டிரம்ப்பால் ஏற்பட்ட தலைகீழ் மாற்றங்கள்… தவிப்பில் உலக நாடுகள்!

Published On:

| By Minnambalam Desk

Reversal Changes Caused by Trump

பாஸ்கர் செல்வராஜ் Reversal Changes Caused by Trump

கடந்த வாரம் உலகம் கற்பனை செய்து பார்த்திராத இரு சம்பவங்களைக் கண்டது.
ஒன்று ரஷ்யாவுக்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐநா தீர்மானத்தை
அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்து எதிர்த்தது. இரண்டாவது உலக ஊடகங்களின் முன்னால் உக்ரைன் அதிபரும் அமெரிக்க அதிபரும் போரையும் அமைதியையும்
மையப்படுத்தி கடுமையான வார்த்தைப் போரில் ஈடுபட்டது.

உக்ரைன் போரை தலைமையேற்று நடத்திய அமெரிக்கா தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்ததும் அதன் பின்னால் ஆமாம் சாமி போட்டுக் கொண்டிருந்த ஐரோப்பிய
ஒன்றியம் ஐநாவில் ரஷ்ய எதிர்ப்பு தீர்மானம் கொண்டு வருவதும் யாரும்
எண்ணிப் பார்த்திராத ஒன்று. அதுமட்டுமல்ல வார்த்தைப் போரில் ஈடுபட்ட செலன்ஸ்கியை ஆதரித்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அறிக்கை விடுவதோடு போரினைத் தொடர அனைத்து உதவிகளையும் வழங்கி தலைமை ஏற்க முன்வருகின்றன.

போரை முன்னின்று நடத்திய நாடு, போரிட்ட நாட்டுடன் சேர்ந்து அமைதியை
ஏற்படுத்தப் போகிறேன் என்கிறது. போரினால் நாட்டையும் மக்களையும் இழந்து நிற்கும் உக்ரைனும் போரினால் விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதாரச் சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கும் ஐரோப்பிய நாடுகளும் போரைத் தொடர வேண்டும் என்கின்றன. Reversal Changes Caused by Trump

விலை அதிகம் கொண்ட அமெரிக்கர்களின் எரிபொருளை வாங்கிக் கொண்டிருக்கும்
இந்நாடுகள் போரை முடிவுக்குக் கொண்டுவர முனைவார்கள்; பைடன் ஆட்சிக் காலத்தில் உடைக்கப்பட்ட நோர்டு எரிவாயுத் தாரை 2 (Nord Stream 2) திட்டத்தை செயல்பாட்டுக்குக் கொண்டுவர எத்தனிப்பார்கள் என்று பார்த்தால் முதலாவது ஆட்சிக் காலத்தில் அதன்மீது பொருளாதாரத் தடை விதித்த
டிரம்ப்பின் கோடீஸ்வர நண்பர்கள் அந்தக் குழாயை முதலீட்டுச் சரிசெய்து
இயக்க பேச்சுவார்த்தை நடப்பதாகச் செய்திகள் கசிகின்றன. டிரம்ப் பதவியேற்ற சில மாதங்களில் நடக்கும் இந்தத் தலைகீழ் மாற்றங்கள் உலகில் என்ன நடக்கிறது என்று புரியாமல் எல்லோரையும் குழப்பத்தில் ஆழ்த்துகிறது.

அமெரிக்கர்களால் எழுதப்பட்டது உலக விதி இல்லை! Reversal Changes Caused by Trump

இது குறித்த ஊடக இரைச்சலைத் தாண்டி இம்மாற்றங்களைச் சரியாகப்
புரிந்துகொள்ள வேண்டுமானால் தற்போதைய அமெரிக்க அரசின் செயலர் ருபியோ பாக்ஸ் செய்தி நேர்காணலில் “ஒற்றைத் துருவ உலகம் இயல்பானது அல்ல; அது பிறழ்வு (anomaly); பனிப்போரின் விளைவு; நாம் மீண்டும் பல வலுவான நாடுகள்
உலகின் பல பகுதிகளில் இருக்கும் பல்துருவ உலகத்தை அடையும் புள்ளியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம்” என்று சொன்ன வாக்கியங்களை ஆழமாகப்
பரிசீலிக்க வேண்டும். Reversal Changes Caused by Trump

Reversal Changes Caused by Trump

இது முந்தைய அமெரிக்க செயலர் பிளிங்கன் திரும்பத் திரும்ப வலியுறுத்தி
வந்த “உலக விதிகளின் அடிப்படையிலான ஒழுங்கு” (Rules based order) என்ற
நிலைப்பாட்டில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. எப்படி இந்த ருபியோவின்
பல்துருவ கருத்தாடல் வேறுபட்டது என்பதைப் புரிந்து கொள்வதற்கு பிளிங்கன் கூறிய உலக ஒழுங்கின் விதி என்ன என்று தெரிய வேண்டும்.

கெடுவாய்ப்பாக ஐநாவின் உலக நாடுகளுக்கான விதி தெரியும்; இவர்கள் கூறும் உலக விதி எங்கே இருக்கிறது? யாரால் உருவாக்கப்பட்டது? என்று நீண்ட
அனுபவம் கொண்ட ரஷ்ய வெளியுறவு அமைச்சரே கேட்கும் நிலை. ஏனெனில், அப்படி அமெரிக்கர்களால் எழுதப்பட்ட உலக விதி என்ற ஒன்று இல்லை. ஆனால், செயல்படுத்திய விதி ஒன்று இருந்தது. Reversal Changes Caused by Trump

அது உலக நாடுகள் டாலரைத் தவிர மற்ற நாணயங்களில் பரிவர்த்தனை செய்வதற்கு இருந்த தடை. அது எப்படி செயல்படுத்தப்பட்டது என்று கேட்டால் அது ஐம்பதுகளில் தங்கத்தை அடிப்படையாகக் கொண்ட டாலரை மையப்படுத்திய பரிவர்த்தனையில் தொடங்கி பின்பு எழுபதுகளில் உலக எண்ணெயின் விலையும்
பரிவர்த்தனையும் டாலரில்தான் என்பதாக மாறி வங்கிகளின் வழியான எல்லா உலக கொடுக்கல் வாங்கல்களும் ஸ்விப்ட் (swift) எனப்படும் கட்டமைப்பின் வழியாக மட்டுமே நடப்பது என்பதாக வளர்ந்து நிலைபெற்றது.

அதில் விடுபட்ட சோவியத் ஒன்றிய நாடுகளும் உலகமயத்துக்குப் பிறகு அதில் இறுக்கமாகச் சேர்த்துக் கட்டப்பட்டன. அத்தனை நாடுகளின் வங்கிகளின் பணப்பரிமாற்ற செய்திகளையும் திறம்பட கையாளும் ஸ்விப்ட் கட்டமைப்பும்
அதற்குத் தேவையான இணையம், மீத்திறன் வாய்ந்த கணினிகள் (Super computers)
அதற்கான சில்லுகளை உருவாக்கும் நுட்பம் எல்லாம் அமெரிக்கர்களிடம் மட்டுமே இருந்தது. Reversal Changes Caused by Trump

எனவே, மாற்று வழியில் சிறிய அளவிலான பரிவர்த்தனைகள் தவிர இந்த வலைப்பின்னலைத் தாண்டி யாரும் பணப்பரிவர்த்தனை செய்துகொள்ள முடியாது
என்பதால் எரிபொருளின் விலை அமெரிக்க டாலரிலும் அதற்கான டாலரைக் கொடுத்து
வாங்க அவர்களின் இணைய கணினி நுட்பங்களில் செயல்படும் கட்டமைப்பிலும் அதுவும் அமெரிக்க வங்கிகள் வழியாகவும் மட்டுமே நடைபெற வேண்டும் என்பது
விதியாக மாறியது எனவும் அதுவே பிளிங்கன் சொல்லும் உலக ஒழுங்கு விதி எனவும் கொள்வோம். Reversal Changes Caused by Trump

Reversal Changes Caused by Trump

அமெரிக்கர்களின் சதுரங்க ஆட்டம்! Reversal Changes Caused by Trump

அப்படி உருவான ஒழுங்கு விதிக்கு இப்போது என்னவானது என்று பார்த்தால் ரஷ்யா தனது எரிபொருளை சீனாவுக்கு குழாய் அமைத்து சொந்த நாணயத்தில் பரிவர்த்தனை செய்து கொள்ள ஆரம்பித்தது. அது எப்படி சாத்தியமானது என்று
கேட்டால் சீனா இணைய நுட்பங்களில் அமெரிக்காவுக்கு இணையாக வளர்ந்து இந்த இரு நாடுகளும் யாரும் உள்ளே நுழைய முடியாத இணைய அரணை (Firewall)
ஏற்படுத்திக் கொண்டதோடு பணப்பரிவர்த்தனைக்கான இணையக் கட்டமைப்புகளையும்
(CHIPS, SPFS) ஏற்படுத்திக் கொள்ளும் அளவுக்கு தொழில்நுட்ப வளர்ச்சி
அடைந்ததுதான் காரணம். Reversal Changes Caused by Trump

இதன் வழியாக “அமெரிக்க டாலரில் எண்ணெய் விலை அவர்களின் இணைய வங்கிக்
கட்டமைப்பின் வழியாக மட்டுமே வணிகம்” என்ற ஒழுங்கு விதியை
உடைத்திருக்கிறார்கள் அல்லது மீறி இருக்கிறார்கள் என்று முடிவுக்கு
வரலாம். அதனால்தான் சீன, ரஷ்ய நாடுகளை எதிர்த்து சண்டையிடுவதும் விதியை மதித்து நடக்க நெருக்கடி கொடுப்பதும் மாற்று நாணயத்தில் வணிகம் செய்தால்
வரி விதிப்பேன் என்று மிரட்டுவதுமாக அமெரிக்கர்கள் இருந்திருக்கிறார்கள்.

போதாக்குறைக்கு சீனர்கள் மாற்று சூரிய, காற்று மின்னாற்றல் மற்றும்
சேமிக்கும் மின்கல நுட்பங்களில் தேர்ந்து உற்பத்தியைப் பெருக்கியதோடு
மாற்று மின்சார மகிழுந்துகளை மலிவாக உற்பத்தி செய்து பழைய எரிபொருளின் தேவையைக் குறைத்து அதனால் இயங்கும் மகிழுந்துகளின் சந்தையையும் இல்லாமல்
ஆக்கி வருகிறார்கள். Reversal Changes Caused by Trump

இப்படி மாற்று நாணய எரிபொருள் வணிகம், மாற்று எரிபொருள் இணைய மின் மகிழுந்துகள் உருவாக்கத்தின் மூலம் உலகமய கோட்டையையும் அதற்கான ஒழுங்கு
விதியையும் ரஷ்யாவும் சீனாவும் உடைத்து வந்திருக்கின்றன. அப்படி
உடைக்கும் ரஷ்யாவின் ஐரோப்பிய சந்தை மற்றும் எரிபொருள் வளத்தைக்
கைப்பற்றவும் சீனாவின் மாற்று எரிபொருள் இணைய நுட்பத்தை முடக்கவும் அமெரிக்கர்கள் முயற்சி செய்து இருக்கிறார்கள்.

அப்படிச் செய்த மறைமுக சிரிய, உக்ரைன் பதிலிப் போர்கள், சீனாவுடனான வர்த்தகப்போர், ஹாங்காங் உள்நாட்டுக் குழப்பம், தைவான் விடுதலை மிரட்டல்,
சில்லுகள் ஏற்றுமதி மற்றும் உற்பத்திக் கருவிகளுக்குத் தடை என
அமெரிக்கர்கள் செய்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில்
முடிந்திருக்கின்றன. Reversal Changes Caused by Trump

உக்ரைன் போரில் ரஷ்யாவின் வெற்றியும், சில்லுகளுக்கு விதித்த தடையை உடைத்து ஏழு நானோமீட்டர் சில்லுகளைச் சொந்தமாக உருவாக்கி இணையப் பொருள்களுக்கான சந்தையைச் சீனா தக்கவைத்ததும் இதுவரையிலுமான
அமெரிக்கர்களின் சதுரங்க ஆட்டத்தை முடித்து வைத்திருக்கிறது.

அது இழப்பை ஏற்றுக்கொண்டு இருப்பதைக் காப்பாற்றிக் கொள்வது அல்லது இன்னும் மூர்க்கமாக மோதி போரை விரிவாக்குவது என்ற இரண்டு தெரிவுகளை மட்டுமே அமெரிக்கர்களின் முன் நிறுத்தி இருக்கிறது.

எண்ணெய் மற்றும் தொழிற்துறை முதலாளிகள் நிறைந்த குடியரசுக் கட்சி ராணுவ வலிமை கொண்ட சீன, ரஷ்யர்களுடன் மோதி வெற்றிபெற முடியாது என்பதை உணர்ந்து
முதலாவது தெரிவை ஏற்று இருக்கிறது. வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த டிரம்ப்
நிர்வாகத்தின் செயலர் ருபியோ பல்துருவ உலகத்தை அடைந்து கொண்டிருக்கிறோம்
என்று அறிவித்து தோல்வியை ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

அந்த முடிவின் வெளிப்பாடாக டிரம்ப் போரினை நிறுத்தி ரஷ்யாவுடன் சமாதானம் பேசுகிறார். போரில் இழந்த பணத்தை ஈடுசெய்ய உக்ரைனின் கனிம வளத்தைக் கொடு என்று கழுத்தை நெறிக்கிறார். பதிலுக்கு எதுவும் தரப்படவில்லை என்பதால்
செலன்ஸ்கி முரண்டு பிடித்திருக்கிறார். Reversal Changes Caused by Trump

Reversal Changes Caused by Trump

ஒரே துருவமாக இருக்கும் அமெரிக்கா… இனி?

இதன்படி முந்தைய டாலர் உலக ஒழுங்கு உடைந்துவிட்டதை அமெரிக்கா ஏற்று
முன்னோக்கி நகர முனைந்து இருக்கிறது; வலுவான சீன, ரஷ்ய நாடுகளின் டாலர்
அல்லாத பரிவர்த்தனைகளை அமெரிக்கா ஏற்க தயாராகி விட்டது; அப்படியான உலகமே
வரப்போகும் பல்துருவ உலகம் என்று பொருளாகிறது. Reversal Changes Caused by Trump

அப்படியான மாற்று பரிவர்த்தனைக்கு வெறும் இணையக் கட்டமைப்பு மட்டும்
போதாது. மற்றவர்களை ஏற்க செய்ய வலுவான உற்பத்தி வலிமையும் மற்ற நாடுகள் ஏற்க வேண்டிய தேவையும் இருக்க வேண்டும். Reversal Changes Caused by Trump

உலக நாடுகளுக்குத் தேவையான எரிபொருள், கனிமங்கள், உணவுப்பொருள்கள்,
ஆயுதங்கள் என பெரும் உற்பத்தி வலிமை கொண்ட ரஷ்யாவும் மாற்று எரிபொருள், மின்கலம், இணையம், செயற்கை நுண்ணறிவு என நவீன நுட்பங்கள் அனைத்தும் பெற்ற
சீனாவும் அவர்களின் நாணயத்தில் பரிவர்த்தனை செய்யும் வாய்ப்பைப் பெற்று உலகின் முக்கிய துருவங்களாகின்றன.

ஒருதுருவமாக இருக்கும் அமெரிக்கா இவ்விரு நாடுகள் வைத்திருக்கும் அத்தனை நுட்பங்களையும் வளங்களையும் பெற்று இருப்பதால் உருவாகிக் கொண்டிருக்கும்
பல்துருவ உலகின் முக்கிய துருவமாகத் தொடரும் வாய்ப்பைப் பெறுகிறது.

இதன்படி உருவாகும் பல்துருவ உலகம் மூலப்பொருள்கள், கனிமங்கள் மற்றும்
உற்பத்தி தொழில்நுட்ப வலிமை வாய்ந்த நாடுகள் மற்ற நாடுகளுடன் அவரவர்
வலிமைக்கு ஏற்ப அவரவர் நாணயத்தில் பணப்பரிவர்த்தனை செய்துகொள்வது என்பதாக இருக்கும் என்பதைக் காட்டுகிறது.

Reversal Changes Caused by Trump

அமெரிக்காவின் மகுடிக்கு ஆடும் பாம்புகள்!

சீன, ரஷ்ய நாடுகளைப் பொறுத்தவரையில் இது ஏற்கனவே கட்டி எழுப்பப்பட்ட நடைமுறை எதார்த்தம். ஆனால், அமெரிக்கா இனிதான் கட்டி எழுப்ப வேண்டும்.
அப்படிக் கட்டியெழுப்ப பழைய டாலர் எரிபொருள் மைய உலகமயக் கட்டமைப்பை உடைக்க வேண்டியது முன்நிபந்தனை.

உலகமய எரிபொருள் டாலர் இணைய வங்கிக் கட்டமைப்பின் மூலம் கொழுத்த அமெரிக்க வங்கி மூலதனம் உலகம் முழுக்க பாய்ந்து மலிவாக உற்பத்தி செய்து கொண்டுவந்து அமெரிக்காவில் விற்று சொந்த நாட்டின் உற்பத்தியாளர்களை
சந்தையில் இருந்து வெளியேற்றி பணத்தின் மதிப்பைத் திரித்து பொருள்களின் விலையைக் கூட்டி தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டி வாங்க வழியற்றவர்களாக
மாற்றி இருக்கிறது.

எதிர்காலத்தில் சம்பாதிக்கப் போகும் வருவாயை இப்போதே கடனாகக் கொடுத்து செலவழிக்க வைத்து எல்லோரையும் கடன்காரர்களாக்கி இருக்கிறது. அமெரிக்க
அரசு வருவாய் பற்றாக்குறைக்கு வெளியிட்ட டாலர் கடன் பத்திரங்களின் அளவு 36 ட்ரில்லியனை எட்டிவிட்டது. வெளிநாட்டவர் இதில் முதலிடுவதை நிறுத்திவிட்டார்கள்.

போட்ட பணம் திரும்ப வரும் என்ற நம்பிக்கை பொய்த்து எல்லோரும்
தங்கத்துக்கு மாறி வருகிறார்கள். பற்றாக்குறையைக் குறைக்கவில்லை என்றால் இன்னும் மூன்றாண்டுகளில் அமெரிக்கா நெஞ்சுவலி வந்து துடிப்பது
தவிர்க்கவியலாதது என்கிறார் பணப்பொதி நிறுவனர் (Hedge fund) டாலியோ.

சுருக்கமாக எதிர்கால வருவாயை நம்பி கடன் வாங்கிய அரசும் மக்களும் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத நிலையை எட்டி இந்தக் கட்டமைப்பு இனியும் தொடர
முடியாத நிலையை எட்டிவிட்டது.

இதற்கான தீர்வு, கடன்காரர்களான வங்கி முதலாளிகளுக்கு மஞ்சள் நோட்டீஸ் கொடுப்பதுதான். அதற்கான ஏற்பாடாக மின்னணு நாணய பரிவர்த்தனைக்கு டிரம்ப்
நிர்வாகம் தயாராகி வருவதைப் போல் தெரிகிறது. மின்னணு நாணய கையிருப்பு குறித்த செய்திகள், வரி விதித்து இறக்குமதியைக் குறைத்து உள்நாட்டு உற்பத்தியைக் கூட்டும் வேலைகள் அதற்கான தொடக்கமாக இருக்கலாம்.

அமெரிக்கத் தொழிற்துறை இதனால் பலனடைந்து வரவேற்றாலும் பாதிக்கப்பட போகும்
வங்கி மூலதனம் ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து கொண்டு எதிர்த்து நிற்கிறது.
முன்பு வண்டிகளைப் பெருமளவு உற்பத்தி செய்து பழைய எண்ணெய் சார்ந்த உலகமய விரிவாக்கத்தில் பலனடைந்தது ஐரோப்பா.

தற்போது எந்த இயற்கை வளமோ, புதிய மாற்று எரிபொருள் இணைய மின் மகிழுந்து உற்பத்தி நுட்பமோ இன்றி வங்கி மூலதனத்துடன் ஒத்துழைத்துத் தோற்றுப்போன உக்ரைன் போரைத் தொடர வேண்டும் என்கிறது. அது இறப்பு உறுதியான நோயாளியின்
சுவாசக்குழாய் உயிர்வளியை எடுக்க மனமில்லாத உறவினர்களின் நிலையைப் போன்றது. எனவே ஐரோப்பியர்களின் வீழ்ச்சி தவிர்க்க இயலாதது.

உண்மையை ஏற்றுக்கொண்ட அமெரிக்கா தனது மகுடிக்கு ஆடும் பாம்புகளான இவர்களையும் மற்ற அணியையும் கிள்ளுக்கீரையாக மதித்துப் புறம்தள்ளி விட்டு
ரஷ்யாவுடன் சேர்ந்துகொண்டு ஐரோப்பிய எரிபொருள் சந்தையைப் பகிர்ந்துகொள்ள தயாராகிறது.

உடைக்கப்பட்ட எரிவாயுக் குழாயைச் சீர்செய்து ஐரோப்பிய சந்தையை ரஷ்யாவுடன் சேர்ந்து பகிர்ந்து கொள்ள தயாராகி விட்டதுபோல் தெரிகிறது. அதன் நீட்சி ஈரான் உள்ளிட்ட மற்ற எண்ணெய் வள நாடுகளையும் இதில் இணைத்துக்கொண்டு உலகச்
சந்தையைப் பகிர்ந்து கொண்டு எல்லோருக்கும் பொதுவான நாணய பரிவர்த்தனை முறையை உருவாக்குவதை நோக்கியதாக இருக்கலாம்.

சொந்த வங்கி மூலதனமும் அணிகளின் டாலர் கையிருப்பும் நாளையே இல்லை
என்றானால் அவர்களால் எதிர்த்து எதுவும் செய்ய முடியாது. ஆனால், எழுநூறு பில்லியன் டாலர் கடன் பத்திரத்தை வைத்திருக்கும் சீனா ஏற்றுமதியை நிறுத்தினால் எல்லாமே அமெரிக்காவில் நின்றுபோகும். அதோடு உற்பத்தியை மீளக்கட்டமைப்பது அவர்களின் துணையின்றி சாத்தியமில்லை.

எனவே, எரிபொருள் வணிகத்தின் தலைமையான ரஷ்யாவுக்கும் புதிய உற்பத்தி மையமான சீனாவுக்கும் ஏற்புடைய பணமதிப்பு, பணப்பரிவர்த்தனை விதிகளையும்
அதற்கான ஒப்பந்தத்தையும் எட்டும் திசையில் அமெரிக்கா நகர்கிறது என்று
அனுமானிக்கலாம். அமெரிக்கா தமது அணிகளைக் காவு கொடுத்து தன்னுடைய நலனை எதிரிகளுடன் இணைந்துகொண்டு காத்துக் கொள்ளலாம். இந்தக் கெட்ட கனவு
உண்மையானால் மற்ற ஐரோப்பிய ஆசிய அணிகளின் எதிர்காலம் நிச்சயம் இருண்ட காலம்தான்.

மிக சமீபத்தில் அமெரிக்க அணியான இந்தியாவின் கதி… என்று
இழுக்க வேண்டாம் அது அதோ கதிதான். Reversal Changes Caused by Trump

கட்டுரையாளர் குறிப்பு 

Reversal Changes Caused by Trump by Baskar Selvaraj

பாஸ்கர் செல்வராஜ் – தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share