2027ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் சாதி விபரங்களை மாநில மற்றும் ஒன்றிய அரசுகளால் வெளியிடப்பட்ட பட்டியலில் உள்ள சாதிப் பெயர்களின் அடிப்படையில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு கோரும் அரசினர் தனித் தீர்மானத்தை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் இன்று (செப்டம்பர் 8) சட்டப்பேரவையில் கொண்டு வந்து பேசினார்.
அப்போது அவர், “இந்திய அரசமைப்பு சட்டத்தின் ஏழாம் அட்டவணையில் ஒன்றியப் பட்டியலில் வரிசை எண் 69-ல் “மக்கள் தொகை கணக்கெடுப்பு” இடம்பெற்றுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டம், 1948-ன்படி இது நடத்தப்படுகிறது. இந்தச் சட்டம் கணக்கெடுப்பு அதிகாரிகளுக்குத் தேவையான தகவல்களைச் சேகரிக்கும் அதிகாரம் அளிக்கிறது. கடைசியாக 1931-ல் முழுமையான சாதிவாரியான கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது.
இந்திய சுதந்திரத்திற்குப் பின், 2011 வரை நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்புகளில் பட்டியல் சாதிகள் (Schedule Castes) மற்றும் பட்டியல் பழங்குடியினர் (Schedule Tribes) சாதிவாரியான விவரங்கள் மட்டுமே சேகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டன. இந்நிலையில், 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு முதன்முறையாக முழு சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு முதற்கட்டப் பணிகள் முடிவடைந்துள்ளது.
சமூக நீதி நிலைநாட்டுவதில் டாக்டர் அண்ணல் அம்பேத்கர், பண்டித ஜவஹர்லால் நேரு, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, வி.பி. சிங் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க பணிகள் போற்றத்தக்கதாகும். தமிழ்நாடு அரசு சமூக நீதிப் பாதுகாப்பு உறுதியாக இருப்பதுடன் மக்களுக்கு சமூக நீதி கிடைப்பதற்கு அரும்பாடுபட்ட அனைத்து தலைவர்களின் பங்களிப்பையும் நன்றியுடன் போற்றி வணங்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், ஒன்றிய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு முடிந்த பின்னர், தமிழ்நாடு அரசு சமூக நீதி கணக்கெடுப்பை நடத்துவோம் என்று 18.06.2026 அன்று ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசின் நிலைப்பாடு அதுவே ஆகும். 03.03.2027-ல் நிலவரப்படி மக்கள் தொகை விவரங்களை வெளியிடுவதை நோக்கமாக கொண்டு நடத்தப்படும் 2027 ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதற்கட்டப் பணிகளான வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு தமிழ்நாட்டில் 30.08.2026 அன்று நிறைவுற்றுள்ளது.
இரண்டாம் கட்டமாக பிப்ரவரி 27-ல் நடைபெற உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பிற்காக விவரங்கள் சேகரிக்கப்பட உள்ள 40 வினாக்கள் அடங்கிய பட்டியலை ஒன்றிய அரசு 14.08.2026 அன்று அரசிதழில் அறிவிப்பு செய்துள்ளது. அதில் வினா எண் பத்தில் “Schedule Caste” மற்றும் “Schedule Tribes” மற்றும் “Caste” என்கின்ற விவரங்கள் கேட்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சாதி விவரங்களை வீடுவீடாகச் சென்று சேகரிக்கும் இந்த நிகழ்வில், பட்டியல் சாதிகள் (Schedule Castes) மற்றும் பட்டியல் பழங்குடியினர் (Schedule Tribes) பெயர்களை கணக்கெடுப்பு செயலியில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள அரசுப் பட்டியலிலிருந்து நேரடியாகத் தேர்வு செய்யும் வகையில் சீராக அமைக்கப்பட உள்ளது. ஆனால், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு “Caste” என்கின்ற பிரிவின் கீழ் பொதுமக்கள் தெரிவிக்கும் பெயர்களை நேரடியாகத் தட்டச்சு செய்யும் திறந்த வெளி பதிவு முறை இடம்பெற உள்ளதாகத் தெரிகிறது.
இது பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மாநில மற்றும் ஒன்றிய அரசுகளால் ஏற்கனவே அங்கீகரிப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன. இதர பிற்படுத்தப்பட்ட பட்டியலைத் தவிர்த்து, திறந்தவெளி பதிவு முறையில் சாதி விவரங்களைச் சேர்ப்பது சரியான நடைமுறையாக இருக்காது. பொதுமக்கள் ஒரே சாதிக்கு பல்வேறு பெயர்களையோ அல்லது வட்டார வழக்குகளையோ குறிப்பிடும்போது தகவல்கள் தெளிவற்றதாக மாறும்.
அதனால்தான், புள்ளி விவரங்களை ஒப்பிட்டுத் தொகுப்பதில் சிரமங்கள் ஏற்படுவதோடு, கணக்கெடுப்பின் பயன்களும் முழுமையாகக் கிடைக்காமல் போகும். எனவே, ஒவ்வொரு மாநிலத்திலும் ஒன்றிய அரசிலும் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பட்டியல்களைத் தொகுத்து கணக்கெடுப்புச் செயலியில் முன்பதிவு செய்து, அதில் இடம்பெற்றுள்ள பெயர்களில் ஒன்றை மட்டுமே தெரிவு செய்யும் முறையை, டிராப்-டவுன் மெனு (Drop Down Menu) பின்பற்றுவதே சரியானதாக இருக்கும்.
சாதிவாரியான மக்கள் தொகை குறித்து துல்லியமான தரவுகள் கிடைப்பதன் மூலம் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் உண்மையான பிரதிநிதித்துவ நிலையை மதிப்பிடுவதற்கும், அவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம் மற்றும் சமூக மேம்பாட்டிற்குத் தேவையான கொள்கைகளும் நலத்திட்டங்களை தகுந்த முறையில் வடிவமைப்பதற்கும் அரசுகளுக்கு வலுவானதாக அடித்தளம் அமைக்கும்.
இந்நிலையில் 2027-ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிவாரி விவரங்கள் சேகரிக்கப்படும் ஒன்றிய அரசின் முடிவு அனைவருக்கும் சமநீதியும் சமூக நீதியும் உறுதி செய்ய துல்லியமான புள்ளி விவரங்கள் தேவை என்ற நோக்கில், கீழ்க்காணும் அரசினர் தீர்மானம் சட்டமன்றப் பேரவை முன் வைக்கப்பட்டுள்ளது. இந்த அரசின் தீர்மானத்தினை அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் ஒருமனதாக நிறைவேற்றித் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
தீர்மானம்:
இந்திய சுதந்திரத்திற்குப் பின்னர் நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்புகளில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சாதிவாரியான விவரங்கள் சேகரிக்கப்படுவது விடுபட்டுள்ள நிலையில், அனைத்து தரப்பினருக்குமான சமூக நீதியை உறுதி செய்யவும், அரசியலமைப்புச் சட்டத்தின்படி மாநில மற்றும் ஒன்றிய அரசுகளின் முறையான அறிவிப்பு செய்யப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சாதிப் பட்டியல்களின் அடிப்படையில் துல்லியமான விவரங்களைப் பெறுவது இன்றியமையாதது என கருதப்படுவதால், 2027-ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டப் பணியில், பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்குப் பின்பற்றுவதைப் போலவே இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் சாதி விவரங்களைச் சேர்க்கும்போது, மாநில மற்றும் ஒன்றிய அரசில் வெளியிடப்பட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் உள்ளிட்ட அனைத்து பிற்படுத்தப்பட்ட சாதிப் பட்டியல்களை கணக்கெடுப்புச் செயலியில் முன்னரே பதிவேற்றம் செய்து அதில் உள்ள பெயர்களின் அடிப்படையில் மட்டுமே விவரங்களைச் சேகரிக்க வேண்டும் என்று தெளிவற்ற தன்மை உருவாக்கும் திறந்தவெளி பதிவு முறையை முழுமையாகக் கைவிட வேண்டும் என்று ஒன்றிய அரசை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது.” என தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து விசிக, அதிமுக, பாமக பாஜக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர் தீர்மானம் மீது தங்கள் கருத்துகளை முன் வைத்த நிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியான திமுக இன்று பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் இந்த தீர்மானம் குறித்த விவாதங்களில் பங்கேற்க வில்லை.
இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில், “2027 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டப் பணியில், மாநில-ஒன்றிய அரசுகளால் அறிவிக்கை செய்யப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் பட்டியல்களைக் கணக்கெடுப்புச் செயலியில் முன்னரே பதிவேற்றம் செய்து துல்லியமான விவரங்களைச் சேகரிக்க வேண்டும் என்றும், குழப்பத்தை ஏற்படுத்தும் ‘திறந்தவெளிப் பதிவு முறையை’ கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் அவர்களால் கொண்டுவரப்பட்ட அரசினர் தனித்தீர்மானத்தை முழுமனதுடன் வரவேற்கிறேன்!
சமூகநீதியை உறுதிசெய்யும் இத்தீர்மானத்தை காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஏகமனதாக ஆதரித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், சில நாட்களுக்கு முன்பு சாதிவாரி கணக்கெடுப்பு குறித்துப் பேசி, சட்டப்பேரவையில் உடனடியாகத் தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.
ஆனால் இன்று சட்டமன்ற நிகழ்ச்சி நிரலில் இத்தீர்மானம் முன்கூட்டியே தெளிவாக இடம்பெற்றிருந்தும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவைக்கு வராததோடு, நேற்றைய நிகழ்வுகளைக் காரணம் காட்டி திமுகவினர் ரகளை செய்து, இன்று இந்த தீர்மானம் எடுத்துக்கொள்ளப்பட்டபோது அவையில் பங்கேற்காமல் புறக்கணித்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது! இன்றைய சட்டமன்ற நிகழ்ச்சி நிரலில் இத்தீர்மானம் முன்னரே இடம்பெற்றிருந்தும், அதை நன்கு அறிந்திருந்தும் நேற்றைய விவகாரத்தைச் சாக்காக வைத்து ராகளை செய்ததன் மூலம், ஓபிசி இடஒதுக்கீடு மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு போன்ற முக்கிய உரிமைகள் சார்ந்த பிரச்சினையில் திமுக பங்கேற்காமல் போனது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது!” என தெரிவித்துள்ளார்.
