குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜி கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Senthil balaji

குதிரை பேர வழக்கில் முன்ஜாமீன் பெற்றுள்ள நிலையில், விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் தங்களைத் துன்புறுத்தக் கூடாது என்றும், வேறு வழக்குகளில் கைது செய்யக்கூடும் என அச்சம் உள்ளதாகக் கூறி திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் தாக்கல் செய்த மனுக்களைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தமிழகத்தில் தவெக ஆட்சியை அமைத்த பிறகு, ஆட்சியைக் கவிழ்க்க எம்.எல்.ஏ-க்களிடம் குதிரை பேரம் நடத்தப்படுவதாக ஊத்தங்கரை எம்.எல்.ஏ இளையராஜா புகார் அளித்தார். இந்த விவகாரத்தில் தேர்தல் கருத்துக் கணிப்பு வெளியிட்ட திருநாவுக்கரசு உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் செந்தில் பாலாஜிக்கும், அவரது சகோதரர் அசோக் குமாருக்கும் தொடர்பு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.

ADVERTISEMENT

இதையடுத்து இருவரும் தலைமறைவாக இருந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் அவர்களுக்கு நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில், செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமார் சார்பில் மீண்டும் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறோம். ஆனால் சோதனை, விசாரணை என்ற பெயரில் காவல்துறை தேவையில்லாமல் துன்புறுத்தக் கூடாது. அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பொதுவெளியில் கரூர் சம்பவத்திற்குச் கணக்கு தீர்ப்போம் என்று பேசியதைப் பார்க்கும்போது, எங்களை வேறு ஏதேனும் வழக்கில் கைது செய்ய காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டிருக்கலாம் எனத் தகவல்கள் கிடைக்கின்றன. எனவே, எந்த வழக்கில் விசாரணைக்கு அழைத்தாலும் ‘பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா’ சட்டப் பிரிவு 35 (3)-ன் படி முறையான நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், “மனுதாரர்கள் பொதுவான ஒரு உத்தரவைக் கேட்கிறார்கள். மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு விரிவான பதில் அளிக்க அவகாசம் வேண்டும்” என்றார்.

செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, “வேறு வழக்குகளில் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் மட்டுமே உள்ளது. விசாரணையைத் தடுக்கவில்லை, சட்டப்படி நோட்டீஸ் வழங்கி அழைத்தால் போதும்” என வாதிட்டார்.

ADVERTISEMENT

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.கே.இளந்திரையன், “முன்ஜாமீன் வழங்கப்பட்டிருந்தாலும், தற்போதைய சூழலில் ‘துன்புறுத்தக் கூடாது’ எனப் பொதுவான உத்தரவைப் பிறப்பிக்க முடியாது. மேலும், வேறு வழக்குகள் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், முன்கூட்டியே பாதுகாப்பு உத்தரவு தர வேண்டிய அவசியமில்லை” என்று கூறி செந்தில் பாலாஜி, அசோக் குமார் தாக்கல் செய்த 2 மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share