இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று திரையுலகினராலும் ரசிகர்களாலும் அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா (வயது 84) இன்று (ஜூன் 10) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்.

1977-ஆம் ஆண்டு வெளியான ’16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராகத் தமிழ் திரையுலகில் கால் பதித்தவர் பாரதிராஜா. ரஜினி, கமல் மற்றும் ஸ்ரீதேவி போன்ற முன்னணி நட்சத்திரங்களை இயக்கி, ஒட்டுமொத்த திரையுலகின் கவனத்தையும் ஈர்த்தார். பெரும்பாலும் கிராமியப் பின்னணியில், எளிய மனிதர்களின் வாழ்க்கையைத் தனது தனித்துவமான திரைமொழியில் வெற்றிப் படைப்புகளாக மாற்றிய பெருமை இவருக்கு உண்டு. இதன்மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார்.

ADVERTISEMENT

திரைப்படங்களை இயக்குவது மட்டுமன்றி, பிற்காலத்தில் தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட இளம் தலைமுறை நடிகர்களின் படங்களில் தாத்தா கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார். பல திரைப்படங்களில் இவர் ஏற்ற குணச்சித்திர வேடங்கள், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.

கடந்த சில நாட்களாக வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைபாடு காரணமாகப் பாதிக்கப்பட்ட பாரதிராஜா, சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் இயற்கை எய்தினார். அவரது மறைவு செய்தி கேட்டு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகினரும், ரசிகர்களும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

ADVERTISEMENT

முதலமைச்சர் நேரில் அஞ்சலி:

பாரதிராஜாவின் மறைவுச் செய்தியை அறிந்த தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், உடனடியாக நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்றார். அங்கு மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share