தமிழ் திரையுலகில் மண்வாசனை மாறாத திரைப்படங்களை இயக்கி, தனக்கெனத் தனிப் பாணியை உருவாக்கி முத்திரை பதித்தவர் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா. சென்னையில் நேற்று அதிகாலை உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த அவர், தனது இல்லத்தில் காலமானார்.
அவரது உடலுக்குத் தமிழக முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வைகோ, சீமான் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், ரஜினிகாந்த், கமல்ஹாசன், வைரமுத்து, இளையராஜா, ராதிகா உள்ளிட்ட ஏராளமான திரைப்பிரபலங்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, நேற்று இரவு 9 மணி அளவில் அவரது உடல், சொந்த ஊரான தேனி மாவட்டம், வத்தலகுண்டு காட்ரோடு அருகே உள்ள அவரது பண்ணை வீட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு இன்று பாரதிராஜாவின் உறவினர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் என ஏராளமானோர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.
இன்று பிற்பகலில் குடும்பத்தினர் அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகளை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, அவரது உடல் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதது.
தமிழக அரசு சார்பில் வன்னி அரசு, நிர்மல்குமார் ஆகிய அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். காவல் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து உடல் நல்லடக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
