சட்டமன்றத்தில் பதிலுரையின் போது தனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டது என முதல்வர் ஜோசப் விஜய் விளக்கம் அளித்துள்ளார்.
முதல்வர் விஜய் நேற்று செப்டம்பர் 7 காவல்துறை மானிய கோரிக்கை விவாதத்தின் மீதான பதிலுரையின் போது சர்க்காரியா கமிஷன், மிசா உள்ளிட்ட கடந்த கால சம்பங்களை குறிப்பிட்டு திமுக மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். விஜய் தனது ஆவேச பேச்சுக்கு நடுவே மிசாவில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டது குறித்து பேசுகையில் முதல்வர் விஜய்யின் உடல் மொழி மிகவும் அநாகரிகமாக இருந்தது என்று பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வந்தனர்.
குறிப்பாக விஜய் ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தன. இதுகுறித்து சமூக வலைத்தளங்களிலும் கடும் விமர்சனங்கள் எழுந்தது.
இந்நிலையில் முதல்வர் ஜோசப் விஜய் இன்று (செப்டம்பர் 8) தனது எக்ஸ் பதிவில், “சட்டமன்றத்தில் 7.9.2026 அன்று காவல்துறை மானிய கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆகவே, தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.”என தெரிவித்துள்ளார்.
