மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் தங்களின் அடுத்தகட்ட அரசியல் வியூகங்களை வகுப்பதற்காக, எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ (INDIA Bloc) கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் தற்போது டெல்லி ‘அரசியலமைப்பு கிளப்பில்’ (Constitution Club) நடைபெற்று வருகிறது.
யார் யார் பங்கேற்பு?
இக்கூட்டத்தில்,
- மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி
- அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
- மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
- திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி
- சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்
- ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ்
- சிவசேனாவின் உத்தவ் தாக்கரே
- தேசிய மாநாட்டு கட்சி உமர் அப்துல்லா
- மக்கள் ஜனநாயகக் கட்சியின் மெகபூபா முப்தி
- தேசியவாத காங்கிரஸின் சுப்ரியா சுலே உட்பட 23 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
’காங்கிரஸ் துரோகம்’ – திமுக (DMK) புறக்கணிப்பு
இந்தக் கூட்டத்தை புறக்கணிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் ஜூன் 4-ந் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார். அந்த அறிக்கையில், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சி தங்களின் நீண்ட காலக் கொள்கை மற்றும் கூட்டணி தர்மத்தை முழுமையாகக் கைவிட்டு, ஆளுங்கட்சியான ‘தமிழக வெற்றி கழகத்துடன்’ (TVK) கைகோர்த்துக் கொண்டது. காங்கிரஸ் கட்சியின் இந்த திடீர் முடிவும், அது இழைத்த துரோகமும் லட்சக்கணக்கான தி.மு.க தொண்டர்களின் மற்றும் நிர்வாகிகளின் மனதை ஆழமாகக் காயப்படுத்தியுள்ளது.
தங்களின் இரத்தத்தை வியர்வையாக்கி கட்சியின் வளர்ச்சிக்காக உழைக்கும் நமது கழக உடன்பிறப்புகள் மற்றும் தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், அவர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும், காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து ஜூன் 8-ஆம் தேதி டெல்லியில் நடத்தும் ‘இந்தியா’ கூட்டணிக் கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்காது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என கூறியிருந்தார்.
ஆம் ஆத்மியும் விலகல்
இதேபோல ஆம் ஆத்மி கட்சியும் இந்தியா கூட்டணியின் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங், “இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி இடம் பெறவில்லை” என்றார்.
பங்கேற்ற வைகோ, திருமா
ஆனால் தமிழகத்தைச் சேர்ந்த மதிமுக, விசிக தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன் இன்றைய இந்தியா கூட்டணியில் பங்கேற்றனர்.
பதறவைத்த போஸ்டர்கள்



முன்னதாக இன்று காலையில் டெல்லியின் முக்கிய வீதிகளில் காங்கிரஸுக்கு அதிர்ச்சி தரக் கூடிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இந்தியா கூட்டணியில் உள்ள மமதா பானர்ஜி, சரத்பவார் உள்ளிட்டோர் ராகுல் காந்தியையும் காங்கிரஸையும் விமர்சித்து பேசிய கருத்துகளுடன் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனத்துடனும் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இது காங்கிரஸ் தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.
