“இயக்குநர் இமயம்” என தமிழ்ச் சமூகம் கொண்டாடும் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா (வயது 84) சென்னையில் இன்று ஜூன் 10-ந் தேதி உடல்நலக் குறைவால் காலமானார்.

தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றி அமைத்த இயக்குநர் இமயம் பாரதிராஜா, தேனி மாவட்டத்தின் அல்லிநகரத்தில் பிறந்தவர் (1941, ஜூலை 17). பெரியமாயத்தேவர்- மீனாட்சி அம்மாள் மகனாக பிறந்த பாரதிராஜா, இளம் வயதில் இருந்தே கலை, இலக்கியத்தில் ஆர்வம் கொண்டவராக, நாடகங்களை எழுதுவது, நடிப்பது என ஈடுபாடு கொண்டவராக திகழ்ந்தார். சுகாதார ஆய்வாளராக வாழ்க்கையை தொடங்கினாலும் அவரது திரை ஆர்வம் சும்மா விட்டுவிடவில்லை.

திரைப்படத்துறையில் நுழைவதற்காக பிரபல கன்னட இயக்குநர் புட்டண்ணா கனகலிடம் உதவி இயக்குநராக சேர்ந்தார். 1977-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கிய முதல் திரைப்படமான ‘16 வயதினிலே’ தமிழ் திரை உலகில் பெரும் ஆழிப்பேரலையாக தாக்கியது. அதுவரை ஸ்டூடியோ செட்களுக்குள் செயற்கையான வெளிச்சத்தில் உருவாகி வந்தன தமிழ்த் திரைப்படங்கள். ஆனால் பாரதிராஜா, தமிழ் மண்ணின் மனிதர்களிடம்.. கிராமத்தில்.. நிஜ மனிதர்களுடன் அவர்களது வாழ்வியலுடன் திரைப்படத்தைக் கொடுத்தார். பாரதிராஜாவின் மயிலும் சப்பாணியும் பரட்டையும் என்றென்றும் தமிழ் ரசிகர்கள் மனதில் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள்.

பாரதிராஜா தனது படங்களின் தொடக்கத்தில் , “என் இனிய தமிழ் மக்களே” என இடம் பெறும் அந்த கரகரத்த குரல் ஒவ்வொரு ரசிகனின் நெஞ்சில் ஆழப் பதிந்தது. பாரதிராஜாவைப் போல நானும் மக்கள் மொழியில் படம் எடுப்பேன் என கிளம்பிய இளைஞர்கள் ஓராயிரம் பேர் உண்டு.
பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில், புதிய வார்ப்புகள், அலைகள் ஓய்வதில்லை, மண்வாசனை, முதல் மரியாதை, கிழக்குச் சீமையிலே. இவை அனைத்தும் தமிழ் மண்ணின் கிராமத்து வாழ்வியலை அப்படியே திரையில் கொண்டு வந்தன. சிகப்பு ரோஜாக்கள் என்ற சைக்கோ த்ரில்லரையும், டிக் டிக் டிக் என்ற க்ரைம் த்ரில்லரையும், ஒரு கைதியின் டைரி என்ற ஆக்ஷன் படத்தையும் தந்து அசத்தினார் இயக்குநர் இமயம் பாரதிராஜா. வேதம் புதிது படத்தில் சாதியக் கட்டமைப்பிற்கு எதிராகவும், கருத்தம்மா படத்தில் பெண் சிசுக்கொலைக்கு எதிராகவும் புரட்சிக் குரல் கொடுத்தார். வேதம் புதிது படத்தில் வரும், “தேவர் அப்படிங்கிறது நீங்க படிச்சு வாங்குன பட்டமா?” என்கிற வசனம் இப்போதும் ஜாதிய ஆதிக்கவாதிகளின் செவுளில் அறைந்து கொண்டுதான் இருக்கிறது.

ராதிகா, கார்த்திக், ராதா, ரேவதி, நெப்போலியன், சுகன்யா, ரஞ்சிதா என எண்ணற்ற திரை நட்சத்திரங்களை தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் பாரதிராஜா.
பாரதிராஜா – இளையராஜா கூட்டணி தமிழ் சினிமாவின் பொற்காலமாகும். இவர்களின் கூட்டணியில் வந்த பாடல்கள் இன்றுவரை கிராமங்களின் ஆன்மாவாக ஒலித்துக்கொண்டிருக்கின்றன. பின்னர் ஏ.ஆர். ரஹ்மானுடன் இணைந்து கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா போன்ற காவியங்களைக் கொடுத்தார்.
இயக்குநராக மட்டுமல்லாமல், தனது ‘மனோஜ் கிரியேஷன்ஸ்’ மூலம் படங்களைத் தயாரித்தார். பிற்காலத்தில், ஆயுத எழுத்து, பாண்டிய நாடு, குரங்கு பொம்மை, நம்ம வீட்டுப் பிள்ளை, திருச்சிற்றம்பலம், மகாராஜா போன்ற திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராகவும், வில்லனாகவும் நடித்து, சிறந்த நடிகராகவும் மக்கள் மனதில் நின்றார் நம் மண்ணின் மகன் பாரதிராஜா.
பாரதிராஜா மனைவி பெயர் சந்திரலீலா. மகன் மனோஜ், தாஜ்மஹால் படம் மூலம் நடிகராக அறிமுகப்படுத்தப்பட்டார். அவர் அண்மையில் காலமானார். மகள் பெயர் ஜனனி.
இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது (2004), வெவ்வேறு பிரிவுகளில் 6 தேசிய விருதுகள் பெற்றவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா.
தமிழக அரசின் கலைமாமணி விருது மற்றும் 6 முறை மாநில அரசு விருதுகள் பெற்றுள்ளார் பாரதிராஜா.

அண்மை காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் பாரதிராஜா. சென்னை நீலாங்கரை இல்லத்தில் இன்று காலை பாரதிராஜா தன் வாழ்நாள் முழுவதும் நேசித்த இந்த தமிழ் மண்ணைவிட்டுப் பிரிந்தார். பாரதிராஜாவின் இழப்பு தமிழ் சமூகத்துக்கு பேரிழப்பாகும்.
