தேர்தல் செலவுக்காகத் தன்னிடம் பெற்ற ரூ.4.5 கோடியைத் திருப்பித் தராமல் ஏமாற்றியதாக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் ஆலங்குடி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தன விமல், முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் கிரிமினல் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தேர்தல் செலவுகளைச் சமாளிக்கும் திறனை நிரூபிக்கத் தன்னிடம் ரூ.4.5 கோடி பெற்ற விஜயபாஸ்கர், வேட்புமனு தாக்கல் முடிந்ததும் பணத்தைத் திருப்பித் தருவதாகக் கூறினார் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு வழக்கறிஞர் அருண் அன்புமணி, இலுப்பூர் காவல் துறையினர் இந்தப் புகார் தொடர்பாகப் புகார்தாரருக்கு கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி சம்மன் அனுப்பியிருந்ததாகவும், அதற்கு அவர் செப்டம்பர் 10ஆம் தேதி வரை அவகாசம் கோரியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி, இதுகுறித்த விசாரணையின் முன்னேற்ற அறிக்கையை செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யக் காவல்துறைக்கு உத்தரவிட்டார். மேலும், இந்தப் புகார் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிடக் கோரியும் மனுதாரர் மனு தாக்கல் செய்துள்ளார்.
பின்னணி விவரம்:
கடந்த 2025 நவம்பர் 11ஆம் தேதி ஆலங்குடியில் போட்டியிடுமாறு தன்னை அழைத்த விஜயபாஸ்கர், தேர்தல் செலவுகளுக்கு ரூ.5 கோடி வரை தேவைப்படும் என்று கூறியுள்ளார். இதன் அடிப்படையில் பல்வேறு வழிகளில் ரூ.4.5 கோடியைத் திரட்டிய தனவிமல், கடந்த மார்ச் 11ஆம் தேதி புதுக்கோட்டையில் உள்ள ஒப்பந்தக்காரர் சோத்துப்பாளை முருகேசன் அலுவலகத்தில் அந்தப் பணத்தை வழங்கியதாகத் தெரிவித்துள்ளார்.
பின்னர் ஆலங்குடி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் விஜயபாஸ்கரிடம் பணத்தை திரும்பி தருமாறு கேட்ட போது ரூ.50 லட்சத்தை மட்டுமே அவர் திருப்பிக் கொடுத்துள்ளார். மீதமுள்ள பணத்தைக் கேட்டபோது தராததுடன், தனது தந்தையின் சொத்தை அடமானம் வைத்துத் தருவதாகக் கூறிய ரூ.10 லட்சமும் வழங்கப்படவில்லை என்று மனுதாரர் குற்றம்சாட்டியுள்ளார்.
பணத்தைத் திருப்பிக் கேட்டு இதுவரை 14 முறை விஜயபாஸ்கரைச் சந்தித்த போதிலும் உரிய பதில் கிடைக்கவில்லை என்றும், அரசியல் செல்வாக்குமிக்கவராகவும் தற்போது ஆளும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்தவராகவும் உள்ள விஜயபாஸ்கர், தான் பணத்தைக் கேட்கும்போதெல்லாம் மிரட்டும் வகையில் நடந்துகொள்வதாகவும் தனது பிரமாணப் பத்திரத்தில் தன விமல் குறிப்பிட்டுள்ளார்.
