கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு மருத்துவமனையின் நர்சிங் கல்லூரி தொடக்க விழாவில் கலந்துகொள்வதற்காகக் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று (ஜூலை 22) கோவை வந்தார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சி.பி. ராதாகிருஷ்ணன், “ஜி. குப்புசாமி நாயுடு மருத்துவமனையின் நர்சிங் கல்லூரி தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக நான் கோவை வந்துள்ளேன்.
கோவைக்கு வருவதாக இருந்தாலும் சரி, தமிழ்நாட்டிற்கு வருவதாக இருந்தாலும் சரி, அது எனக்கு எப்போதும் தனி மகிழ்ச்சியையும் பூரிப்பையும் அளிக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தொலைக்காட்சிகள் வாயிலாகத் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது அன்பையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
அப்போது தமிழகத்தில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் குறித்தும், அரசு பேச்சுவார்த்தை நடத்தாதது குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “இது ஒரு அரசியல் சார்ந்த கேள்வி; இதற்கு உரிய பதிலை அரசியல் தலைவர்களே அளிப்பார்கள்” என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “மாணவர்கள் எப்போதும் நாட்டின் ஒருமைப்பாட்டையும் ஒற்றுமையையும் பாதுகாக்க முன்வர வேண்டும். இந்திய தேசம் இன்று சர்வதேச சக்திகளுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கும் நிலையில் உள்ளது என்றால், அதற்கு நமது ஒற்றுமையே முக்கியக் காரணம்” என்று குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டின் தற்போதைய புதிய அரசு குறித்த கேள்விக்கு, “புதிய அரசு செயல்படுவதற்குச் சிறிது காலம் அவகாசம் வழங்க வேண்டும்” என்றார்.
