பேரா. நா.மணி
பாரதிராஜா திரைத்துறைக்கு வந்து சில ஆண்டுகள் கழித்து, கிராமத்திலிருந்து மேல்நிலைப் பள்ளிக்கு ஒன்பதாம் வகுப்பு படிக்க வந்தேன். அப்போது என்னுடன் இணைந்த நண்பன் ரவிச்சந்திரன், சிறு வயதிலேயே பாரதிராஜாவின் தீவிர ரசிகனாக இருந்தான்.
ஏழாம் வகுப்பு படிக்கும் போது தான் முதல் முறையாக திரைப்படம் பார்த்தேன். ஒன்பதாம் வகுப்பில், அவனது நட்பின் வழியே பாரதிராஜாவின் தீவிர ரசிகனாக மாறினேன். பாரதிராஜாவின் படங்கள் வெளிவந்தால், பலமுறை திரும்பத் திரும்ப பார்த்து மகிழ்ச்சி அடைவோம். வகுப்பிற்கு மட்டம் போட்டுவிட்டு முதன்முறையாக திரைப்படம் பார்க்கச் சென்றதும் பாரதிராஜா படத்திற்குத்தான்.

கல்லூரிப் படிப்புக்காக ஊரைவிட்டு வந்த பிறகும், பாரதிராஜாவின் புதிய படம் வெளியாகும் போதெல்லாம் முதலில் பார்த்துவிட்டு, கிராமத்திற்குச் சென்று அதன் கதைகளைப் பகிர்ந்து, படம் எங்கள் ஊர் திரையரங்கிற்கு வருவதற்கு முன்பே, “இந்தப் படத்தை கண்டிப்பாகப் பார்த்தாக வேண்டும்” என்று பலரையும் தூண்டக்கூடிய அளவிற்கு பேசித் திரிந்தோம்.

கல்லூரி படிப்பு முடித்து பாரதியார் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில், பாரதிராஜாவின் திரைப்பயண வெள்ளிவிழா கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி கலையரங்கில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் அவரிடம் உதவி இயக்குநர்களாக இருந்து பின்னர் இயக்குநர்களாக உயர்ந்த பலர் பேசினர். இயக்குநர் சுந்தர்ராஜன் “நான் நேரடியாக பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்து கற்றுக்கொள்ளவில்லை என்றாலும், நானும் அவருடைய சீடன் தான். எப்படி என்பதை விளக்கிப் பேசினார்”.
இறுதியாக பாரதிராஜா உரையாற்றினார். அவர் கூறிய வார்த்தைகள் இன்றும் நினைவில் அழியாமல் நிற்கின்றன.
“என்னிடம் கற்றுக்கொண்டு பலர் இயக்குநர்களாக உயர்ந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அதைவிட, அவர்கள் திறமையானவர்களாக, சமூகத்தில் பேசப்படும் படைப்பாளர்களாக உருவெடுத்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. இன்னும் இதுபோன்று பலரை உருவாக்கி தமிழ்ச் சமூகத்திற்கு வழங்கத் தயாராக இருக்கிறேன். ஆனால் இந்த வெள்ளிவிழா மேடையில் ஒன்றை உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன். இதுவரை எத்தனையோ பேரை உருவாக்கியிருக்கிறேன்; இனியும் உருவாக்குவேன். ஆனால் நான்தான் முதல் இடத்தில் இருப்பேன். என்னை யாரும் வென்றுவிட முடியாது.” என்றார். அரங்கம் அதிர கைதட்டு விழுந்தது.
1988ஆம் ஆண்டு அவர் பேசிய இந்த வார்த்தைகள், அதன் பிறகு பாரதிராஜாவை நினைக்கும் ஒவ்வொரு தருணத்திலும் என் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. தன்னம்பிக்கை குறித்து பேச வேண்டிய சூழல் ஏற்படுகிறதோ, அங்கெல்லாம் இந்த வார்த்தைகளை பயன்படுத்திக் கொண்டு இருக்கிறேன்.

பாரதிராஜா படம் பார்ப்பதைக் காட்டிலும் படத்தை முன்னிட்டு அவர் பேசும் வைர வரிகள் இருக்கிறதே! அப்பப்பா. அதற்காகவே முதலில் சென்று காத்துக் கிடந்தோம். அவரது மின்காந்த சொற்கள் மட்டுமல்ல, அவரது கூப்பிய கரங்கள், “என் இனிய தமிழ் மக்களே!” என உயர்ந்து உயர்ந்து மேலெழுந்து வரும் போது, மனதில் எழுந்த

மகிழ்ச்சியும் பரவசமும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை.
முதல் முறை படத்தை ரசித்துப் பார்த்துவிட்டு, அடுத்த முறை அந்தப் படத்தை பார்க்கும் போது வசனங்கள் மனப்பாடம் ஆகிவிடும். நாங்களும் மனப்பாடமாக சொல்லிக்கொண்டே படத்தைப் பார்ப்போம். அவரது படங்களின், காட்சிமொழியைக் காட்டிலும் அவரது மின்காந்த வார்த்தைகளே வலிமையாக மனதில் பதிந்திருக்கின்றன. அவற்றில் எடுத்தவுடன் நினைவிற்கு வருவது,
“நான் படப்பிடிப்புக்குச் செல்லும்போது கேமராவை எடுத்துச் செல்வதில்லை; என் கண்ணனின் இரண்டு கண்களைத் தான் எடுத்துச் செல்கிறேன்.”

அதேபோல்,
“அந்த ஈரமான மணற்பரப்பில் என் பாத்திரங்களின் பெயர்களை எழுதி பார்த்துவிட்டுத் திரும்பியிருக்கிறேன். அவை கடல் மணலில் எழுதப்பட்டவைதான்; ஆனால் கடல் அலைகளால் அழிக்க முடியாதவை.”
இவ்வாறான பல வரிகள் அவரை நினைக்கும் போதெல்லாம் நெஞ்சில் வந்து தொற்றிக்கொள்கின்றன.

பாரதிராஜாவின் சாதனை, அவரது பாத்திரங்களிலும் படைப்புகளிலும் மட்டுமல்ல, தமிழ்த் திரையுலகில் அவர் நிகழ்த்திய ஒட்டுமொத்த மாற்றத்திலும் அடங்கியுள்ளது.
கிராமிய வாழ்க்கையை அதன் இயல்போடு திரையில் கொண்டு வந்த அவர், தமிழ்ச் சினிமாவின் மொழியையே மாற்றியவர். அவரது படைப்புகளும், அவர் நிகழ்த்திய சாதனைகளும் கடல் அலைகளால் மட்டுமல்ல, காலத்தாலும் அழிக்க முடியாதவை.

அவரது பங்களிப்பு மீண்டும் மீண்டும் திரைத்துறையினருக்கும் சினிமா ரசிகர்களுக்கும் ஊக்கமளித்து, அவர்களின் கலைத்தரத்தை மேம்படுத்திக்கொண்டே இருக்கும். அதுவே பாரதிராஜா என்ற ஒப்பற்ற கலைஞனின் நிலையான வெற்றியும் அழியாத அடையாளமும்.
கட்டுரையாளர்:

