சட்டமன்ற உறுப்பினர்களின் காவல் துறை மானியக் கோரிக்கையில் வைத்த கோரிக்கைகளுக்கு எந்த பதிலும் முதல்வர் விஜய்யின் பதிலுரையில் இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி உள்ளார்.
இதுகுறித்து இன்று (செப்டம்பர் 8) சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” காவல்துறையில் இணையவழி குற்றங்கள் அதிகரித்துள்ளது.
இணையவழி குற்றங்கள் தொடர்ச்சியாக FQL மற்றும் ஆன்லைன் முதலீடு மோசடிகள் நிறைய நடந்திருக்குது. குறிப்பாக மதுரை மாவட்டம், சிவகங்கை மாவட்டம், திண்டுக்கல் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் தங்களுடைய பணத்தை இழந்திருக்கின்றார்கள். சுமார் 1,000 கோடி ரூபாய் மக்களுடைய பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதைப் பற்றி நான் காவல் துறை மானியக் கோரிக்கையில் பேசுகின்ற பொழுது குறிப்பிட்டுப் பேசினேன். இதற்குப் பதில் கிடைக்கும்னு பார்த்தேன்; ஆனால், பதிலே கிடைக்கவில்லை.
இது மிகவும் முக்கியமான விஷயம்; ஆயிரம் கோடி என்பது சாதாரண விஷயம் இல்ல. அத்தனை பேரும் ஏழைகள். ஏழைகளுடைய பணத்தை நவீன முறையில், இந்த FQL முறையில் பணம் மோசடி செய்திருக்கிறார்கள். அதற்கு உண்டான தீர்வு காண்பதற்கு இந்த அரசு, இன்றைக்கு முதலமைச்சர், குறிப்பா முதலமைச்சர் காவல் துறை மானியக் கோரிக்கையில் பேசுவார் என்று எதிர்பார்த்தேன்; அதற்கும் பதில் கிடைக்கவில்லை. சாலை விபத்துக்களைத் தடுப்பதற்கு உண்டான நடவடிக்கை என்னவென்றும் சொல்லவில்லை. நீண்ட நாட்களாகப் பணியில் இருக்கின்ற காவல் துறையைச் சேர்ந்த அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு வேண்டும் என்று நாங்கள் குறிப்பிட்டிருந்தோம்; அதுவும் பதிலுரையில் கிடைக்கவில்லை.
அதேபோல, அடிப்படைச் சம்பளத்தை 18,000 ரூபாயில் இருந்து 27,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று கேட்டிருந்தோம்; அதுக்கும் பதில் இல்லை. ஆக, காவல்துறையினரின் கோரிக்கைகள் குறித்த எந்தவிதக் கேள்விக்கும் பதில் இல்லை. பிறகு பேச்சு திசை திரும்பிப் (Diversion) போய்விட்டது. பேசிக்கிட்டே இருக்கும்போது, இன்னும் சொல்லப்போனால் EOW (பொருளாதாரக் குற்றப் பிரிவு) வழக்குகள் தமிழகத்தில் அதிகரித்திருந்தது.
ஏழை எளிய மக்கள் தீபாவளிப் பண்டிகை, கைத்தறிப் பண்டிகை போன்ற காலகட்டங்களில் தாங்கள் அன்றாடம் உழைத்துச் சம்பாதித்த பணத்தை, அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய நிறுவனங்கள் சீட்டு நடத்துவதாகச் சொல்லி கவர்ச்சிகரமாகப் பேசி, “இன்றைக்கு ஒரு வருடம் பணம் போட்டால், மாதம் மாதம் இவ்வளவு ரூபாய் பணம் போட்டால், முதிர்ச்சி அடைகின்ற பொழுது இவ்வளவு பணம் உங்களுக்கு அதிகமாகக் கிடைக்கும்” என்று ஆசை வார்த்தை கூறி கவர்ச்சிகரமாக அறிவித்து, பணம் கட்ட வைத்து, அது முதிர்ச்சி பெறுகின்ற பொழுது அந்த நிறுவனத்தை மூடிவிட்டு வெளியே போய்விடுகிறார்கள். அப்போ அந்தப் பணத்தை மக்கள் இழந்து விடுகிறார்கள். இது அந்தப் பகுதியில் இருக்கிற உளவுத்துறைக்குத் தெரியாதா? அப்படிப்பட்ட நிலைமை இனி எதிர்காலத்தில் வரக்கூடாது என்று காவல் துறை மானியக் கோரிக்கையில் பேசினேன்; அதற்கும் பதில் இல்லை.
ஆக, இந்தப் பொருளாதாரக் குற்றப் பிரிவு (EOW) சரியான முறையில் செயல்படவில்லை. எனவே, இனி இந்த அரசு அதைக் கண்காணித்துச் செயல்பட வேண்டும் என்று அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்தேன்; அதற்கும் தகுந்த பதில் இல்லை. இன்றைக்குப் பதில் சொல்லும்போது திசைதிரும்பிவிடுகிறது.
45 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சம்பவத்தை எடுத்து அவர்கள் எதிர்க்கட்சியின் மீது ஒரு குற்றத்தைச் சுமத்துகிறார்கள். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் நடைபெற்ற ஒரு சம்பவம்… அதெல்லாம் பேசுகிறார்கள். அவையில் கலாட்டா… உங்களுக்கு எல்லாரும் தெரியும், உலகத்திலும் பத்திரிகையிலும் வெளியே வந்த செய்தி இது. எப்போவோ நடந்தது; இதைப் பேசிப்பேசி இன்றைக்குக் களைத்துப் போய்விட்டது.
ஆக, அப்படிப்பட்ட ஒரு கருத்தைப் பேசி பொன்னான நேரத்தை வீணடிக்கிறார்கள். நீங்க பேசுங்கள், நாங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால், என்னுடைய கேள்விக்குப் பதில் சொல்லிட்டுப் பேசினால் பரவாயில்லை. ஆனால், நாங்கள் கேட்ட கேள்விக்கு எதுவுமே பதில் இல்லாமல், உங்களுடைய தனிப்பட்ட பிரச்சினையை, இன்றைக்கு ஆளுங்கட்சிக்கும், பிரதான எதிர்க்கட்சிக்கும் இருக்கின்ற பிரச்சினையை மாறி மாறிப் பேசி நேரத்தை வீணடித்ததுதான் இந்தத் தொடரின் மானியக் கோரிக்கையில் கண்ட பலன். காவல்துறை மானியத்தில் முழுமையான எந்த பதிலும் கிடைக்கவில்லை.
முதல்வர் பதிலுரையில், “கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் சீண்டல்கள், போதைப்பொருள் உட்பட நீண்ட காலமாக இருந்து வருகிறது; நாங்கள் வந்தவுடன் திடீரென்று நிறுத்த முடியாது” என்று சொல்வது தவறு. பொறுப்புள்ள முதலமைச்சரின் தலைமையில் இருக்கும் அரசாங்கம்.. அவரது தலைமையின் கீழ் உள்ள இலாகாதான் காவல்துறை; அவர்தான் இதைத் தடுக்க வேண்டும். அவரே இப்படிப் பதில் சொன்னால் யார் போய் தடுப்பது யாரிடம் போய்ச் சொல்ல முடியும்? ஆகவே, இந்த அரசாங்கம் ஒரு செயல் இழந்த அரசாங்கமாகத்தான் பார்க்கப்படுகிறது.” என்றார்.
