முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரானது, கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 8 வரை நடைபெற்றது.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த மாதம் 5ஆம் தேதி தொடங்கியது. அன்று 2026-27ஆம் ஆண்டிற்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 6ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து ஆகஸ்ட் 7, 10, 11 ஆகிய தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 12ஆம் தேதி அமைச்சர் மரிய வில்சன் மற்றும் வேளாண் அமைச்சர் வினோத் ஆகியோர் பதிலுரை வழங்கினர். பின்னர், ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் துறை வாரியான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. மொத்தம் 55 துறைகள் இருப்பதால், தினந்தோறும் மூன்று முதல் நான்கு துறைகள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
கடந்த 3ஆம் தேதி, முதல்வரின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அதில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், த.வெ.க ஆட்சியில் நடந்த சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளைப் பட்டியலிட்டார்.
இதைத் தொடர்ந்து, நேற்று முதல்வர் விஜய் மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று, குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்தார். இந்நிலையில், சட்டப்பேரவையில் இன்று 11 மசோதாக்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து, கடந்த 21 நாட்களாக நடந்து வந்த சட்டமன்றக் கூட்டத்தொடர் நிறைவடைந்தது.
இறுதி நாளான இன்று சட்டப்பேரவை நிகழ்வுகள் அனைத்தும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் அவையை ஒத்தி வைத்தார்.
