விஜய் அரசின் முதல் சட்டசபைக் கூட்டத் தொடர்.. எத்தனை அறிவிப்புகள், என்ன தீர்மானங்கள்?

Published On:

| By Mathi

Vijay govt's 1st assembly session

Vijay govt’s 1st assembly session: மிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் அமைந்த 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் ஆளுநர் உரை, திருத்தப்பட்ட பட்ஜெட், துறைவாரியான மானியக் கோரிக்கைகள், விதி 110-ன் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகள், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தனித் தீர்மானங்கள் என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.

17-வது சட்டசபை

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அமைந்த 17-வது சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகம் 107 உறுப்பினர்களுடன் ஆட்சியமைத்தது. திமுக 59 உறுப்பினர்களுடன் பிரதான எதிர்க்கட்சியாகவும், அதிமுக 41 உறுப்பினர்களுடன் மூன்றாவது பெரிய கட்சியாகவும் உள்ளது.

ADVERTISEMENT

முதலமைச்சராக சி. ஜோசப் விஜய், சபாநாயகராக ஜே.சி.டி. பிரபாகர், துணை சபாநாயகராக எம். ரவிசங்கர், அவை முன்னவராக கே.ஏ. செங்கோட்டையன், எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பொறுப்பேற்றனர்.

ஆளுநர் உரை

புதிய விஜய் அரசின் முதல் முழுமையான அரசியல் சட்டப்பேரவைக் கூட்டம் ஜூன் 18 அன்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரின் உரையுடன் தொடங்கியது.

ADVERTISEMENT

ஜூன் 19 மற்றும் 22-ல் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. ஜூன் 23 அன்று முதலமைச்சர் விஜய் சுமார் 45 நிமிடங்கள் பதிலுரை அளித்து, தனது அரசின் முதல் 40 நாள் செயல்பாடுகளையும் முன்வைத்தார்.

விஜய் அரசின் முதல் பட்ஜெட்

விஜய் அரசின் முதலாவது முழு சட்டசபைக் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத் தொடர் ஆகஸ்ட் 5 அன்று தொடங்கி இன்று செப்டம்பர் 8-ந் தேதி வரை நடைபெற்றது.

ADVERTISEMENT

ஆகஸ்ட் 5 அன்று விஜய் அரசின் முதல் திருத்தப்பட்ட பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் என். மரிய வில்சன் தாக்கல் செய்தார். ஆகஸ்ட் 6 அன்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ஆர். வினோத் திருத்தப்பட்ட வேளாண் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்.

ஆகஸ்ட் 7 முதல் பட்ஜெட் மீதான விவாதமும், தொடர்ந்து துறைவாரியான மானியக் கோரிக்கைகளும் நடைபெற்றன. 17-வது சட்டப்பேரவையின் முதல் கேள்வி நேரம் ஆகஸ்ட் 27 அன்று நடைபெற்றது.

விதி 110-ன் கீழ் விஜயின் அறிவிப்புகள்

விஜய் அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடரின் முக்கிய அம்சமாக சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் வெளியிடப்பட்ட தொடர் அறிவிப்புகள் அமைந்தன. ஆகஸ்ட் 17 முதல் செப்டம்பர் 3 வரையிலான காலத்தில் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் விஜய் வெளியிட்டார்.

ரூ.6,220 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி

ஆகஸ்ட் 17 அன்று கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களில் ரூ.75 ஆயிரம் வரை முழுமையான தள்ளுபடி உள்ளிட்ட நிவாரணங்களை விஜய் அறிவித்தார்.

மருத்துவக் காப்பீடு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சம்

ஆகஸ்ட் 19 அன்று முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட வரம்பு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டது.

பெரம்பூரில் ரூ.300 கோடியில் 400 படுக்கைகளுடன் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, ரூ.351 கோடியில் ஏழு புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் உள்ளிட்ட மருத்துவக் கல்வி வசதிகள், ரூ.673.44 கோடியில் முதலமைச்சரின் புற்றுநோய் பராமரிப்பு இயக்கம் ஆகியவையும் அறிவிக்கப்பட்டன.

எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு வாகனம்

அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு வாகனம், மாதம் ரூ.75 ஆயிரம் வாகனப் படி, ரூ.25 ஆயிரம் உதவியாளர் படி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்கள்

ஆகஸ்ட் 24 அன்று தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு மூன்று இலவச LPG சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று விஜய் அறிவித்தார்.

ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் பயன்பெறும் என்றும், ஆண்டுக்கு சுமார் ரூ.4,000 கோடி செலவாகும் என்றும் அரசு மதிப்பிட்டது.

பெண்களுக்கு ‘வெற்றிப் பயணம்’

பெண்கள் மற்றும் திருநர்களுக்கான கட்டணமில்லாப் பேருந்துப் பயணத் திட்டம் அக்டோபர் 2 முதல் மேலும் விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

சாதாரணப் பேருந்துகளுடன் Express, LSS, Deluxe மற்றும் குறிப்பிட்ட புறநகர், மலைப்பகுதி பேருந்துகளுக்கும் திட்டம் விரிவுபடுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான ஆண்டு செலவு சுமார் ரூ.6,000 கோடி என மதிப்பிடப்பட்டது.

12 நாளில் இரண்டு முறை பால் கொள்முதல் விலை உயர்வு

பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலை ஆகஸ்ட் 19 அன்று லிட்டருக்கு ரூ.38-லிருந்து ரூ.41 ஆக உயர்த்தப்பட்டது. 12 நாட்களுக்குப் பின்னர் ஆகஸ்ட் 31 அன்று மீண்டும் ரூ.41-லிருந்து ரூ.44 ஆக உயர்த்தப்பட்டது.

ரூ.55,628 கோடி மின்திட்டங்கள்

மின்துறையில் ரூ.33,066 கோடி மின் தொடரமைப்பு மேம்பாடு, ரூ.20,800 கோடி தூத்துக்குடி Supercritical Thermal Power Station, ரூ.1,762 கோடி சென்னை மின் பகிர்மான மேம்பாடு என மொத்தம் ரூ.55,628 கோடி மதிப்பிலான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

இதுதவிர காஞ்சிபுரம் மதுரமங்கலத்தில் Semiconductor & Electronics Manufacturing Park, கோவையில் ரூ.400 கோடி FinTech Hub, திருச்சியில் Multi-Modal Logistics Hub ஆகிய திட்டங்களும் அறிவிக்கப்பட்டன.

ரூ.4,800 கோடி கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம்

செப்டம்பர் 2 நகர்ப்புற உள்கட்டமைப்பு அறிவிப்பில் மட்டும் சுமார் 20 முக்கியத் திட்டங்கள் இடம்பெற்றன. மீஞ்சூரில் ரூ.4,800 கோடியில் 400 MLD கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம், மதுரையில் ரூ.2,400 கோடி பாதாளச் சாக்கடை, நகர்ப்புறச் சாலைகளுக்கு ரூ.1,850 கோடி, நகர்ப்புற உள்ளாட்சிப் பள்ளிகளுக்கு ரூ.335 கோடி உள்ளிட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

டிஜிட்டல் டிரைவிங் லைசென்ஸ்; போராட்ட வழக்குகள் வாபஸ்

செப்டம்பர் 15 முதல் ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்ற அன்றே டிஜிட்டல் டிரைவிங் லைசென்ஸ், புதிய வாகனங்களுக்கு டிஜிட்டல் ஆர்சி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

2021 மே முதல் 2026 ஏப்ரல் வரை அமைதியான போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறுவதாகவும் விஜய் அறிவித்தார். இதில் திருவண்ணாமலை SIPCOT, பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புப் போராட்டங்கள் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டன.

புதிய தலைமைச் செயலகம்

செப்டம்பர் 3 அன்று Tamil Nadu Olympic City, Motor Sports City மற்றும் சென்னையில் 20 லட்சம் சதுர அடியில் ரூ.1,200 கோடி மதிப்பில் புதிய ஒருங்கிணைந்த சட்டப்பேரவை–தலைமைச் செயலக வளாகம் அமைக்கப்படும் என்று விஜய் அறிவித்தார்.

சட்டசபையில் முக்கிய தீர்மானங்கள்

நலத்திட்ட அறிவிப்புகளுக்கு இணையாக அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்களையும் விஜய் அரசு கொண்டு வந்தது.

ஆகஸ்ட் 10: பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும்.

ஆகஸ்ட் 11: NEET முறையை நீக்கி பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு வழிவகுக்க மத்திய சட்டங்களில் மாற்றம் செய்ய வேண்டும்.

ஆகஸ்ட் 11: FCRA திருத்த மசோதாவைத் திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம்.

ஆகஸ்ட் 12: தொகுதி மறுவரையறையால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படக்கூடாது என்ற தீர்மானம்.

ஆகஸ்ட் 25: 2010 ஆகஸ்ட் 23-க்கு முன்பு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) இருந்து முழுமையான, நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

செப்டம்பர் 3: சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாகப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீர்மானம்

செப்டம்பர் 8: 2027 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சாதிவாரியான விவரங்களைத் தெளிவாகப் பதிவு செய்யவும், மத்திய–மாநில அரசுகளின் அதிகாரப்பூர்வ பட்டியல்களில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் (BC), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC), சீர்மரபினர் உள்ளிட்ட அனைத்து சமூகங்களின் பெயர்களையும் கணக்கெடுப்பு செயலியில் முன்கூட்டியே பதிவேற்றி, அந்தப் பட்டியலின் அடிப்படையில் சாதிவாரி விவரங்களைச் சேகரிக்கவும் மத்திய அரசை வலியுறுத்தும் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

செப்டம்பர் 8: தமிழ்நாட்டில் புதிய தனியார் பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கான குறைந்தபட்ச நிலப்பரப்பு விதிகளைத் தளர்த்தும் வகையில் தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு அதிமுக, பாமக, இடதுசாரிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share