… அதனைத் திட்டமிட்டு அழிப்பதுதான் பிரச்சினை.

இந்தியப் பொருளாதாரப் பிரச்சினையின் மையமும் தீர்வும் என்ன?

அமெரிக்க நிதிமூலதனமும் இந்தியக் கூட்டுக் களவாணிகளும் இந்திய உற்பத்தியைக் கைப்பற்றி ஏகபோகம் பெற்றிருப்பதும் அதனை உடைக்கும் வலிமை கொண்ட அரச முதலாளித்துவ சமூக மூலதனமான பொதுத்துறை வங்கி நிதி நிறுவனங்கள் இதற்குச் சேவை செய்யும் மூலதனப் பொதியாக மாற்றி அழியக் காத்திருப்பதும் இந்தியப் பொருளாதாரப் பிரச்சினையின் மையம். அதுவே விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கான முக்கிய காரணம்.

ரூபாய் மூலதனத்தை உற்பத்தியில் அனுமதித்து கூட்டுக் களவாணிகளின் ஏகபோகத்தை உடையாமல் காக்கும் ஒன்றியம் இதற்கு மாற்றாக ரஷிய – சீன கடன் பண மூலதனங்களை இவர்களைப் பாதிக்காத வகையில் இவர்களின் ஊடாக உற்பத்தியில் அனுமதிக்க முயல்கிறது. இது டாலர் ஏகபோகத்தைக் கேள்விக்குள்ளாக்கும் என்பதால் இம்முயற்சியை அமெரிக்கா தடுத்து நிறுத்தப் பார்க்கிறது. இது இந்தியாவில் நீடிக்கும் அல்லது நீடிக்கப்போகும் பொருளாதார தேக்கத்துக்கான காரணம்.

டாலர் ஏகபோகத்துக்குப் பதிலாக ரூபிள் – யுயன் மூலதனங்களை அனுமதித்து நம்மிடம் இல்லாத எரிபொருள், தொழில்நுட்ப துறைகளில் அந்நிய மூலதனங்களுக்கு இடையில் போட்டியை உருவாக்குவதும், கூட்டுக் களவாணிகளின் ஏகபோகத்தை உடைக்கும் வகையில் ரூபாய் மூலதனத்தைப் போட்டிக்கு உற்பத்தியில் ஈடுபடுத்துவதும் அதன் மதிப்பைத் தீர்மானித்து நிலைநிறுத்தும் பொதுத்துறை நிறுவனங்களை மோசமாக  நிர்வகித்து வரும் ஒன்றியத்தின் கையில் இருந்து மாநிலங்களிடம் மாற்றி அவற்றின் உற்பத்தித் திறனைப் பெருக்க மாநிலங்களைப் போட்டியிட வைப்பதும்தான் இந்தத் தேக்கத்தை உடைப்பதற்கான தீர்வு.

எதிர்வரும் இடரை எப்படி எதிர்கொள்ளலாம்?

இது இந்திய மக்கள் ஒன்றிணைந்து போராடி வெல்ல வேண்டிய நீண்டகால அரசியல் கோரிக்கை. அமெரிக்க – ஒன்றிய முரண் முட்டிக்கொண்டு ஆட்சி மாற்றம் ஏற்படும் சூழல் ஏற்பட்டால் இந்தக் கோரிக்கையை அடையும் திசையில் நமது அரசியல் இருத்தல் அவசியம். அப்படி ஏற்படாமல் ஒரு பொருளாதாரச் சரிவு அல்லது தேக்கம் தொடரும்பட்சத்தில் அழியக் காத்திருக்கும் பொதுத்துறை மூலதனத்தையும், பங்குச்சந்தையில் மதிப்பு உயர்வு எண் மாய்மால வித்தைக் காட்டும் அவர்களின் வலையில் விட்டில்பூச்சிகளைப்போல ஓடிவிழும் நமது நடுத்தர வர்க்கத்தையும் நாம் காக்க வேண்டும்.

அந்த அழிவைத் தடுக்க ஒன்றிய நிர்வாகத்தில் இருக்கும் பொதுத்துறை மூலதனம் மற்றும் உற்பத்தி நிறுவனங்களுக்குப் போட்டியாக தமிழக அரசு பொதுத்துறை நிறுவனங்களை நிறுவி நடுத்தர வர்க்கத்தை அதில் சேமிக்க வைப்பதும் அந்த மூலதனத்தை உற்பத்தியில் ஈடுபடுத்தி செம்மையாக நிர்வகிப்பதும்தான் நாம் தேங்காமல் முன்னேற நம்முன் இருக்கும் தெரிவு.

அடுத்து, இப்படி அரசு திரட்டும் மூலதனத்தைக் கொண்டு எந்தெந்தத் துறைகளில் தமிழ்நாடு அரசு முதலீடு செய்து போட்டியிட வேண்டும் என்று கேட்டால் எதிலெல்லாம் ஏகபோகம் நிலவுகிறதோ அதிலெல்லாம் அரசு தனது இருப்பை உறுதிசெய்து போட்டியை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக மூலதனம், நிதி, தங்கம், எரிபொருள், உள்கட்டமைப்பு, தொலைத்தொடர்பு, இரும்பு, சிமென்ட் உள்ளிட்டவற்றில் தமிழக அரசு போட்டி நிறுவனங்களை ஏற்படுத்த வேண்டும்.

அதற்கடுத்து, இந்த அடிப்படைக் கட்டமைப்புகளைக் கொண்டு எந்தப் பொருள்களின் உற்பத்தியையும் உற்பத்தித் திறனையும் கூட்ட வேண்டும் என்றால் இப்போதைய உற்பத்தி மாற்றம் இரும்போடு சிலிக்கனும் கலந்து உருவாகும் பொருள்கள் மரபான எரிபொருளோடு மரபுசாரா எரிபொருளினாலும் உருவாகி இயங்குவதாகவும் இணையத்தின் மூலம் இணைந்திருப்பதாகவும் இருக்கிறது. எனவே, இவற்றோடு தொடர்புடைய பொருள் உற்பத்தியிலும் அவற்றைக்  கொண்டு ஏற்கனவே நடக்கும் பொருள் உற்பத்தியின் திறனையும் கூட்ட வேண்டும்.

சிலிக்கன் மற்றும் மரபுசாரா எரிபொருள் உற்பத்தி தொழில்நுட்பம் எதையும் உருவாக்காத நாம் அவற்றின் உற்பத்தியில் நேரடியாக ஈடுபட முடியாது. மற்றவர்களின் உதவியுடன் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். அப்படியான உற்பத்தியைக் கூட்டுக் களவாணிகளின் வழியாகச் செய்வது இந்துத்துவர்களின் பாதை. அதற்கு மாற்றாக கிழக்குலக அரச முதலாளித்துவ நிறுவனங்களுடன் இணைந்து நமது பொதுத்துறை நிறுவனங்கள் ஈடுபடும் வகையில் பயணிப்பது நமது பாதை. இந்தியா ரூபிள் – யுயன் மாற்று கடன் பணச் சுழற்சியை அனுமதிக்கும் முயற்சியில் வெற்றி பெற்றால் அதில் நமது இந்தப் பாதையைத் தெரிவுசெய்ய இடமிருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

அந்தத் தொழில்நுட்பங்களில் தற்சார்பை அடைய அது தொடர்பான திறனைக் கொண்ட தனிநபர்களைத் தமிழகத்துக்கு வரவேற்று ஆராய்ச்சி நிறுவனங்களில் அமர்த்தி அவர்களை தொழில்முனைவோராக வளர்த்தெடுத்து அரச முதலீட்டில் அவர்கள் நிறுவனங்களைத் தொடங்க ஊக்குவிக்க வேண்டும். மாற்று எரிபொருளான சூரிய மின்னாற்றல் தகடுகள், காற்றாலைகள், சேமக்கலங்கள் ஆராய்ச்சியிலும் உற்பத்தியிலும் அரசும் இருப்பது அதில் நிலவும் முற்றொருமையை உடைத்து போட்டியை ஏற்படுத்தி விலையைக் கட்டுப்படுத்தும்.

பொருளாதாரத்தைக் கொண்டு எப்படி சாதியை உடைக்கலாம்?

இதில் குறிப்பாக சீனர்களிடம் பெருகிக் கிடக்கும் சூரிய மின்னாற்றல் தகடுகளை அதானி மலிவான விலையில் அவரது துறைமுகத்தின் வழியாக இறக்குமதி செய்து விவசாயிகளை வஞ்சித்து அவர்களது நிலத்தில் நிறுவி அரசிடம் அதிக விலையில் விற்பதாக இருக்கும் தற்போதைய ஒன்றியத்தின் பாதையை மறுத்து நாம் தடுத்து நின்று விவசாயிகளைக் காக்க வேண்டும்.

அதேசமயம், இதற்கு மாற்றாக தமிழ்நாடு முழுக்க இருக்கும் சூரிய மின்னாற்றல் உற்பத்திக்கு உகந்த அரச நிலங்களைக் கண்டறிந்து சூரிய மின்னாற்றல் பண்ணைகளை அரசு முதலீட்டு நிறுவ வேண்டும். அந்தப் பண்ணைகளுக்கு அருகில் இருக்கும் சிறு, குறு விவசாயிகளை ஒருங்கிணைத்துக் கூட்டுப் பண்ணைகளை ஏற்படுத்த கடன் வழங்க வேண்டும். அவற்றைக் கொள்முதல் செய்து விற்பதற்கான பிணையம் கண்காணித்துக் கட்டுப்படுத்துவதற்கான இணைய உள்கட்டமைப்புகளை அரசு ஏற்படுத்த வேண்டும். இங்கே அரசு மொத்த மூலதனப் பொருள்களின் கொள்முதலாளராகவும் உற்பத்தியாகும் மின்சாரத்தை வாங்குபவராகவும் இருப்பதால் இவற்றின் விலைகளைக் கட்டுக்குள் வைக்க முடியும்.

இந்த உற்பத்தியோடு எண்ணெய் வித்துகள், தானிய, காய்கறி உற்பத்தியைக் குறைந்தது ஐம்பது முதல் நூறு ஏக்கரில் செய்யும் தொழில்முறை கூட்டுப் பண்ணைகளுக்கு அதிக உற்பத்தியை ஈட்டுவதற்கான உயிரி தொழில்நுட்பம், மூலதனப் பொருள்களுக்கான கடனை வழங்கி அவர்களின் உற்பத்தியைப் பாதிக்காத வகையில் துல்லிய வானிலையை வழங்கும் செயற்கைக்கோள் மற்றும் சந்தைப்படுத்த இணையதள போக்குவரத்துக் கட்டமைப்புகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.

இந்த அரசின் பிணையம், இணையம், போக்குவரத்து வசதிகளைக் கல்வி, மருத்துவம், கிராம, நகர நிர்வாகத்திற்கும் விரிவாக்கி மனிதவளத்தைப் பெருக்குவதோடு இவற்றின் மூலம் உருவாகும் தரவுகளைச் சேமித்து சந்தையின் தேவையையும் அளிப்பையும் ஆராய்ந்து திட்டமிட்டு இவற்றின் அளவையும் தரத்தையும் மேம்படுத்த வேண்டும்.

இதோடு அரசு வங்கிகளில் சேமிக்கவும் கடன்பெறவும் விற்கவும் மட்டுமேயான சிறப்புத் தங்க நாணய திட்டத்தையும் சேர்த்துச் செயல்படுத்தி அதன் கொள்முதல் விற்பனையில் முக்கிய பாத்திரம் வகித்து அதன் விலையையும் மூலதனமாக மாற்றமடைவதையும் ஊக்குவித்து இந்தச் சரக்குகளின் மதிப்பைத் தெரிவிக்கும் ரூபாயின் மதிப்பை நிர்ணயித்துக் கட்டுப்படுத்தும் ஆற்றலை அரசு பெற வேண்டும். இது இந்த மூலதனப் பொருள்கள், இடுபொருள்கள், விளைபொருள்களின் விலைகளைத் தனியார் ஊகபேர மூலதனக்காரர்கள் திரித்து அரசின் இந்த முயற்சியைத் தடுத்து இதில் பங்கேற்கும் விவசாயிகளை ஏமாற்ற இடமின்றி செய்ய முடியும்.

இதில் பங்கேற்கவும் பலனடையவும் சாதிய அகங்காரத்தை விட்டு சமமாக இணைந்து திறன்மிக்க தொழிலாளர்களைப் பெற வேண்டும் என்ற எதார்த்தம் இயல்பாகவே தமிழக கிராமங்களில் உறைந்திருக்கும் சாதியை மேலும் தளர்த்தும். சாதிய மனிதர்களுக்கு இடையில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வைக் குறைத்து திறனைப் கூட்டி வாழ்வை வளப்படுத்திக் கொள்ள வேண்டிய சூழலை ஏற்படுத்தும்.

இப்போதிருக்கும் கார்ப்பரேட் கட்சி அரசியலும், ‘ஆமாம் சாமி’ போட்டு அதன் வருவாயில் பங்கு போட்டுக் கொள்ளும் நிர்வாக அமைப்பும், காலப் பொருத்தமில்லாத தொழிலாளர் கொள்கையும் இப்படியான புதிய பொருளாதார முயற்சிக்குப் பொருத்தமில்லாதது. மாறாக மக்களின் வாழ்வை மாற்றும் அரசியல் உரமும் உறுதியும் கொண்ட அரசியல் அடித்தளத்தையும், திறனை ஊக்குவித்து உயர்வளிக்கும் திறன்மிக்க நிர்வாகக் கட்டமைப்பையும், “உழைப்புக்கேற்ற ஊதியமும் பங்களிப்புக்கேற்ற பலனும்” தரும் தொழிலாளர் கொள்கையையும் உருவாக்கிச் செயல்படுத்த வேண்டும்.

இதுபோன்ற மக்களின் வாழ்வை மாற்றும் பொருளாதாரத் திட்டத்தை உருவாக்கி அரசியல் முழக்கமாக்கி ஆட்சியைப் பிடித்து உறுதியுடன் செயல்படுத்தி மக்களின் இன்றைய இன்னலைப் போக்கி வளமான எதிர்கால வாழ்வுக்கு வித்திடும் அரசியல் கட்சியும் தலைமையுமே எந்தத் தடையுமின்றி பல பத்து ஆண்டுகள் இந்த மண்ணை ஆளும். அதுவல்லாமல் நான்கு நலத்திட்டங்கள் எல்லோருக்கும் நல்லவன் என்பதாக காட்சிப் படுத்துவதையே அரசியலாகக் கொண்டால் காலப்போக்கில் அதன் சாயம் வெளுத்து சாதிய வாதம், மதவாதம், இனவாதம், தேசியவாதம் பேசும் வலதுசாரிகளிடம் இளைஞர்களைப் பலி கொடுத்து அவர்களிடம் ஆட்சியை இழப்பதில்தான் முடியும்.

அமெரிக்க அரசியல் குழப்பமும் அதன் சமூகப் பொருளாதாரமும்! பகுதி 1

அமெரிக்க அரசியல் குழப்பத்தின் அடிப்படை காரணம் என்ன? பகுதி 2

திரம்பு அரசியல் படுகொலை முயற்சிக்கான அவசியம் என்ன? பகுதி 3  

அமெரிக்க – உலக முரணில் ஒன்றியத்தின் நகர்வு என்ன? பகுதி 4

கட்டுரையாளர் குறிப்பு 

What is our path and choice in the US-India conflict? Part 5 by Baskar Selvaraj Article in Tamil

பாஸ்கர் செல்வராஜ் – தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டிஜிட்டல் திண்ணை: இரவு வரை போராடிய ஓபிஎஸ்… எகிறி அடித்த எடப்பாடி: அவசர செயற்குழு லைவ்!

தங்கலானே… தங்கலானே : அப்டேட் குமாரு

”மக்களிடம் கெட்ட பெயர்”: மேயர்கள், சேர்மன்கள், கவுன்சிலர்களை எச்சரித்த ஸ்டாலின்

திமுக மா.செ கூட்டம்: ஆ.ராசா வராதது ஏன்? உதயநிதி வந்தது ஏன்?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *