விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர், அரசின் அறிவிப்புகளுக்கு இணையாக அடுத்தடுத்து எழுந்த சர்ச்சைகளாலும் கவனம் பெற்றது. இந்த கூட்டத் தொடர் ஆகஸ்ட் 5-ந் தேதி முதல் செப்டம்பர் 8 வரை நடைபெற்றது.
இக் கூட்டத் தொடரில், அமைச்சர்களின் பேச்சுகளை ஆளுங்கட்சி சபாநாயகரே அவைக்குறிப்பிலிருந்து நீக்கியது, அமைச்சரின் மைக்கை துண்டித்தது, நிதியமைச்சரின் தமிழ் உச்சரிப்பு தொடங்கி “நானே லஞ்சம் கொடுத்தேன்” என்ற பேச்சு, அமைச்சர் சரத்குமாரின் ‘பவுடர்’ வீடியோ, விஜயின் ‘3 Files’, ‘மன்மத நன்றி’, சர்க்காரியா–மிசா மோதல் என பரபரப்புகளுக்குப் பஞ்சமில்லை.
இறுதியில் முதலமைச்சர் விஜயின் பேச்சை அவைக்குறிப்பிலிருந்து நீக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் அவைக்காவலர்களால் ‘குண்டுகட்டாக’ வெளியேற்றப்பட்ட சம்பவம் வரை சென்றது.






விஜய் அரசின் முதலாவது சட்டசபை கூட்டத் தொடர் சர்ச்சைகள்
ஆதவ் அர்ஜுனாவின் போதைப்பொருள் பேச்சு நீக்கம்
ஆகஸ்ட் 17 அன்று போதைப்பொருள் விவகாரம் குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்த கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. “பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்தை நான் ஏற்க முடியாது” என்று கூறிய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், அந்தக் கருத்தை அவைக்குறிப்பிலிருந்து நீக்கினார்.
நிர்மல்குமாரின் பேச்சுக்கும் சபாநாயகர் ‘குட்டு’
சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் முந்தைய ஆட்சிகள், எம்.ஜி.ஆர்., கலைஞர் உள்ளிட்டோரை முன்வைத்து தெரிவித்த சில கருத்துகளுக்கும் எதிர்ப்பு எழுந்தது. விவாதத்துக்குத் தொடர்பில்லாத அரசியல் விமர்சனங்களைத் தொடர்ந்தபோது, “யாரைக் கவர்வதற்காக அமைச்சர் இவ்வாறு பேசுகிறார் என்று தெரியவில்லை. இனி இதை அனுமதிக்க முடியாது” என்று சபாநாயகர் எச்சரித்தார்.
ரஞ்சித்குமார் மைக் துண்டிப்பு
வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் தொடர்ந்து குறுக்கிட்டுப் பேசியதுடன், திமுகவை விமர்சித்த சில கருத்துகளுக்கும் எதிர்ப்பு எழுந்தது. அவரது சில கருத்துகளை அவைக்குறிப்பிலிருந்து நீக்கிய சபாநாயகர், ஒரு கட்டத்தில் அமைச்சரின் மைக் இணைப்பையே துண்டிக்க உத்தரவிட்டார்.
சுகாதார அமைச்சர் அருண்ராஜின் கருத்துகளும் நீக்கம்
சுகாதாரத்துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் தெரிவித்த சில கருத்துகளும் சர்ச்சையை ஏற்படுத்தின. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து அவரது சில கருத்துகள் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டன.
‘சங்கி அமைச்சர்’ Vs ‘3 மணி நேர Bathroom’
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமாருக்கும் இடையே நடந்த விவாதம் தனிப்பட்ட தாக்குதலாக மாறியது. நிர்மல்குமார், செந்தில்பாலாஜியை கரூர் கேங் என்று குறிப்பிட்டதற்கு பதிலடியாக உதயநிதி அவரை கிண்டலாக ‘சங்கி அமைச்சர்’ என்று குறிப்பிட்டார். அதற்குப் பதிலடியாக உதயநிதி தொடர்பான பழைய சர்ச்சையை எடுத்துப் பேசி ‘மூன்று மணி நேரம் Bathroom-ல் இருந்தார்’ என்று நிர்மல்குமார் விமர்சித்தார். இதற்கு, “பாத்ரூமில் யார் எத்தனை மணிநேரம் இருக்கிறார்கள் என்பதற்காகவே ஒரு அமைச்சரா”? என உதயநிதி பதிலடி தந்தார்.





போகிற போக்கில் அள்ளித் தெளிக்கும் இடமல்ல’
அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட கருத்துகள் சட்டசபை நேரலை வழியாக ஏற்கெனவே வெளியாகி சமூக ஊடகங்களில் பரவுவது குறித்து ஆகஸ்ட் 21 அன்று உதயநிதி கேள்வி எழுப்பினார். அப்போது, “போகிற போக்கிலே அள்ளித் தெளித்துப் போகிற இடமல்ல இது” என்று சபாநாயகர் எச்சரித்தார்.
நீக்கப்பட்ட பேச்சுகளை ‘Reels’ ஆக்கினால் உரிமை மீறல்?
அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட பகுதிகளை Reels, வீடியோக்கள் உள்ளிட்ட வடிவங்களில் சமூக ஊடகங்களில் தொடர்ந்து பரப்புவது சட்டப்பேரவையின் மாண்பைக் குறைக்கும் செயல் என்றும், உரிமை மீறல் நடவடிக்கைக்கு உள்ளாகக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டது.
அமைச்சர் சரத்குமாரின் ‘பவுடர்’ வீடியோ சட்டசபையில்
மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் சரத்தின் பழைய ஐபிஎல் வீடியோ சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது. அந்த வீடியோவில் இருந்த வெள்ளைப் பொடி போதைப்பொருள் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. தனது குழந்தைக்கான மாத்திரையைப் பொடியாக்கிய காட்சிதான் அது என்று சரத் ஏற்கெனவே விளக்கம் அளித்திருந்தார்.
அமைச்சர் சரத்குமார்- கே.என்.நேரு மோதல்
அதே விவாதத்தில் முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் தனது துறை தொடர்பாக ரூ.888 கோடி அளவுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி முறைகேடு நடந்ததாக புகார்கள் இருப்பதாக சரத்குமார் பேசினார். இதற்கு கே.என்.நேரு கடும் எதிர்ப்பு தெரிவித்து, நீதிமன்றத்தில் உள்ள விவகாரத்தை அவையில் பேசக்கூடாது என்றும் அந்தப் பகுதிகளை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


மரிய வில்சனின் தமிழ் உச்சரிப்பு
நிதியமைச்சர் என். மரிய வில்சன் பட்ஜெட் உரையை வாசித்தபோது அவரது தமிழ் உச்சரிப்பு, ஆங்கிலப் பயன்பாடு ஆகியவை விமர்சிக்கப்பட்டன. திமுக எம்.எல்.ஏ. திமு ராஜேந்திரன், நிதியமைச்சர் பிழையில்லாமல் தமிழில் பேச முயற்சிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையிலேயே வலியுறுத்தினார்.
தமிழ் விவாதத்தில் கிறிஸ்தவத்தை குறிப்பிட்ட மரிய வில்சன்
அதற்குப் பதிலளித்த மரிய வில்சன், கிறிஸ்தவம் தனக்கு “அன்பு மொழி, அமைதி மொழி, இரக்கத்தின் மொழி” ஆகியவற்றைக் கற்றுக்கொடுத்ததாகப் பேசியது சர்ச்சையை மேலும் தீவிரப்படுத்தியது.
சபாநாயகர் தலையிட்டு அமைச்சரை அமைதிப்படுத்தினார். பின்னர் மரிய வில்சன், “அன்றைக்கு கொஞ்சம் ஆவேசப்பட்டது உண்மைதான்” என்றும் தமிழ் தனது தாய்மொழிதான் என்றும் விளக்கமளித்தார்.
‘நானே லஞ்சம் கொடுத்தேன்; நானே ஆதாரம்’
ஆகஸ்ட் 24 அன்று மரிய வில்சன் மற்றொரு பரபரப்பை ஏற்படுத்தினார். முந்தைய திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையில் கல்வி நிறுவனங்கள் தொடர்பான அனுமதிகளைப் பெற பணம் கொடுக்க வேண்டியிருந்ததாகக் குற்றம்சாட்டிய அவர், தானும் பாதிக்கப்பட்டதாகவும் “நானே சாட்சி; நானே ஆதாரம்” என்றும் கூறினார்.
முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இதை மறுத்ததுடன், அமைச்சரே பணம் கொடுத்ததாகக் கூறுவதால் லஞ்ச ஒழிப்புத்துறை அவரை விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
‘3 துறைகளின் Files என் மேசையில்’ – விஜய்
முந்தைய திமுக ஆட்சியின் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் எங்கே என்ற கேள்வி எழுந்தபோது, மூன்று துறைகள் தொடர்பான ஆய்வுக் கோப்புகள் தனது மேசையில் இருப்பதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்தார்.
அவை ஆதாரங்களுடன் இருப்பதாகவும், “எதை எப்போது வெளியிட வேண்டுமோ அப்போது வெளியிடப்படும்” என்றும் கூறினார். “இடைத்தேர்தலிலாவது சில பேருக்கு நல்லது நடக்கணும்ல…” என்ற அவரது பேச்சும் அரசியல் கவனம் பெற்றது.
ராஜ்மோகனின் ‘பிச்சை’ பேச்சு
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், ஆர்.எஸ்.பாரதியின் முந்தைய சர்ச்சைக்குரிய பேச்சை எடுத்துக் கூறி, “யாருக்கும் யாரும் பிச்சை போட வேண்டிய அவசியமில்லை; அம்பேத்கர் கொடுத்த உரிமையில்தான் வாழ்கிறோம்” என்ற பொருளில் பேசினார். திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பழைய சாதி தொடர்பான சர்ச்சைகளை மீண்டும் அவைக்குள் கொண்டுவராமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்குமாறு சபாநாயகர் அறிவுறுத்தினார்.
அமைச்சர் கீர்த்தனாவின் ‘சின்னப்பிள்ளை–O-Ring’ பேச்சு
அமைச்சர் கீர்த்தனா, மதுரையைச் சேர்ந்த சின்னப்பிள்ளை குறித்து பேசும்போது ‘O-Ring’ கண்டுபிடிப்பு உள்ளிட்ட தகவல்களைத் தெரிவித்தார். இந்தத் தகவல்கள் தவறானவை என்று எதிர்ப்பு தெரிவித்ததால் சர்ச்சையானது. வாஜ்பாய் சின்னப்பிள்ளையின் காலில் விழுந்த சம்பவம் எங்கு நடந்தது என்பது குறித்த அமைச்சரின் தகவலும் கேள்விக்குள்ளாக்கப்பட்டது.
கலைஞரும் சட்டசபையும்
கலைஞர் முதலமைச்சராக இருந்த காலத்தில் சட்டப்பேரவைக்கு வராமல் இருந்ததாக ஆளுங்கட்சித் தரப்பில் முன்வைக்கப்பட்ட விமர்சனம், திமுக உறுப்பினர்களின் கடும் எதிர்ப்பால் அவையில் சர்ச்சையாக மாறியது. கலைஞரின் அவை வருகை குறித்த வரலாற்றுத் தகவல்களை முன்வைத்து இரு தரப்பும் வாதிட்டன.
‘G Square மாப்பிள்ளை’ Vs ‘Lottery மருமகன்’
பரந்தூர் விமான நிலைய விவாதத்தின்போது அமைச்சர் நிர்மல்குமார் ‘G Square மாப்பிள்ளை’ என்று மறைமுகமாக விமர்சித்தார். இதற்கு திமுக தரப்பிலிருந்து ‘Lottery மருமகன்’ என்ற பதிலடி வந்தது. இதனால் நிர்மல்குமார், தங்கம் தென்னரசு, ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் இடையே கடுமையான வார்த்தைப் போர் ஏற்பட்டது.
மெரினாவில் காமராஜருக்கு இடம் மறுப்பா?
காமராஜர் மறைவின்போது அவரது உடலை நல்லடக்கம் செய்ய மெரினாவில் இடம் கேட்டும் கலைஞர் தலைமையிலான அரசு வழங்கவில்லை என்று காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் தாரகை கத்பட் கூறினார். இதற்கு திமுகவின் தங்கம் தென்னரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து, காமராஜருக்கு அரசு மரியாதை செலுத்திய விதம், காந்தி மண்டபம் அருகே நினைவிடம் அமைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட வரலாற்றுத் தகவல்களை முன்வைத்தார். இதனால் அவையில் காரசார விவாதம் ஏற்பட்டது.
முஸ்லிம்கள் குறித்த பேச்சால் நேருக்கு நேர் மோதல்
தவெக எம்.எல்.ஏ. மாதர் பதுருதீன், முந்தைய திமுக ஆட்சியில் முஸ்லிம்கள் குறித்து பேசப்பட்டதாகக் கூறி சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதற்கு திமுக உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இருதரப்பு உறுப்பினர்களும் இருக்கைகளிலிருந்து எழுந்து ஒருவரை ஒருவர் நோக்கிச் செல்லும் அளவுக்கு அவையில் பதற்றம் ஏற்பட்டது.
ஆதவ் அர்ஜுனா-கே.என்.நேரு ‘கூட்டணி’ மோதல்
சமூகநீதி தொடர்பான விவாதம் தேர்தல் கூட்டணியை நோக்கித் திரும்பியது. பல கட்சிகளின் கூட்டணி இல்லாமல் திமுகவால் வெற்றி பெற்றிருக்க முடியாது என்ற பொருளில் ஆதவ் அர்ஜுனா பேசினார். இதற்கு கே.என்.நேரு பதிலளிக்க, காங்கிரஸ் தரப்பும் விவாதத்தில் இணைந்ததால் கூட்டணி அரசியல் தொடர்பான வாக்குவாதமாக மாறியது.
எடப்பாடி பழனிசாமி-செங்கோட்டையன் மோதல்
6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்த விவகாரம் சட்டசபையில் எழுப்பப்பட்டபோது, அந்தத் தொகுதிகளுக்கு அமைச்சர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக ஆளுங்கட்சி தரப்பில் விளக்கப்பட்டது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். விவாதம் தீவிரமடைந்து பல அதிமுக உறுப்பினர்கள் ஒரே நேரத்தில் எழுந்து பேசியபோது, “இது என்ன பொதுக்கூட்டமா?” என்று சபாநாயகர் கண்டித்தார்.
எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு கார் – மீண்டும் அமளி
எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு வாகனம் வழங்கும் விஜய் அரசின் அறிவிப்பை திமுக தரப்பு பின்னர் மீண்டும் எழுப்பியது. அதற்கு ஆளுங்கட்சி தரப்பில் முந்தைய திமுக ஆட்சியில் நடத்தப்பட்ட கார் பந்தயத்தின் செலவு குறித்த கேள்வி முன்வைக்கப்பட்டது. இந்த விவகாரத்தை மீண்டும் மீண்டும் எழுப்ப வேண்டாம் என்று சபாநாயகர் அறிவுறுத்தினார்.
கனிமொழி சந்தோஷின் ‘மன்மத நன்றி’
கவுண்டம்பாளையம் தவெக எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ் தனது முதல் சட்டப்பேரவை உரையை முடிக்கும்போது “மனமார்ந்த நன்றி” என்பதற்குப் பதிலாக தவறுதலாக “மன்மத நன்றி” என்று கூறியது சமூக வலைதளங்களில் வைரலானது.
அருள் விக்னேஷும் ‘மன்மத நன்றி’
செப்டம்பர் 1 அன்று கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷும் அதேபோல் “மன்மத நன்றி” என்று கூறிவிட்டு உடனடியாக “மனமார்ந்த நன்றி” என்று திருத்திக்கொண்டார். அவையில் சிரிப்பலை எழுந்தது.
அமைச்சர் ஜெகதீஸ்வரியின் தமிழ் தடுமாற்றம்
சமூகநலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி மானியக் கோரிக்கைகளுக்குப் பதிலளித்தபோது சில தமிழ் வார்த்தைகளை வாசிக்கவும் உச்சரிக்கவும் தடுமாறியது சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டது. பின்னர் சட்டப்பேரவையிலேயே இதற்குப் பதிலளித்த அவர், தான் கற்றுக்கொண்டு வருவதாகவும் அடுத்த கூட்டத்தில் இன்னும் துணிச்சலாகப் பேசுவதாகவும் தெரிவித்தார்.

கருப்பையாவின் ஜல்லிக்கட்டு பேச்சு நீக்கம்
சோழவந்தான் தவெக எம்.எல்.ஏ. கருப்பையா ஜல்லிக்கட்டு தொடர்பாகப் பயன்படுத்திய குறிப்பிட்ட வார்த்தைக்கு அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
அந்த வார்த்தையை அவைக்குறிப்பிலிருந்து நீக்கிய சபாநாயகர், கருப்பையா மீண்டும் அதுகுறித்து விளக்க முயன்றபோது நீக்கப்பட்ட விஷயத்தை மீண்டும் விவாதிக்க முடியாது என்று தடுத்தார்.
விஜய்–உதயநிதி நேரடி மோதல்
செப்டம்பர் 3 காவல்துறை மானிய விவாதத்தில், விஜய் அரசின் 116 நாள் ஆட்சியில் சட்டம்–ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை முன்வைத்து உதயநிதி ஸ்டாலின் விமர்சித்தார்.
அப்போது விஜய், “அனைத்து கேள்விகளுக்கும் திங்கள்கிழமை விளக்கமாக பதிலளிப்பேன்” என்றும், “நான் பதிலளிக்கும்போது யாரும் எழுந்து ஓடிவிடக்கூடாது” என்றும் கூறியது மோதலைக் கூர்மையாக்கியது.

சர்க்காரியா–வீராணம்–மிசா–ED- சர்ச்சையான விஜய்யின் உருவ கேலி
செப்டம்பர் 7 அன்று காவல்துறை மானியத்துக்குப் பதிலளித்த விஜய், சர்க்காரியா ஆணையம், வீராணம் விவகாரம், மிசா மற்றும் அமலாக்கத்துறை ஆவணங்களை எடுத்துப் பேசி முந்தைய திமுக ஆட்சிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அமலாக்கத்துறை ஆவணங்களில் இருப்பதாகக் கூறி ‘party fund’ வசூல் குறித்த குற்றச்சாட்டையும் முன்வைத்தார். அப்போது, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்த விஜய்யின் உருவ கேலி கடும் விமர்சனத்துக்குள்ளாக்கி உள்ளது. இதனையடுத்து முதல்வர் விஜய் தமது உருவ கேலி செயல்பாட்டுக்கு வருத்தமும் தெரிவித்தார்.
பதிலளிக்க உதயநிதிக்கு வாய்ப்பு இல்லை – திமுக வெளிநடப்பு
விஜயின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க உதயநிதி ஸ்டாலின் முயன்றபோது உடனடியாக வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, சபாநாயகர் இருக்கையை நோக்கிச் சென்று முழக்கமிட்ட பின்னர் வெளிநடப்பு செய்தனர்.
விஜயின் பேச்சை நீக்க எ.வ.வேலு கோரிக்கை
செப்டம்பர் 8 அன்று அவை கூடியதும், விஜய் முந்தைய நாள் பேசிய சர்க்காரியா, மிசா உள்ளிட்ட பகுதிகளை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று திமுக கொறடா எ.வ.வேலு வலியுறுத்தினார். “முதலமைச்சரின் பேச்சை அவைக்குறிப்பிலிருந்து நீக்கத் தேவையில்லை” என்று சபாநாயகர் மறுத்தார்.

திமுக எம்.எல்.ஏ.க்கள் ‘குண்டுகட்டாக’ வெளியேற்றம்
சபாநாயகரின் முடிவை எதிர்த்து திமுக உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கமிட்டனர். பலமுறை எச்சரித்தும் போராட்டம் தொடர்ந்ததால் திமுக எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து திமுக எம்.எல்.ஏ.க்கள் அவைக்காவலர்களால் சட்டசபையிலிருந்து ‘குண்டுகட்டாக’ வெளியேற்றப்பட்டனர்.
எ.வ.வேலு மீது ரூ.2,000 கோடி உரிமை மீறல் பிரச்சினை
இந்தப் பரபரப்புக்குப் பின்னர் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, முந்தைய திமுக ஆட்சியில் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த எ.வ.வேலு மீது உரிமை மீறல் பிரச்சினையை எழுப்பினார். 2026–27 CRIDP உள்ளிட்ட திட்டங்களுக்கு சட்டப்பேரவையின் உரிய நிதி ஒப்புதலுக்கு முன்பே சுமார் ரூ.2,000 கோடிக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டதாக ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டினார். இது சட்டப்பேரவையின் நிதி அதிகாரத்தை மீறும் விவகாரம் என்று கூறி உரிமைக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்றும் கோரினார்.
இப்படி, ஆளுங்கட்சி அமைச்சர்களின் பேச்சுகளையே சபாநாயகர் நீக்கியதில் தொடங்கி, ‘பவுடர்’ வீடியோ, தமிழ் உச்சரிப்பு, ‘நானே லஞ்சம் கொடுத்தேன்’, ‘3 Files’, ‘மன்மத நன்றி’, ‘G Square மாப்பிள்ளை–Lottery மருமகன்’, விஜய்–உதயநிதி மோதல், சர்க்காரியா–மிசா விவாதம் என நாளுக்கு நாள் புதிய சர்ச்சைகள் சட்டப்பேரவையை ஆக்கிரமித்தன.
இறுதிநாளில் விஜயின் பேச்சை அவைக்குறிப்பிலிருந்து நீக்கக் கோரிய திமுகவின் போராட்டம், திமுக எம்.எல்.ஏ.க்கள் ‘குண்டுகட்டாக’ வெளியேற்றப்பட்டதில் முடிந்தது. அதைத் தொடர்ந்து எ.வ.வேலு மீது ரூ.2,000 கோடி திட்டங்கள் தொடர்பாக உரிமை மீறல் பிரச்சினையும் எழுப்பப்பட்டதால், விஜய் அரசின் முதல் சட்டசபைக் கூட்டத்தொடர் தமிழக அரசியலில் அதிக சர்ச்சைகளை உருவாக்கிய கூட்டத்தொடராகவும் மாறியது.
