NEET: டெல்லி கொடூர தாக்குதல் வீடியோ.. ‘நேரத்தை வீணாக்காதீங்க..” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி!

Published On:

| By Mathi

Delhi Brutal Attack Video - "Don't Waste Time..." SC CJI Refuses to Hear Plea

டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராக காக்ரோச் ஜனதா கட்சியினர் நடத்திய முற்றுகைப் போராட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள் மீது போலீசார் கொடூரமாக நடத்திய தாக்குதல் தொடர்பான மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு மறுத்துவிட்டது.

டெல்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீதான தாக்குதல் தொடர்பான வீடியோ ஆதாரங்களுடன் தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் வழக்கறிஞர்கள் முறையிட்டனர்.

ADVERTISEMENT

ஆனால் தலைமை நீதிபதி சூர்யகாந்த், “எங்க நேரத்தையும் வீணடிக்காதீங்க.. உங்க நேரத்தையும் வீணடிக்காதீங்க..” என திட்டவட்டமாக தெரிவித்தார்.

அப்போது, “நீட் தேர்வை முறையாக நடத்த வேண்டும்; தேசிய தேர்வு முகாமையை சீரமைக்க வேண்டும்” என்பது எல்லாம் மாணவர்களின் கோரிக்கைகள் என்று மீண்டும் வழக்கறிஞர் தெரிவித்தார்.

ADVERTISEMENT

அதற்கு, “மிக்க நன்றி” என்று மட்டும் தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறினார்.

இருப்பினும், “போலீசாரின் அத்துமீறல் தொடர்பான வீடியோக்களை பாருங்கள்” எனவும் தலைமை நீதிபதி சூர்யகாந்திடம் அந்த வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார்.

ADVERTISEMENT

அதற்கு, “எங்களுக்கு இந்த வீடியோக்களை பார்ப்பதில் விருப்பம் இல்லை. வீடியோக்களை பார்க்க நேரமும் இல்லை. நேற்றே இந்த விவகாரத்தை டெல்லி உயர்நீதிமன்றம் அவசரமாக விசாரிக்க மறுத்துவிட்டது. எங்களை இந்த பிரச்சனையில் இழுத்துவிடாதீர்கள்” என்று திரும்பவும் கூறி விசாரிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார் தலைமை நீதிபதி சூர்யகாந்த்.

தலைமை நீதிபதி சூர்யகாந்த் கருத்தால் உருவான ‘காக்ரோச்’ ஜனதா கட்சி

டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி வரும் மாணவர்களும் இளைஞர்களும் தொடங்கிய ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (CJP) என்ற இயக்கம் உருவாவதற்குக் காரணமே உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்த ஒரு சர்ச்சைக்குரிய கருத்துதான்.

வேலையற்ற இளைஞர்கள் பத்திரிகை மற்றும் சமூகப் போராட்டம் (activism) போன்ற துறைகளின் பக்கம் திரும்புவது குறித்தும், முறைகேடான செயல்களில் ஈடுபடுவது குறித்தும் தலைமை நீதிபதி சூர்ய காந்த் கடுமையான தொனியில் பேசி, அவர்களை ‘காக்ரோச்’ (Cockroaches) என்று குறிப்பிட்டிருந்தார். இந்தக் கருத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலையையும், இளைஞர்கள் மத்தியில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.

இதனால் “போலி மற்றும் முறைகேடான பட்டங்கள்” வைத்திருப்பவர்களைத்தான் கூறியதாக தலைமை நீதிபதி சூர்யகாந்த் விளக்கம் அளித்தார்.

ஆனாலும் தலைமை நீதிபதி சூர்யகாந்தின் இந்த கருத்து வெளியான சில நாட்களுக்குள்ளேயே, அதனை எதிர்த்து கிண்டல் செய்யும் விதமாக ‘CJP’ (Cockroach Janta Party) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.

தற்போது அதே தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வுதான், நீட் முறைகேடுகளுக்கு எதிராக காக்ரோச் ஜனதா கட்சி முன்னெடுத்துள்ள போராட்டம் மற்றும் காவல்துறை அடக்குமுறைக்கு எதிரான வழக்குகளை அவசரமாக விசாரிக்க மறுத்துள்ளதுடன், “எங்களுக்கு வீடியோக்களைப் பார்க்க நேரமில்லை, நேரத்தை வீணடிக்காதீர்கள்” என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share