டெல்லியில் ராகுல் காந்தியை ‘வெச்சு செஞ்ச’ போஸ்டர்கள்.. உதயநிதி போட்டோவும் இருக்கு!

Published On:

| By Mathi

Rahul Gandhi Targeted in Delhi Posters

இந்தியா கூட்டணியின் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறும் நிலையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை (Rahul Gandhi) விமர்சித்து இந்தியா கூட்டணியின் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளுடன் டெல்லி வீதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது காங்கிரஸுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தல்களுக்குப் பின்னர் டெல்லியில் இந்தியா கூட்டணி கூட்டம் இன்று கூட்டப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் திமுக, ஆம் ஆத்மி கட்சிகள் பங்கேற்கவில்லை.

ADVERTISEMENT

தமிழக சட்டசபை தேர்தலில் திமுகவுடன் கூட்டணியில் இருந்த காங்கிரஸ், வாக்கு எண்ணிக்கை முடிந்த மறுநாளே தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளித்தது. காங்கிரஸ் ‘முதுகில் குத்திய’ கோபத்தில் இருப்பதால் தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்கவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

டெல்லியில் ’அரசியலமைப்பு கிளப்’ அரங்கில் நடைபெறும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

ADVERTISEMENT

ராகுல் காந்திக்கு (RAHUL GANDHI) எதிராக போஸ்டர்கள்

இந்த நிலையில் இன்று காலை முதல் டெல்லியின் முக்கிய வீதிகளில் ராகுல் காந்தியையும் காங்கிரஸையும் விமர்சிக்கும் போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

டெல்லி சன்சத் மார்க் மற்றும் அசோகா ரோடு சந்திப்புப் பலகைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள ஒரு போஸ்டரில் இடப்பக்கம் ராகுல் காந்தியின் படமும், வலப்பக்கம் திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலினின் படமும் அச்சிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதில், “20 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் நமது முதுகில் சவாரி செய்து நமது உழைப்பில் வளர்ந்தது, ஆனால் இன்று அவர்களே நமது முதுகில் குத்தியிருக்கிறார்கள்” என்ற உதயநிதி ஸ்டாலின் கருத்து இடம் பெற்றுள்ளது.

மற்றொரு போஸ்டரில் ராகுல் காந்தியின் படத்துடன், மகாராஷ்டிராவின் முதுபெரும் அரசியல் தலைவரான என்.சி.பி தலைவர் சரத் பவாரின் படம் பெரிய அளவில் அச்சிடப்பட்டுள்ளது. அதில் ராகுல் காந்தியிடம் அரசியல் நிலைத்தன்மை குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இதேபோல ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி உள்ளிட்டோர் ராகுல் காந்தியை விமர்சித்த கருத்துகளும் போஸ்டர்களாக ஒட்டப்பட்டுள்ளன.

மமதா பானர்ஜி படத்துடனான போஸ்டரில், “காங்கிரஸ் தனது நம்பகத்தன்மையை இழந்து வருகிறது. நாம் இனி காங்கிரஸை சார்ந்து இருக்க முடியாது” என மமதா பானர்ஜி தெரிவித்த கருத்து இடம்பெற்றது.

மேலும் இந்த போஸ்டர்களின் கீழ் “தங்களுக்குள்ளேயே அடித்துக் கொள்ளும் ‘இண்டி’ (INDI) கூட்டணியினர், எப்படி ஒன்றாக இணைந்து (பா.ஜ.க-வை) எதிர்த்துப் போராடுவார்கள்?” என்கிற வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.

டெல்லியில் திரும்பிய இடங்களில் எல்லாம் ராகுல் காந்திக்கும் காங்கிரஸுக்கும் எதிரான இந்த போஸ்டர்கள் காங்கிரஸ் தலைவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share