– ச. மோகன்
தமிழ்த் திரையுலகின் படப்பிடிப்புகளை வழக்கமான செயற்கை அரங்குகளில் இருந்து வழக்கத்திற்கு மாறான கிராமங்களின் இயற்கைவெளிகளுக்குக் கொண்டு சென்று தமிழ்த் திரைப்பட வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கியவர் பாரதிராஜா (Bharathiraja) ஆவார். கிராமத்தின் மண்வாசனையை உயிர்ப்புடன் பதிவு செய்த இயக்குநர்களில் முதன்மையானவர். இயற்கை எழில் கொஞ்சும் கிராமத்து அழகை, வயல்வெளிகளை, ஆறுகளை, மரங்களை, ஆட்டு மந்தைகளை, மண் சாலைகளக் கதாபாத்திரங்களாகப் பேச வைத்தவர். இதுவரை 38 திரைப்படங்களை அவர் இயக்கியுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. அவற்றுள் பல காலத்தால் அழியாத திரைக் காவியங்கள் ஆகும். அவற்றை நினைவு கூர்வதே நாம் அவருக்குச் செலுத்தும் புகழ் வணக்கமாகும்.

புகழ் பேசுபவை
மண் இலக்கியத்தால் மணக்கும் தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள அல்லிநகரம் கிராமத்தில் பிறந்த இவரது இயற்பெயர் சின்னசாமி. சிறு வயதில் இருந்தே இலக்கியம், கலை , நாடகம் என பேரார்வம் கொண்டிருந்த இவர் திரையுலகில் சாதிக்க வேண்டும் என்ற கனவை நனவாக்கி இயக்குநர் இமயமாக உயர்ந்தவர்.

1977 இல் வெளியான இவரது முதல் படம் “16 வயதினிலே” தமிழ்த் திரையில் ஒரு புதிய திசை வழியாக அமைந்தது. “இது எப்படி இருக்கு” என்ற வசனம் பாமரனையும் பேச வைத்தது. இது வெறும் காதல் கதை அல்ல. கிராமத்துப் பெண்களின் கனவுகள், கல்வியின் அவசியம், சமூக ஏற்றத்தாழ்வுகள், மனித உணர்வுகள் ஆகியவற்றின் நுட்பங்களை எடுத்தியம்பியது. அரை நூற்றாண்டைக் கடந்த பின்னும் சமூகத்துடன் பொருந்தி நிற்பதே இதன் தனித்துவம் ஆகும்.

1981 இல் வெளியான `“அலைகள் ஓய்வதில்லை ” திரைப்படத்தில் காதலுக்கும் மதத்திற்கும் இடையில் நிகழும் போராட்டமே கதையின் களமானது. ‘மனிதர்களைக் காதல் இணைக்கிறது. சமூக முரண்பாடுகளும், பாகுபாடுகளும் மனிதர்களைப் பிரிக்கிறது’ என்பதே இப்படம் பேசும் ஆழமான கருத்தாகும். காதலுக்குத் தடையாக இருக்கும் மத அடையாளங்களை நாயகனும் நாயகியும் நிராகரிக்கும் காட்சி காதலர்களின் கிளர்ச்சி மட்டுமல்ல, சமூகப் புரட்சிக்குப் பதியமிட்ட அசுர வித்து.

காதல் என்பது பெரும்பாலும் இளமைக்குச் சொந்தமானதாகச் சித்தரிக்கப்படும் காலத்தில் 1985 இல் வெளியான “முதல் மரியாதை” வயதையும் சமூக மரபுகளையும் தாண்டிய காதல் உணர்வை மிகுந்த கண்ணியத்துடன் பதிவு செய்து காதலுக்கு ஒரு புதிய பரிணாமத்தை அளித்தது. தமிழர் பண்பாட்டின் காதல் நிலைகளில் பெருந்திணை கூறும் பொருந்தாக் காதல் என்ற தமிழ் இலக்கணத்திற்கு புதிய விதி செய்து பொருத்தியது.

1987 இல் வெளியான இவருடைய “வேதம் புதிது” திரைப்படம் சாதியைக் கேள்விக்குட்படுத்திய புரசிக் காவியம் ஆகும். இப்படத்தின் வசனங்கள் யாவும் வெறும் உரையாடல்களாக இல்லாமல் சமூகப் பிரகடனங்களாக முழக்கமிடுகின்றன.
சமுக நீதி, சமத்துவம், மனித உரிமைகள் பற்றிப் பேசும்போதெல்லாம் இப்படம் மேற்கோள் காட்டப்படுகிறது.

1994 இல் வெளியான “கருத்தம்மா” கலைக்கும் சமூகப் பொறுப்புணர்வு உள்ளதை வெளிப்படுத்தியது, தமிழ்த் திரைப்பட வரலாற்றில் ஒரு மைல் கல். பெண் குழந்தைக் கொலை என்பது சமூகத் தவறு மட்டுமல்ல. வறுமை, வரதட்சணை, ஆணாதிக்கம் ஆகியவற்றின் விளைவு என கோடிட்டுக் காட்டியது. பெண் குழந்தைக் கொலையை எதிர்த்து எழுந்த மனசாட்சியின் குரலாய்க் கருத்தம்மா திகழ்கிறது.

1993 இல் வெளியான “கிழக்குச் சீமையிலே ” பாசமும் பகையும் பின்னிப் பிணைந்த மண்ணின் காவியம். கிராமங்களில் காணப்பெறும் வீண் கௌரவம் வன்முறைக்கு வழிவகுப்பதையும், குடும்ப உறவுகளின் உன்னதத்தையும் நினைவூட்டுகிறது.

1996 இல் வெளியான “அந்திமந்தாரை” திரைப்படம் தேசம் மறந்த தியாகிகளின் (விடுதலை வீரர்களின்) மௌன காவியம். ஒரு விடுதலைப் போராட்ட வீரத் தியாகியின் அந்திம கால வாழ்க்கையின் வழியாக ஒரு தேசத்தின் நன்றியின்மையைப் பதிவு செய்தது.

தனித்துவம்
தமிழ்த் திரைப்பட வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டத்தையும் சில இயக்குநர்கள் தங்களின் தனித்துவமான படைப்புகளால் அடையாளப்படுத்தியுள்ளனர். அந்த வரிசையில், 1970 களின் இறுதியிலிருந்து தமிழ்த் திரையுலகைத் திசைப்படுத்தி வச்சப்படுத்தியவர் இயக்குநர் பாரதிராஜா. அவர் வெறும் திரைப்பட இயக்குநர்அல்ல. மண்ணின் மணத்தையும் மக்களின் வாழ்க்கையையும் திரையில் கவிதையாக்கிய கலைஞர்.
வெயில், மழை, நிழல் வயல்வெளிகள், மரங்கள், கண்மாய்கள், ஏரிகள், வறண்ட நிலத்தின் முள்செடிகள், புழுதி பறக்கும் மண் பாதைகள், திருவிழாக்கள், உழைக்கும் மக்களின் வாழ்வியல் போன்றன அவர் திரைப்படங்களில் உயிர்ப்புடன் வாழ்ந்தன.

நீண்ட வசனங்களை விட காட்சிகளே அதிகம் பேசும்
ஒரு கண் பார்வை, ஒரு மௌனம், காற்றின் இரைச்சல், மழைத் துளி இவற்றின் மூலமாகக் கதாபாத்திரத்தின் உணர்வுகளை வெளிப்படுதத்துவார். இதுவே அவரது திரைப்படங்களுக்கு ஒரு தனித்துவத்தை கவிதையாய் வழங்கியது.
அழகியல்
இயற்கை ஒளியிலும், இயல்பான சூழலிலும் படம் பிடித்த பாரதிராஜாவின் வருகையால் தமிழ்த் திரையில் கிராமம் பேசியது பார்வையாளர்களுடன்…..
திரை அரங்குகளின் இருளைக் கிழித்து அவர் ஏற்றிய அறிவொளி மண்ணின் மரபை, சமூக முரணைக் கட்டுடைக்கிறது. அவரது கேமரா வெறும் கதையைப் படமாக்கவில்லை. மண்ணின் மூச்சைப் பதிவு செய்தது.

பதினாறு வயதினிலே மயில் இன்றும் மக்கள் மனதில் பறக்கிறது.
முதல் மரியாதை மயில்சாமி இன்றும் காத்துக் கிடக்கிறார்.
வேதம் புதிது எழுப்பிய கேள்விகள் இன்றும் பதில் கேட்கின்றன.
அவரது கிராமங்களில் மரம் பேசும், மழை காதலிக்கும், காற்று தூது செல்லும், ஆறு நினைவுகளைச் சுமக்கும்,
அவரது கிராமம் ஒரு உடைந்த கண்ணாடித் துண்டு போன்றது, ஒவ்வொரு துண்டிலும் ஒரு முகம் தெரியும். ஒவ்வொரு முகத்திலும் ஒரு கதை தெரியும், ஒவ்வொரு கதையிலும் ஒரு காயம் தெரியும்,
அவரது திரைப்படங்களில் கதாநாயகன் மறைந்தான். மண் நாயகன் ஆனது. காதல் மறைந்தது, ஏக்கம் கதையானது, வசனம் மறைந்தது, மௌனம் பேசியது.
திரைப்படம் என்பது பொழுதுபோக்கு என்ற வரையறையை அவர் உடைத்தார். உலக அரங்கில் கிராமத்தை அறிமுகப்படுத்திய கலைஞர், மனித உணர்வுகளைக் கவிதையாக்கிய கவிஞர், சமூகத்தில் கெட்டிதட்டிப் புரையோடிப்போன மரபுகளை, முரண்களைக் கேள்விக்குள்ளாக்கிய துணிச்சலான கேள்விக்காரன். இவை அனைத்திற்கும் ஒரே பெயர் பாரதிராஜா.
தென்றல் வீசும் அந்தி மாலைப் பொழுதில் பறவைகள் கூடு திரும்பும் போது, இளையராஜாவின் பாடல் ஒலிக்கும் போது நாம் பார்ப்பது இயற்கையை அல்ல….பாரதிராஜாவின் நினைவுகளை…….

கட்டுரையாளர் குறிப்பு:
எழுத்தாளர் ச.மோகன், மும்பையில் Bold India நாளிதழில் பொறுப்பாசிரியராகப் பணியாற்றியவர். MUDRA communications (Reliance), Coromandel Info Tech, நிறுவனங்களில் உயர் பதவி வகித்தவர். மக்கள் கண்காணிப்பகம் அமைப்பில் இணை இயக்குநராக பணியாற்றியவர்.
