‘மிசா’வில் விஜய் ஜெயிலுக்கு போயிருந்தா அரை மணிநேரம் தாங்கி இருப்பாரா ? சிபிஎம் சரமாரி தாக்கு!

Published On:

| By Mathi

விஜய் மீது சிபிஎம் தாக்கு

மிசா கைதிகளை கொச்சைப்படுத்தி பேசுவது, சட்டசபையில் முதல்வர் விஜய்யின் உடல் மொழி உள்ளிட்டவைகளை முன்வைத்து சிபிஎம் கட்சி மிக கடுமையாக விமர்சித்துள்ளது.

முதல்வர் விஜய் அரசுக்கு ஆதரவு தரும் சிபிஎம் கட்சியின் முன்னாள் மாநில செயலாளரான தலைமை குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் இன்று (செப்டம்பர் 8) திண்டிவனத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இன்றைய தினம் மத்திய அரசாங்கத்தினுடைய போக்கு மிக மிக மோசமாகப் போய்க்கொண்டிருக்கிறது என்பது எல்லோருக்குமே தெரியும். 2 நாட்களுக்கு முன்னால் பார்த்தீர்கள் என்றால், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மற்றும் பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப் பயன்படக்கூடிய அந்த இஸ்ரோ அமைப்பையே இன்று தனியாருக்குத் தாரைவார்ப்பதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்கிறது.

ADVERTISEMENT

அதனுடைய ஊழியர் சங்கங்கள் எல்லாம் சேர்ந்து பல கடிதங்களை எழுதிய பிறகு, “நாங்கள் இஸ்ரோவை, அந்த அலுவலகத்தை தனியார்மயப்படுத்தவில்லை. ஆனால் அதனுடைய ராக்கெட் ஏவுவது உள்ளிட்டவற்றை…” ஒரு ஆண்டுக்கு 50 ராக்கெட் ஏவுவது…

அப்படியானால் இஸ்ரோவினுடைய பிரதானமான பணி ராக்கெட் ஏவுவதுதான். அதைத் தனியார் செய்தால் அப்புறம் இஸ்ரோவினுடைய பணி என்ன இருக்கிறது? இப்படி ஒட்டுமொத்தத்தில் எல்லாவற்றையுமே தனியாருக்குத் தாரைவார்க்கக்கூடிய ஒரு மோசமான நடவடிக்கையைத்தான் மேற்கொண்டு வருகிறார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.

ADVERTISEMENT

நாடாளுமன்ற கூட்டம்

அதுமட்டுமல்ல, இப்போது இந்த நாடாளுமன்றக் கூட்டம் எப்படி நடந்தது என்று நமக்குத் தெரியும். கிட்டத்தட்ட 20 நாள், 25 நாள் நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் ஒரு நாள்கூட முழுமையாக நாடாளுமன்றத்தில் மக்களுடைய பிரச்சினையை, எதிர்க்கட்சியினுடைய கருத்தைக் கேட்டு விவாதித்து பதில் சொல்கிற நிலைமை என்பது இல்லை.

25 நாள் நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் 17 நாள் பிரதமர் வரவில்லை. அதே மாதிரி உள்துறை அமைச்சரும் வரவில்லை. பிரதானமான கோரிக்கை எதிர்க்கட்சிகள் என்னவென்றால், சந்திரமந்தரில் நடைபெற்ற மாணவர் மீதான தாக்குதலுக்கு உள்துறை அமைச்சர் வந்து நேரடியாகப் பதில் சொல்ல வேண்டும் என்பதுதான் அவர்களுடைய அழுத்தமான வற்புறுத்தல்.

ADVERTISEMENT

உள்துறை அமைச்சர் வந்தால் ஒரு பதில் சொல்லி அன்றோடு இந்தப் பிரச்சினையை முடித்திருக்கலாம். ஆனால், அந்தப் பதிலைச் சொல்லி அங்கு நடந்த சம்பவத்திற்குத் தாங்கள் பொறுப்பேற்கக்கூடாது என்பதனாலேயே கடைசி வரைக்கும் நாடாளுமன்றத்திற்கு வராமல், நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல், ஒரு 25 நாள் நாடாளுமன்றக் கூட்டத்தையே வரலாற்றிலேயே இவ்வளவு மோசமாக எப்போது நடந்தது? இப்படித்தான் ஒரு மோசமான நிலையில் இன்று நடந்துகொண்டிருக்கிறது.

இப்போது அடுத்து இந்தத் தொகுதி மறுவரையறைத் திட்டத்தை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்ற முனைப்பில் முயற்சி செய்கிறார்கள். அதே மாதிரி ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பதையும் அவசர அவசரமாக எப்படியாவது நிறைவேற்ற முயற்சி செய்கிறார்கள்.

இதற்காக எதிர்க்கட்சிகளை உடைப்பது, எதிர்க்கட்சி எம்.பி.க்களை விலைக்கு வாங்குவது, பல கட்சிகளிடம் பேரம் பேசி தங்களுக்கு ஆதரவாக மாற்ற முயற்சி செய்வது வன்மையான கண்டனத்திற்குரியது. அதை எதிர்த்து நாடு முழுவதும் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட இடதுசாரிகள் போராடிக்கொண்டிருக்கிறோம் என்பதை நான் சொல்ல விரும்புகிறேன்.

விலைவாசி உயர்வு

இன்றைக்கு அதே மாதிரி பார்த்தீர்கள் என்றால் விலைவாசி உயர்வு தாங்க முடியாத அளவுக்கு ஏறிக்கொண்டே போகிறது. அரிசி விலை கடந்த 15, 20 நாட்களுக்குள் ஒரு கிலோவுக்கு ₹30, ₹35 ஏறியிருக்கிறது. அப்போது மத்திய அரசு, மாநில அரசு இந்தச் சமயத்தில் என்ன செய்கிறது என்றே யாருக்கும் தெரியவில்லை.

காய்கறியில் இருந்து மளிகைப் பொருட்கள் வரை எல்லாப் பொருட்களின் விலையும் உயர்ந்திருக்கிறது. தமிழ்நாட்டினுடைய வணிகர் சங்கத் தலைவர் என்ன சொல்கிறார் என்றால், இதில் மிகப்பெரிய அளவுக்குப் பதுக்கல்கள் இருக்கின்றன. பதுக்கல்கள் இருப்பதால்தான் விலைவாசி ஏறுகிறது என்கிறார். அப்போது இந்தப் பதுக்கல்களை ஏன் தடுக்க மாட்டேன் என்கிறார்கள்?

ஆகவே, மத்திய அரசானாலும் சரி, மாநில அரசானாலும் சரி இதைப் பற்றி ஆக்கபூர்வமாகக் கவனம் செலுத்துகிற மாதிரியோ அல்லது விலைவாசியைக் கட்டுப்படுத்த வேண்டும், மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறை இருப்பதாகவோ தெரியவில்லை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரையில், இந்த விலைவாசி உயர்வு மற்றும் அடிப்படையான பிரச்சினைகளை முன்வைத்து தமிழ்நாட்டில் ஒரு வார காலம் மாபெரும் மக்கள் சந்திப்பு இயக்கம் உட்பட நாங்கள் நடத்துகிறோம்.

தமிழ்நாடு சட்டமன்றம்

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடர் இன்றோடு நிறைவடைகிறது. ஒட்டுமொத்தமாக சட்டமன்ற நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்கிறார்கள். மக்கள் எல்லோருமே சட்டமன்றத்தில் என்ன நடக்கிறது என்பதை முதல் முறையாகப் புரிந்துகொள்கிற ஒரு வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

ஆனால், இந்தச் சட்டமன்ற நிகழ்ச்சிகளை முழுவதுமாகப் பார்த்தால் மக்களுடைய அடிப்படையான பிரச்சினைகளையோ, அதற்குத் தீர்வு காண்பது பற்றியோ எதையுமே ஆழமாகப் பேசவில்லை.

விலைவாசி உயர்வு இருக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டம் இருக்கிறது. விவசாயிகளுக்குப் பல நெருக்கடிகள் இருக்கின்றன. விவசாயி கஷ்டப்பட்டு நெல்லை உற்பத்தி செய்கிறார். அந்த நெல்லைக் கொள்முதலுக்குக் கொடுத்தால் 10 நாள், 15 நாள் கொள்முதல் செய்யாமல் களத்தில் போட்டு வைத்திருந்து மழையில் நனைந்து போகிறது. அதே மாதிரி அதைக் கொள்முதல் செய்த பிறகும் பாதுகாப்பாக வைக்கிற ஏற்பாடு செய்யாவிட்டால் திரும்பவும் மழையில் நனைந்து முளைத்துப் போய்விடும்.

இவ்வளவு கஷ்டப்பட்டு நெல்லை உற்பத்தி செய்து ஒரு பக்கம் விவசாயிகளுக்கு இழப்பு; கொள்முதல் செய்த நெல்லைப் பாதுகாக்காததால் அரசுக்கு இழப்பு. குறைந்தபட்சம் இதைக்கூடவா அரசால் செய்ய முடியாது? கொள்முதல் செய்யக்கூடிய நெல்லைப் பாதுகாத்து வைக்கிற ஏற்பாட்டைக்கூடவா செய்ய முடியாது?

அவ்வளவு தூரம் கவலை இல்லை. ஏதோ மேம்போக்காக எதை வேண்டுமானாலும் பேசலாம், மக்கள் ஏதாவது கேட்டுவிட்டுப் போவார்கள் என்பது மாதிரிதான் எல்லா ஆட்சிகளும் இதுவரைக்கும் இருந்திருக்கின்றன. இவர்களும் அதே மாதிரிதான் இருக்கிற மாதிரி தெரிகிறது.

அதே மாதிரி சட்டமன்ற விவாதத்தில் இதைப் பற்றியெல்லாம் பேசுவதற்கு வழியே இல்லை. சும்மா தனிப்பட்ட விரோதங்களைத் தீர்த்துக்கொள்கிற மாதிரிதான் பேசுகிறார்கள்.

முதலமைச்சர் விஜய் மீது விமர்சனம்

குறிப்பாக நேற்றைய தினம் நீங்கள் பார்த்தீர்கள் என்றால், காவல்துறை மானியத்தின் மீது முதலமைச்சர் விஜய் நேற்று பதில் சொன்னார். ஒரு மாநில முதலமைச்சர், எட்டு கோடி மக்களுடைய முதல் தலைவர், முதல் பிரதிநிதி என்கிற முறையில் எதிர்க்கட்சிகள் ஆயிரம் விமர்சனங்கள் வைக்கட்டுமே. அதற்கு நிதானமாகப் பதில் சொல்லலாம்.

உங்கள் மீது எந்தவிதமான குறையும் இல்லை என்றால், நீங்கள் நிதானமாகப் பதில் சொல்லி, சட்டம்-ஒழுங்கு பிரச்சினையில் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறோம், நாங்கள் இதைச் செய்திருக்கிறோம் என்று சொல்லலாம். குற்றம் இருக்கிறது, குறை இருக்கிறது என்றால் நாங்கள் திருத்திக்கொள்கிறோம் என்று அப்படித்தானே சொல்ல முடியும்?

குறையே இல்லாத ஒரு அரசு எப்படி இருக்க முடியும்? குறையைச் சுட்டிக்காட்டுவதுதானே எதிர்க்கட்சிகள் செய்வார்கள்?

அப்படிச் சுட்டிக்காட்டுகிறார்கள் என்பதற்காக நீங்கள் அவர்கள் மீதும், அவர்கள் உங்கள் மீதும் பரஸ்பரம் பழியையும் குற்றத்தையும் சுமத்திக்கொண்டிருந்தால் என்ன? பரஸ்பர குற்றச்சாட்டு வைக்கிற மன்றமா, பட்டிமன்றமா இது?

விஜய்யின் உடல் மொழி சரி இல்லை

சட்டமன்றம் என்பது பட்டிமன்றம் மாதிரி இவர்கள் அவர்கள் மீது குற்றச்சாட்டு, அவர்கள் இவர்கள் மீது குற்றச்சாட்டு என்று இருந்தால் அதற்கு அர்த்தமே இல்லை.

அதிலும் முதலமைச்சர் நேற்று பேசுகிறபோது அவருடைய உடல்மொழி எல்லாம் கொஞ்சம்கூட நியாயமே கிடையாது.

ஒரு பொறுப்புவாய்ந்த முதலமைச்சர் அப்படிப் பேசுகிறார் என்றால் நாளைக்கு அமைச்சர்கள் எல்லாம் எப்படிப் பேசுவார்கள்? அப்புறம் எம்.எல்.ஏ.க்கள் எல்லாம் எப்படிப் பேசுவார்கள்? இது எங்கே போய் முடியும்? அந்த மொழி, உடல்மொழிகூட ஒரு பொருத்தமான முறையில் அமையவில்லை என்பதுதான் ரொம்ப ரொம்ப வருத்தமாக இருக்கிறது.

சட்டசபையா பொதுக் கூட்டமா?

அதுமட்டுமல்ல, காவல்துறை மானியத்தில் காவல்துறை சம்பந்தமான விவாதத்தை நடத்தி முடித்தால் போதும். அதற்கு மேல் நீங்கள் அந்த ஊழல் குற்றச்சாட்டு, இந்த ஊழல் குற்றச்சாட்டு, சர்க்காரியா இதெல்லாம் என்ன? இது என்ன பொதுக்கூட்டமா?

அவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்கிறபோது உங்களிடம் ஆதாரம் இருந்தால், இந்த ஆதாரத்தைச் சட்டமன்றத்தில் சொல்வதால் என்ன பலன்?

உங்களிடம் ஆதாரம் இருந்தால் இப்போது உங்கள் கையில் காவல்துறை இருக்கிறது; ஊழல் தடுப்புத்துறை இருக்கிறது. வழக்குப் போடுங்கள். விசாரணை நடத்துங்கள். அவர்களுக்குத் தண்டனை கொடுங்கள். அதை வந்து சட்டமன்றத்தில் ஆதாரத்தைக் காட்ட வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?

ED போட்டிருக்கிற எல்லா வழக்கும் உண்மை என்று சொல்ல முடியாது. செந்தில் பாலாஜி மீது நிறைய குற்றச்சாட்டுகள், நிறைய ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். இது ED சொல்லித்தான் நமக்குத் தெரிய வேண்டுமா? அதை எதற்காக முதலமைச்சர் படித்துக் காட்ட வேண்டும்?

அவசரநிலை – மிசா கைதிகளை கொச்சைப்படுத்துவதா?

அதுமட்டுமல்ல, எல்லாவற்றையும்விட அவசரநிலை என்பது இந்த நாட்டினுடைய ஒரு துயரமான, ஒரு அரைச் சர்வாதிகார ஆட்சி நடந்த காலம்.

அந்த நேரத்தில் சிறைச்சாலைகளில் சட்டத்தைப் பயன்படுத்தி முன்னறிவிப்பு இல்லாமல் கைது செய்வது; கோர்ட்டுக்குப் போகாமல், நீதிமன்றத்திற்குப் போகாமல் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் அடைத்து வைக்கலாம்.

அடிப்படை உரிமைகளை முழுமையாகப் பறித்துவிட்டார்கள். Fundamental Rights-ஐயே suspend செய்துவிட்டு யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம்; எங்கு வேண்டுமானாலும் கொண்டுபோய் வைக்கலாம் என்கிற மாதிரி ஒரு அராஜக ஆட்சிதான் அன்று நடந்தது.

அன்று சிறைச்சாலைகள் முழுவதும் ஒரு கொடூரமான அடக்குமுறை ஆயுதமாகத்தான் பயன்படுத்தப்பட்டன. தமிழ்நாட்டுச் சிறைச்சாலைகளில் பலர் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். எங்களுடைய தலைவர் உட்பட கடுமையான தாக்குதலுக்கு ஆளானார்கள்.

ஆகவே, அந்தச் சிறைச்சாலையில் நடந்த தாக்குதலை நியாயப்படுத்துவதும், அந்தத் தாக்குதலுக்கு உள்ளானவர்களைக் கொச்சைப்படுத்துகிற மாதிரி ஒரு முதலமைச்சர் பேசுவதும் வன்மையான கண்டனத்திற்குரியது. ஆமாம், அதை வைத்து அதையெல்லாம் கொச்சைப்படுத்துவது என்ன நியாயம்?

ஒரு அவசரநிலையில் சர்வாதிகாரத்தை எதிர்த்து… நான் என்ன சொல்கிறேன் என்றால், அப்படிப்பட்ட நிலைமை விஜய்க்கு இருந்தால் அரை மணி நேரம் தாங்குவாரா?

அந்தத் தாக்குதலை நியாயப்படுத்துவதும், அந்தத் தாக்குதலுக்கு உள்ளானவர்களைக் கொச்சைப்படுத்துகிற மாதிரி நீங்கள் சட்டமன்றத்தில் பேசுவதும் ரொம்ப ரொம்ப அநாகரிகமானது; வன்மையான கண்டனத்திற்குரியது என்பதுதான் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் நாங்கள் தெரிவிக்க விரும்புகிறோம்.

சட்டம்-ஒழுங்கு

கேளுங்கள். சட்டம்-ஒழுங்கு என்பதைப் பற்றி நாங்கள் என்ன சொல்ல விரும்புகிறோம் என்றால், தனிப்பட்ட முறையில் சில கொலைகள் நடக்கின்றன; பல சம்பவங்கள் நடக்கின்றன. அதையெல்லாம் ஒரு சட்டம்-ஒழுங்கு பிரச்சினையாக நாம் இட்டுக்கட்ட முடியாது.

சொந்தக் கணவன்-மனைவிக்குள் சண்டை வருகிறது; உறவினர்களுக்குள் சண்டை வருகிறது; சொத்துத் தகராறு இருக்கிறது. அதே மாதிரி போதைப் பழக்கவழக்கம், லேண்ட் மாஃபியா, நில வியாபாரிகள் — இவர்களால்தான் அதிகமான கொலைகளும் அதிகமான சம்பவங்களும் நடக்கின்றன.

ஒட்டுமொத்தமான சட்டம்-ஒழுங்குக்கும் இதற்கும் சம்பந்தப்படுத்துவதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. சட்டம்-ஒழுங்கு என்றால் நாங்கள் எதைச் சொல்ல விரும்புகிறோம் என்றால், இன்று அமைதியான முறையில் மக்கள் போராடுவதற்கான அனுமதி இருக்கிறதா என்பதுதான் கேள்வி.

தவெக ஆட்சியில் மோசமான நடைமுறை

அந்த வகையில் ஒரு மோசமான நடைமுறைதான் த.வெ.க. ஆட்சியிலும் நீடிக்கிறது. கடந்த காலத்திலும் அப்படித்தான் இருந்தது; இப்போதும் அப்படித்தான் இருக்கிறது.

ஜனநாயக உரிமையாகப் போராடக்கூடிய போராட்டங்களுக்கு நீங்கள் அனுமதி கொடுக்காமல், அடக்குமுறை செய்து, கைது செய்து, ஊர்வலம் போகக்கூடாது, பொதுக்கூட்டம் போடக்கூடாது என்றால் அது என்ன சட்டம்-ஒழுங்கு?

சட்டம்-ஒழுங்கு என்ற பெயரில் எல்லோருக்கும் சமாதி கட்டுவதா சட்டம்-ஒழுங்கு? அதையெல்லாம் நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே அந்த அடிப்படையில்தான் நாங்கள் பார்க்கிறோம்.

அமைச்சரவையில் சேர மாட்டோம்

எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் தெளிவான முடிவு எடுத்திருக்கிறோம். எந்தச் சூழ்நிலையிலும் நாங்கள் அமைச்சரவையில் சேர மாட்டோம். அன்றைக்கு இருந்த சூழ்நிலையில் ஒரு ஆட்சி அமையாமல் போய்விடக்கூடாது. இவர்களைத் தவிர வேறு யாருக்கும் ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை. ஆகவே ஒரு ஆட்சி அமையாமல் போய்விடக்கூடாது என்பதற்காக நாங்கள் ஆதரவு கொடுத்தோம். அவ்வளவுதான்.

மற்றபடி அமைச்சரவையில் சேர்வதோ… நாளைக்குக்கூட அவர்கள் கூட்டணிக் கட்சிகள் எல்லாம் போகும் கூட்டத்திற்கு நாங்கள் போகப்போவது இல்லை. அந்தக் கூட்டணிக் கூட்டத்திற்கு நாங்கள் போகப்போவது இல்லை. தெளிவாக முடிவு செய்துவிட்டோம். ஏற்கனவே நாங்கள் சொல்லிவிட்டோம். போன மாதம் கூட்டியதற்கு நாங்கள் போகவில்லை. அப்புறம் இந்த மாதம் எப்படி போக முடியும்?

எங்களைப் பொறுத்தவரையில் இன்றைக்கு நாங்கள் திமுக கூட்டணியிலும் இல்லை; த.வெ.க. கூட்டணியிலும் இல்லை. எந்தக் கூட்டணியிலும் நாங்கள் இல்லை.

இடதுசாரிக் கட்சிகள் இணைந்து நாங்கள் செயல்பட ஆரம்பித்திருக்கிறோம். இடதுசாரிக் கட்சிகள் அடுத்த மாதம் திருச்சியில் ஒரு பெரிய பேரணி உள்ளிட்டவற்றை நடத்துகிறோம். அந்தப் பயணத்தை நாங்கள் தொடருவோம்.

இடைத்தேர்தல் ஆதரவு?

தேர்தல் வரும்போது, அந்தத் தேர்தல் வரும்போது அப்போது இருக்கிற சூழ்நிலைக்கு ஏற்ப என்ன செய்யலாம் என்பதை அப்போது முடிவு செய்யலாம். இடைத்தேர்தல் நேற்றுதான் அறிவித்திருக்கிறார்கள். இதற்கு மேல்தான் எங்கள் கட்சியில் கலந்து பேசி ஒரு முடிவு எடுக்க முடியும்.

யாருக்கு ஆதரவு கொடுப்பது, ஆதரவு கொடுக்கிறதா இல்லையா, யாருக்கு ஆதரவு கொடுப்பது எல்லாக் கேள்விகளையும் நாங்கள் இனிமேல் பேசித்தான் முடிவு எடுக்க முடியும்.

பிரதமர் வேட்பாளர்

எங்களைப் பொறுத்தவரையில் இந்தத் தேர்தலுக்கு முன்னால் யார் ஒருவரையும் பிரதமர் வேட்பாளராக முன்மொழிவது ரொம்ப ரொம்பத் தவறானது.

ஏனென்றால் இன்று பாஜகவை வீழ்த்த வேண்டும் என்றால் எல்லோரையும் ஒருங்கிணைத்து ஓர் அணியை உருவாக்கித்தான் செய்ய முடியும்.

அப்போது இவர் பிரதமர் வேட்பாளர், அவர் பிரதமர் வேட்பாளர் என்றால் அணிக்குள் குழப்பம்தானே வரும்? அந்த அணியை உடைக்கத்தானே அது உதவி செய்யும்?

ஆகவே ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளர் என்று சொன்னாலும் சரி அல்லது விஜய்யைச் சொன்னாலும் சரி, யாராக இருந்தாலும் பிரதமர் வேட்பாளரைத் தேர்தலுக்கு முன்னால் முன்மொழிவதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவே இல்லை.

கடந்த காலத்தில்கூட மன்மோகன் சிங் ஆகட்டும், தேவகவுடா இருக்கட்டும், வி.பி. சிங் இருக்கட்டும், அவர்கள் எல்லாம் பிரதமர் வேட்பாளராக முன்மொழியப்பட்டு தேர்தலைச் சந்திக்கவில்லை. தேர்தலுக்குப் பிறகு இருக்கிற சூழ்நிலையில் கூடி பேசி யாரோ ஒருவரைப் பிரதமராக முடிவு செய்வதுதான் யதார்த்தமானது; அதுதான் சாத்தியமானது. இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

அமைச்சர்களுக்குள் முரண்பாடு

செய்தியாளர்களின் கேள்விகளும் பதில்களும்

கேள்வி: சட்டமன்றத்தில் அமைச்சர் வன்னியரசு ஒரு கருத்துச் சொல்கிறார். பாஜகவை எதிர்த்து ஒரு பதிவு செய்கிறார். அதை ஆளும் கட்சியினுடைய அமைச்சரே அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று சொல்கிறார். எப்படி?

கே. பாலகிருஷ்ணன்: அது அவர்களுக்குள் எந்த அளவுக்குக் கொள்கைத் தெளிவு இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

அமைச்சர்களுக்குள்ளேயே ஒரு அமைச்சர் ஒன்று சொல்வதும், இன்னொரு அமைச்சர் அதை நீக்குங்கள் என்று சொல்வதும், அவர்களுக்குள் எந்த அளவுக்குக் கொள்கை உடன்பாடு இருக்கிறது என்பதைத்தான் நமக்குப் புரிய வைக்கிறது.

ஒரு கொள்கையில் தெளிவான புரிதல் இல்லை என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

கோவில் நிலங்கள்

பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான தீர்வை ஏற்படுத்தக்கூடிய வகையில், கோவில் நிலங்களில் குடியிருப்பவர்கள், விவசாயம் செய்பவர்கள், அதற்கான அமைப்புகளினுடைய பிரதிநிதிகள் என அனைத்து பிரதிநிதிகளையும் அழைத்துப் பேசி, இதைச் சுமுகமான முறையில் எப்படித் தீர்ப்பது என்பது சம்பந்தமான ஓர் ஆலோசனையை அரசு உருவாக்க வேண்டும்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share