விஜய், ஆதவ், நிர்மல்.. ‘ரவுண்டு’ கட்டி விளாசிய சிபிஎம் சண்முகம் – முழு பேட்டி!

Published On:

| By Mathi

CPM Slams Vijay and TVK Cabinet

தமிழக முதல்வர் விஜய், தவெக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் உள்ளிட்டோரை சிபிஎம் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் மிக கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னையில் இன்று (செப்டம்பர் 8) செய்தியாளர்களிடம் பெ. சண்முகம் கூறியதாவது:
இனாம் நிலம் என்றாலே அது கோயில் நிலம்” என்கிற தவறான புரிதலில், அங்கு குடியிருப்பவர்களையும் விவசாயம் செய்பவர்களையும் வெளியேற்றுகிற நடவடிக்கை தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உயர்நீதிமன்றங்களும், உயர்நீதிமன்ற நீதிபதிகளும் இதற்கு உடந்தையாகத் தவறான தீர்ப்புகளை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதன் விளைவாக, கோயில் நிலங்களில் குடியிருக்கக்கூடிய மக்களுக்கும், விவசாயம் செய்யக்கூடிய விவசாயிகளுக்கும் அரசுக்குமான முரண்பாடும் மோதலும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ADVERTISEMENT

கோவில் நிலம்- நிரந்தர தீர்வு

ஆகவே, புதிதாகப் பொறுப்பேற்றிருக்கிற தமிழக வெற்றிக் கழக ஆட்சியை நான் வற்புறுத்த விரும்புவது, இந்தக் கோயில் நிலப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான தீர்வை ஏற்படுத்தக்கூடிய வகையில், கோயில் நிலங்களில் குடியிருப்பவர்கள், விவசாயம் செய்பவர்கள், அதற்கான அமைப்புகளுடைய பிரதிநிதிகள் என அனைவரையும் அழைத்துப் பேசி, இதைச் சுமுகமான முறையில் எப்படித் தீர்ப்பது என்பது சம்பந்தமான ஓர் ஆலோசனையை அரசு உருவாக்க வேண்டும் என்று இந்தச் சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். அதை அவர்களுக்குச் சொந்தமாக்குவதைத் தவிர, இதற்கு ஒரு நிரந்தரமான தீர்வு இருக்கவே முடியாது.

ஆகவே, ஏழைகளுக்கு இலவசமாகவும், மற்றவர்களுக்கு விலையைத் தீர்மானித்து தவணை முறையில் பெற்றுக்கொண்டும் இடத்தைச் சொந்தமாக்க வேண்டும். அப்படி வரக்கூடிய பெருந்தொகையை சாமியின் பெயரில் டெபாசிட் செய்வதன் மூலமாக, கோயிலில் நடக்க வேண்டிய எல்லா விதமான நிகழ்வுகளையும் விழாக்களையும் மிகச் சிறப்பான முறையில் நடத்த முடியும். அதனால் கோயில்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் வரப்போவதில்லை.

ADVERTISEMENT

மதவெறியர்களுடைய அச்சுறுத்தலுக்குப் பயந்து, மாநில அரசாங்கங்கள் பயனாளிகளைப் பற்றிக் கவலைப்படாமல் இந்தப் பிரச்சினையை நீண்டகாலமாக இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்கள். மதவெறியர்களுக்குப் பயப்படாமல், பயனாளிகளுக்கு சட்டப்படியாகவும் நியாயமாகவும் சொந்தமாக்குவது என்கிற ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று தமிழ்நாடு அரசாங்கத்தை வற்புறுத்திக் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

இந்து சமய அறநிலையத்துறை, அரசாங்கம், சம்பந்தப்பட்ட பயனாளிகளுடைய பிரதிநிதிகள் எல்லோரும் உட்கார்ந்து ஒரு வழிமுறையை உருவாக்க வேண்டும் என்பதுதான் இந்த மாநாட்டின் வாயிலாக தமிழக அரசாங்கத்தை நாங்கள் வற்புறுத்த விரும்புவது.

ADVERTISEMENT

யாரையும் வெளியேற்ற கூடாது

அதற்கு இடையில் எக்காரணம் கொண்டும் யாரையும் வெளியேற்றக்கூடாது. விவசாயிகளாக இருந்தாலும், குடியிருப்பவர்களாக இருந்தாலும், வியாபாரிகளாக இருந்தாலும், யாரையும் நீதிமன்ற உத்தரவு என்கிற பெயரிலோ, ஆக்கிரமிப்பாளர்கள் என்று முத்திரை குத்தியோ வெளியேற்றக்கூடாது என்பதைத் திட்டவட்டமாக அரசுக்கு வற்புறுத்த விரும்புகிறேன்.

அரசாணை எண் 318

கடந்த ஆட்சியிலும் சரி, அதிமுக ஆட்சிக் காலத்திலும் சரி, நாங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தியிருக்கிறோம். அதிமுக ஆட்சிக் காலத்தில் அரசாணை எண் 318 என்கிற ஓர் அரசாணை வெளியிடப்பட்டது. அதன் மூலமாக கோயில் நிலங்களில் குடியிருக்கும் ஏழைகளுக்கு இலவசமாகப் பட்டா வழங்குவது என்கிற ஒரு நல்ல அரசாணை அது.

அதன் மூலமாக தமிழ்நாடு முழுவதும் மொத்தமாக சுமார் 600 ஏக்கரில் குடிமனைப் பட்டா வழங்கப்பட்டிருக்க முடியும். ஆனால், மதவாத அமைப்புகளைச் சார்ந்தவர்கள் நீதிமன்றத்திற்குச் சென்று, கோயில் நிலத்தை அரசாங்கம் இப்படி வாரி வழங்குகிறது, இலவசமாகக் கொடுக்கிறது என்று சொல்லி வழக்குத் தொடுத்து, அதற்குத் தடையாணையும் பெற்றனர். கடந்த எட்டு ஆண்டுகளாக அந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

அந்த வழக்கின் தடையை நீக்குவதற்கும், வழக்கை விரைவாக நடத்தி முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் திமுக ஆட்சிக் காலத்தில் எந்தவிதமான முயற்சியும் எடுக்கப்படவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் இதை எழுப்பியபோது, அப்போது இருந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “நாங்கள் கட்டாயம் தடையை விலக்குவோம். அந்த வழக்கை விரைவில் முடிவுக்குக் கொண்டுவருவோம்” என்றெல்லாம் சட்டமன்றத்தில் வாக்குறுதி கொடுத்தார். ஆனால் அது நடைபெறவில்லை.

திமுக ஆட்சிக்கு பாராட்டு

திமுக ஆட்சிக் காலத்தில் செய்த ஒரு நல்ல விஷயம் வாடகையைக் குறைப்பது. அரசாணை எண் 85 என்பது 2026 ஜனவரி மாதம் போடப்பட்டது. ஆனால் அதுவும் நடைமுறைக்கு வருவதற்குள்ளாகவே தேர்தல் உள்ளிட்ட விஷயங்கள் வந்ததால் நடைமுறைக்கு வராமல் போய்விட்டது.

ஆகவே சில நல்ல முயற்சிகள் நடைபெற்றன. ஆனால் அவை உரிய பலனை அளிக்கவில்லை என்பதைச் சொல்ல விரும்புகிறேன். புதிய ஆட்சி இந்தப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான தீர்வை ஏற்படுத்தக்கூடிய வகையில் செயல்பட வேண்டும் என்பதுதான் நான் கேட்டுக்கொள்ள விரும்புவது.

த.வெ.க. கூட்டணிக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்

கடந்த 4-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தினுடைய அமைச்சர்கள் நான்கு பேர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தார்கள்.
வருகிற 9-ஆம் தேதி, நாளைய தினம் த.வெ.க. அலுவலகத்தில், ஆட்சியில் பங்கேற்றிருக்கக்கூடிய கட்சிகள், ஆதரவு தரக்கூடிய கட்சிகளுடைய ஒரு கூட்டத்தை நடத்த இருப்பதாகவும், அந்தக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பங்கேற்க வேண்டும் என்றும் எங்களிடம் கேட்டுக்கொண்டார்கள்.

அதனுடைய நோக்கம் என்ன என்று கேட்டபோது, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் ஒரு புதிய கூட்டணியை உருவாக்குவது, அந்தக் கூட்டணிக்கான ஒரு குறைந்தபட்ச செயல்திட்டத்தை உருவாக்குவது, அடுத்து வரக்கூடிய உள்ளாட்சி மன்றத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் உள்ளிட்ட தேர்தல்களை இந்தக் கூட்டணியின் சார்பில் எதிர்கொள்வது என்கிற நோக்கத்தோடுதான் இந்த 9-ஆம் தேதி கூட்டம் கூட்டப்படுவதாக எங்களிடம் தெரிவித்தனர்.

நாங்கள் எங்களுடைய கட்சித் தலைவர்களுடன் கலந்து பேசிவிட்டுத் தெரிவிப்பதாக அன்றைக்கே அமைச்சர்களிடம் தெரிவித்தோம்.

அந்த அடிப்படையில், நாளைய தினம் த.வெ.க.வால் கூட்டப்பட்டிருக்கிற, கூட்டணியை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு நடத்தப்படுகிற அந்தக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது.

அந்தக் கூட்டத்தில் பங்கேற்பதில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்திருக்கிறது.

த.வெ.க. அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தொடரும்

ஆட்சி அமைப்பதற்கு நாங்கள் ஏற்கனவே வெளியில் இருந்து ஆதரவு கொடுத்திருக்கிறோம். அரசு தொடர்வதற்கான அந்த ஆதரவு தொடரும்.

குறைந்தபட்ச செயல்திட்டத்தைப் பொறுத்தவரை அவர்கள் என்ன முன்மொழிவுகளை வைத்திருக்கிறார்கள் என்று தெரியாது. இருந்தாலும், தமிழ்நாட்டு மக்களுடைய, அனைத்து பகுதி உழைப்பாளி மக்களுடைய நலனை முன்னிறுத்தி அதில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் என்னென்ன, கோரிக்கைகள் என்னென்ன என்பது சம்பந்தமான எங்களுடைய ஆலோசனையை அரசுக்குத் தெரிவிப்போம்.

அது நாளைக்கு அல்ல. பின்னர் அரசுக்கு எழுத்துப்பூர்வமாக, “இவற்றையெல்லாம் நீங்கள் செய்ய வேண்டும்” என்கிற முறையில் கட்சியின் சார்பில் எங்களுடைய ஆலோசனையைத் தெரிவிப்போம்.

ஏற்பதும் நிராகரிப்பதும் அவர்கள் விஷயம். ஆனால் எங்கள் கட்சியின் சார்பில் விவசாயிகள், தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுடைய நலன் சார்ந்த பிரச்சினைகளில் தமிழக வெற்றிக் கழக ஆட்சி எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது சம்பந்தமான கருத்துகள் அடங்கிய ஒரு குறிப்பை அரசுக்கு அனுப்புவோம்.

அமைச்சர்கள் எப்படி நேரடியாக எங்களைச் சந்தித்து அழைப்பு கொடுத்தார்களோ, அதேபோல நாங்களும் நேரடியாகச் சந்தித்து நாளைய கூட்டத்தில் பங்கேற்பதில்லை என்பதைத் தெரிவித்திருக்கிறோம்.

சத்தமன்றமாக, சண்டை மன்றமாக மாறிய சட்டமன்றம்

சட்டமன்றம் சட்டமன்றமாக நடைபெற வேண்டும். மக்கள் பிரச்சினைகளை விவாதிக்கிற மன்றமாகவும், அதற்கான தீர்வுகளையும் சட்டங்களையும் உருவாக்கக்கூடிய மன்றமாகவும் அது நடைபெற வேண்டும்.

சட்டமன்றம் சத்தமன்றமாகவும், சண்டை மன்றமாகவும் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அதற்கு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இருவருக்குமே பொறுப்பு இருக்கிறது. ஆளுங்கட்சி என்கிற முறையில் கூடுதல் பொறுப்பு த.வெ.க.வுக்கு இருக்கிறது.

இப்போது ஒவ்வொரு நடவடிக்கையையும் மக்கள் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். காலையில் தொடங்கி இரவு முடிகிற வரை அனைத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படித்தான் சட்டமன்றம் நடக்கும் என்றால், “அந்தச் சட்டமன்றமே வேண்டாம்” என்று மக்கள் நினைக்கிற அளவுக்கு மோசமான நிலைமை போய்க்கொண்டிருக்கிறது.

சட்டமன்றம் நடப்பது மக்களுடைய வரிப்பணத்தில்தான். அவர்களுடைய சொந்தப் பணத்தில் நடக்கவில்லை. மக்களுடைய வரிப்பணத்தில் நடக்கக்கூடிய சட்டமன்றத்தின் நேரம் முறையாகப் பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர, வீணான விவாதங்களில் சட்டமன்றத்தின் நேரம் விரயமாவதை நாங்கள் ஏற்கவில்லை.

அப்படி விரயமாகக்கூடாது என்கிற முறையில் ஆளுங்கட்சி நடந்துகொள்ள வேண்டும்.

இந்த ஊழல் விஷயத்தில் எங்களைவிட ஊழலை எதிர்த்துப் போராடுகிற வேறொரு கட்சியை தமிழ்நாட்டில் சொல்லுங்கள். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே சொல்லுங்கள். நாங்களும் மூன்று மாநிலங்களில் ஆளுங்கட்சியாக இருந்திருக்கிறோம்.

நேற்று நடந்த மானியக் கோரிக்கைக்கான பதில் என்பது காவல்துறை, தீயணைப்புத்துறை சம்பந்தமான கேள்விகளுக்குப் பதில் சொல்வதாக இருக்க வேண்டும்.

ஒரே ஒரு பதில் சொன்னாரா விஜய்?

அந்த விவாதத்தில் எழுப்பப்பட்ட ஏதாவது ஒரு கேள்விக்கு முதலமைச்சர் பதில் சொன்னாரா? நான் கேட்க விரும்புகிறேன். சம்பந்தா சம்பந்தமில்லாமல் அவருக்குப் பேசுவதற்கு நிறைய இடங்கள் இருக்கின்றன. பொதுக்கூட்டத்தில் பேசலாம்; பொதுக்குழுவில் பேசலாம்; தெருவில் பேசலாம்.

சட்டமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளில் ஒரு கேள்விக்குக்கூட முதலமைச்சர் முறையாகப் பதிலளிக்கவில்லை. இப்படி எப்போதுமே நடந்தது கிடையாது.
மானியக் கோரிக்கை என்றால் அதன் மீது விவாதம் நடத்தப்படுவதும், சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பக்கூடிய கேள்விகளுக்கு உரிய பதில்களையும் விளக்கங்களையும் அளிக்கக்கூடிய வகையில் பதிலுரை இருக்க வேண்டுமே தவிர, “நாங்கள் நினைத்ததெல்லாம் பேசுவோம்” என்கிற முறையில் சட்டமன்றத்தைப் பயன்படுத்துவதை நாங்கள் ஏற்கவில்லை.

மிசா குறித்து படியுங்கள்.. அமைச்சர்களுக்கு அட்வைஸ்

நான் த.வெ.க. அமைச்சர்களுக்கு ரொம்பப் பணிவாகத் தெரிவித்துக்கொள்கிறேன். முதலில் படியுங்கள். அவர்களுக்குச் சொல்கிற அட்வைஸ் அதுதான். முதலில் படியுங்கள்.

இஸ்மாயில் கமிஷன் அறிக்கை என்று ஓர் அறிக்கை இருக்கிறது. தமிழ்நாட்டில், சென்னை சிறைச்சாலைகளில் மிசா காலத்தில் நடைபெற்ற கொடுமைகள், வன்முறைகள், கைதிகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் சம்பந்தமாக இஸ்மாயில் கமிஷன் அமைக்கப்பட்டு, ஒரு விரிவான அறிக்கை இதே தமிழ்நாடு சட்டமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது.

மிசாவில் கைது செய்யப்பட்டவர்கள் எல்லாம் சமூக விரோதிகள் என்கிற முறையில் நிர்மல் குமார் சொல்லியிருப்பதெல்லாம் சிறுபிள்ளைத்தனமானது; அறியாமையிலிருந்து வெளிவரக்கூடிய கருத்து.

இந்தியா முழுவதும் பல்லாயிரக்கணக்கான மார்க்சிஸ்டுகள் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தனர். எங்களுடைய தலைவர்கள் ஆயிரக்கணக்கானோர் சிறையில் இருந்திருக்கிறார்கள். கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

ஆகவே, வரலாறு தெரியாமல் திமுக மீது இருக்கிற கோபத்தில் சகட்டுமேனிக்குச் சேற்றை வாரி வீசுவது என்கிற முறையில் அமைச்சர்கள் பேசுவது வன்மையான கண்டனத்திற்குரியது.

மிசா காலக் கொடுமைகள் சம்பந்தமாக அகில இந்திய அளவிலும் நிறைய ஆவணங்கள் இருக்கின்றன; தமிழ்நாடு சம்பந்தமாகவும் நிறைய ஆவணங்கள் இருக்கின்றன. அதையெல்லாம் தயவுசெய்து படியுங்கள்.

சர்க்காரியா ஆணையம்

சர்க்காரியா கமிஷனைப் பொறுத்தவரை, அந்த நேரத்தில் அது எதற்காக அமைக்கப்பட்டது என்பது எல்லாம் தெரியும். அதன் மூலமாக முறையாகக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு யாரும் கைது செய்யப்படவில்லை.
இதெல்லாம் சட்டமன்றத்தின் நேரத்தை விரயமாக்குகிற ஒரு தந்திரம்.

3 ஃபைல் பற்றி பேசலையே ஏன்?

மூன்று பைல்கள் தன்னுடைய டேபிளில் இருப்பதாக முதலமைச்சர் சொன்னார். ஏன் அதைப் பற்றிப் பேச மாட்டேன் என்கிறார்? சம்பந்தமே இல்லாமல் 50 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த சர்க்காரியா கமிஷனைப் பற்றி ஏன் பேசுகிறார்?

“மூன்று பைல்கள் என் டேபிளில் இருக்கின்றன. எப்போது வேண்டுமானாலும் நான் ஓபன் பண்ணுவேன்” என்று சொன்னார் அல்லவா? “ஓபன் பண்ணுங்கள்” என்று எதிர்க்கட்சித் தலைவர் சவால் விட்டார் அல்லவா?

ஏன் அதை ஓரமாக மூட்டை கட்டி வைத்துவிட்டு, 50 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த சர்க்காரியா பிரச்சினையைப் பற்றிப் பேசுகிறார்? இது திசைதிருப்புகிற தந்திரம்.

இப்போது என்ன இருக்கிறது என்று சொல்லுங்கள். ஊழல் நடந்திருந்தால், முறைகேடு நடந்திருந்தால், யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக இருக்கிறது. த.வெ.க. உறுதியாக இருக்கிறதா என்பதுதான் என்னுடைய கேள்வி. இவ்வாறு பெ.சண்முகம் தெரிவித்தார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share