வாக்கு திருட்டு (Vote Theft) விவகாரம் முதல் நீட் (NEET) தேர்வு வரையிலான பிரச்சனைகளை முன்வைத்து போராடுவது என எதிர்க்கட்சிகளின் “இந்தியா கூட்டணி” கூட்டம் முடிவு செய்துள்ளது.
டெல்லியில் இந்தியா கூட்டணியின் (India Alliance) கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் காங்கிரஸின் சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் மமதா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சி அகிலேஷ் யாதவ், ஆர்ஜேடி தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது: இந்தியா (INDIA) கூட்டணியின் கூட்டம் 22 கட்சிகளின் பங்கேற்புடன் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. அனைவரும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர், அதன் தொடர்ச்சியாக நாம் ஐந்து முக்கிய அம்சங்களில் ஒருமனதாக ஒருமித்த கருத்தை (consensus) எட்டியுள்ளோம். இன்று நாம் இந்த ஐந்து அம்சங்களுக்காகப் போராடவும், இவற்றின் மீது தீவிரமாகச் செயல்படவும், ஒன்றிணைந்து முன்னோக்கிச் செல்லவும் ஒப்புக்கொண்டுள்ளோம்.
எஸ்ஐஆர் குறித்து தலைமை நீதிபதியிடம் புகார்
- மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முறைகேடுகள்
- வாக்கு மற்றும் தேர்தல் முடிவுகளைத் திருடுவது ஆகியவை குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்குக் கடிதம் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அந்தக் கடிதம் மிக விரைவில் தலைமை நீதிபதியிடம் ஒப்படைக்கப்படும்.
தர்மேந்திர பிரதான் ராஜினாமா
நீட் (NEET) மற்றும் சிபிஎஸ்இ (CBSE) தேர்வுகளில் பங்கேற்ற லட்சக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கைக்குத் துரோகம் இழைத்ததற்குப் பொறுப்பேற்று, கல்வி அமைச்சர் உடனடியாகப் பதவி விலக வேண்டும்.
அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுக
தற்போதைய அபாயகரமான பொருளாதாரச் சூழ்நிலை, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் பிற மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகள் குறித்து விவாதிக்க மத்திய அரசு உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.
2 மாதங்களுக்கு ஒரு முறை கூட்டம்
அனைத்துக் கட்சிகளும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை சந்திக்க ஒப்புக்கொள்ளப்பட்டது… நாடாளுமன்ற ஒருங்கிணைப்புப் பணிகள், மழைக்காலக் கூட்டத்தொடரின் போது எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் தினமும் காலையில் நடைபெறும் கூட்டங்களுடன் தொடர்ந்து நீடிக்கும். இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
வைகோ சொன்னது என்ன?
இந்தியா கூட்டணி கூட்டம் குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் வைகோ கூறுகையில், “காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர் அம்மையார் சோனியா காந்தி அவர்கள், மல்லிகார்ஜுன கார்கே, மதிப்பிற்குரிய ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் அனைவரும் கலந்துகொண்ட கூட்டம். ஏறத்தாழ ஒரு மூன்று மணி நேரம் நடைபெற்றது.
காங்கிரஸ் தலைமையில் ஒன்றாக இணைந்து சிறு கருத்து வேறுபாடுகளுக்கும் இடம் கொடுக்காமல், லைக் எ ஒன் பெர்சன் ஆர்மி (like a one person army) அதைப்போல நாம் அடுத்து செயல்படுவது என்றும், இரண்டு மாதத்திற்கு ஒருமுறையில் இந்தக் கூட்டணிக் கட்சிகளுடைய கூட்டத்தை நடத்துவது என்றும், முதல் கூட்டம் ஆகஸ்ட் மாதத்தில் அனேகமாக 8-ஆம் தேதி ஹைதராபாத்திலே நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
SIR குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் வழக்கு தாக்கல் செய்வது; கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்… லட்சோபலட்சம் மாணவர்களுக்குப் பெரும் வேதனை அளித்த நிலைக்குக் காரணமான கல்வி அமைச்சர், ராஜினாமா செய்ய வேண்டும் என்பதையும் மிக முக்கியமாக வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. விலைவாசி உயர்வு, மக்கள் படும் அவதிகள், வேலையில்லாத் திண்டாட்டம் இவை அனைத்தும் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அரசு கூட்ட வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெரும்பாலும் ஒத்த கருத்துக்களை உடையவர்களாக, முரண்பாடுகளுக்கு இடம் கொடுக்காத வகையில் மேற்கு வங்கத்தின் முதலமைச்சர் சகோதரி மமதா பானர்ஜி அவர்களும் முழுக்க முழுக்க காங்கிரஸோடு இணைந்து, அதற்குப் பக்கபலமாக இருப்போம் என பேசினார். எல்லோரும் மனநிறைவு அடைகின்ற விதத்தில் தான் இந்தக் கூட்டம் நடைபெற்றது. திமுக, ஆம் ஆத்மி பங்கேற்காதது பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை என்றார்.
இந்தியா கூட்டணி (INDIA ALLIANCE) கூட்டத்தில் யார் யார் பங்கேற்றது?


- மல்லிகார்ஜுன் கார்கே (இந்திய தேசிய காங்கிரஸ்)
- சோனியா காந்தி (இந்திய தேசிய காங்கிரஸ்)
- ராகுல் காந்தி (இந்திய தேசிய காங்கிரஸ்)
- கே. சி. வேணுகோபால் (இந்திய தேசிய காங்கிரஸ்)
- ஜெயராம் ரமேஷ் (இந்திய தேசிய காங்கிரஸ்)
- மமதா பானர்ஜி (அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ்)
- அபிஷேக் பானர்ஜி (அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ்)
- கல்யாண் பானர்ஜி (அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ்)
- டெரெக் ஓ பிரையன் (அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ்)
- தேஜஸ்வி யாதவ் (ராஷ்டிரிய ஜனதா தளம்)
- சஞ்சய் யாதவ் (ராஷ்டிரிய ஜனதா தளம்)
- சுப்ரியா சுலே (தேசியவாத காங்கிரஸ் கட்சி – சரத்பவார்)
- உத்தவ் தாக்கரே – ஆன்லைன் (சிவசேனா – உத்தவ் பாலசாஹேப் தாக்கரே)
- ஆதித்யா தாக்கரே – ஆன்லைன் (சிவசேனா – உத்தவ்)
- சஞ்சய் ராவத் – ஆன்லைன் (சிவசேனா – உத்தவ்)
- ஜான் பிரிட்டாஸ் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி – மார்க்சிஸ்ட்)
- டி. ராஜா (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)
- பி. சந்தோஷ் குமார் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)
- அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாடி கட்சி)
- முஹிபுல்லா நத்வி (சமாஜ்வாடி கட்சி)
- உமர் அப்துல்லா (ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி)
- ஷாமி ஓபராய் (ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி)
- தீபங்கர் பட்டாச்சார்யா (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி – மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் – விடுதலை)
- ஹேமந்த் சோரன் – ஆன்லைன் (ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா)
- குஞ்ஞாலிக்குட்டி (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்)
- ஜோஸ் கே. மணி (கேரளா காங்கிரஸ் – மணி)
- வைகோ (மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் – மதிமுக)
- தொல். திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி – விசிக)
- ரவிக்குமார் (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி – விசிக)
- என். கே. பிரேமச்சந்திரன் (புரட்சிகர சோசலிசக் கட்சி – ஆர்எஸ்பி)
- பிரான்சிஸ் ஜார்ஜ் (கேரளா காங்கிரஸ் – ஜோசப்)
- ஜி. தேவராஜன் (அகில இந்திய பார்வர்ட் பிளாக்)
- மெகபூபா முஃப்தி (ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி – பிடிபி)
- ராஜ்குமார் ரோட் (பாரதிய ஆதிவாசி கட்சி)
- ஜெய்நாத் பாட்டீல் (இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கட்சி)
- சுனில் சிங் (லோக்தளம்)
- கபில் சிபல் (சுயேச்சை)
