திரையில் ‘வில்லன்’.. நிஜத்தில் ‘ஹீரோ’.. டெல்லி போர்க்களத்தில் இணைந்தது ஏன்? நடந்தது என்ன? விவரிக்கும் நடிகர் பிரகாஷ் ராஜ்

Published On:

| By Mathi

Prakash Raj Delhi Neet Protest

டெல்லியில் ஜூலை 20-ந் தேதி நாடாளுமன்றம் நோக்கிய காக்ரோச் ஜனதா கட்சியினர் பேரணியில் பங்கேற்று மாணவர்களை ஒருங்கிணைத்தவர்களில் நடிகர் பிரகாஷ் ராஜூம் ஒருவர். இந்தப் பேரணியில் பங்கேற்பதற்காக முதல் நாள் இரவே டெல்லி ஜந்தர் மந்தரில் போய் மாணவர்கள், இளைஞர்களுடன் தங்கினார் பிரகாஷ் ராஜ்.

டெல்லி ஜந்தர் மந்தர் முதல் நாடாளுமன்றம் நோக்கி பேரணி வரையில் என்ன நடந்தது என்பதை ”Prof K Nageshwar” யூடியூ-ப் சேனலுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் விரிவாக பேட்டி அளித்துள்ளார்.

ADVERTISEMENT

அந்த பேட்டியில் நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளதாவது: டெல்லியில் என்ன நடக்கிறது என்பதைத் தேசிய ஊடகங்கள் எப்போதுமே நேர்மையாகவோ வெளிப்படையாகவோ காண்பிப்பதில்லை என்ற ஆதங்கத்தோடு நான் நேரடியாகக் களத்திற்குச் சென்றேன்.

எளிய மக்களின் குரலை ஒடுக்குவதற்காக அரசாங்கம் மிகக் கடுமையான அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டதை எனது கண்கூடாக நேரில் கண்டேன்.

ADVERTISEMENT

பொதுவாக இது போன்ற விவகாரத்தை நாடாளுமன்றத்தில் பேச வலியுறுத்த நான் மக்கள் பிரதிநிதிகளிடம் வலியுறுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறேன்.

இந்த முறை டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துகொண்டு, இரவெல்லாம் இளைஞர்களோடும் மாணவர்களோடும் பேசித் தங்கி, அதன் பிறகு நாடாளுமன்ற முற்றுகைப் பேரணியில் நேரடியாகப் பங்கேற்றேன்.

ADVERTISEMENT

டெல்லியில் சோனம் வாங்சுக்கை காவல்துறையினர் ஜந்தர் மந்தரில் இருந்து வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றுவிட்ட பிறகு, என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.

வெறுமனே ஊரிலிருந்து கொண்டு தொலைவில் நிற்பதை விட, அந்த இடத்திற்கே நேரில் சென்று நிலவரத்தைப் பார்க்க வேண்டும் நினைத்ததால் டெல்லி சென்றேன்.

ஜூலை 19-ந் தேதி அங்கே சென்று, போராடிய பிள்ளைகள் படுத்துக்கொண்டு பேசுவதைப் பார்த்துவிட்டு, அவர்களுடனே தங்குவதே சிறந்தது என்று முடிவு செய்து அங்கேயே ஜந்தர் மந்தரிலேயே தங்கினேன்.

அடுத்த நாள் காலையில் நாடாளுமன்றம் நோக்கிச் செல்ல வேண்டியிருந்ததால், இரவு முழுவதும் அங்கேயே தங்கியிருந்தேன்.

நள்ளிரவில் சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டபோதும், புதிய கமிஷனர் பொறுப்பேற்று வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியபோதும், அந்த இடத்திலேயே தங்கியிருந்து மாணவர்களுடன் இரவு முழுவதையும் கழித்து அவர்களுக்குத் துணையாக நின்றேன்.

போராடும் மாணவர்களின் பலத்தைக் குலைக்கவும், வெளி மாநிலங்களிலிருந்து ஆதரவாளர்கள் வருவதைத் தடுக்கவும் ஹரியானா மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து டெல்லிக்கு வரவிருந்த அனைத்து ரயில்களும் பாதியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டன.

போராடும் இடத்தைச் சுற்றிலும் 4 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் சேவைகள் முழுமையாகத் தடை செய்யப்பட்டன. பொதுமக்களின் நடமாட்டத்தைத் தடுக்கும் வகையில் சாலைகளும் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டன.

ஊடகங்களில் போராடுபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக 75,000 அல்லது 1 லட்சம் என தவறாகச் சித்தரிக்கப்பட்டது. ஆனால், அங்கு மாணவர்களை மிரட்டி ஒடுக்கப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட போலீஸ் படையினரின் எண்ணிக்கையே சுமார் 50,000 ஆக இருந்தது என்பதுதான் உண்மை.

வெளியில் இருந்து வந்தவர்களால் மின்விசிறிகள் கூட இல்லாமல் தவிக்க நேர்ந்தது, அங்கு அடிப்படைத் தேவைகளான கழிப்பறைகள் கூட இல்லை. குடிநீர் கிடைப்பதற்குக் கூட போராட்டக்காரர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

இரவு முழுவதும் நாங்கள் கவனித்த விஷயம் என்னவென்றால், காவல்துறையினர் தங்களது எல்லையை மீறி முழுமையாக அத்துமீறிவிட்டனர் என்பதுதான். நள்ளிரவிலும் கடும் வெயிலில் வியர்வை சிந்துவதைப் போல நிலைமை இருந்தது; மூச்சு திணறல் ஏற்படுகிற அளவு நிலைமை இருந்தது.

எங்கள் கண்முன்னேயே போராட்டத்தைத் திசைதிருப்பவும் கலவரத்தை உருவாக்கவும் திட்டமிட்டு கற்கள் மற்றும் செங்கற்கள் ஏற்றிய லாரிகள் அங்கு கொண்டுவந்து நிறுத்தப்பட்டன.

திடீரென ஆம்புலன்ஸ் செல்ல வேண்டும் என்ற பெயரில் பதற்றமான சூழலை உருவாக்க காவல்துறையினர் முயன்றனர். திடீரென எங்கோ ஒரு சைரன் சத்தம் கேட்கிறது; போராட்டம் நடக்கும் அந்த நடுப்பகுதி வழியாக ஒரு ஆம்புலன்ஸ் செல்ல வேண்டுமாம்.

இது மக்களை மிரளச் செய்து ஒரு கூட்ட நெரிசலை (Stampede) உருவாக்கும் செயலாக இருந்தது. உடனே அங்கிருந்தவர்கள் மாணவர்களிடம் சென்று, “இடதுபுறம் செல்லுங்கள், வலதுபுறம் செல்லுங்கள், அந்த ஒரு வாகனத்திற்கு மட்டும் வழி விடுங்கள்” என்று கூறினர். அந்த வாகனத்தின் டிரைவரும் சிரித்துக்கொண்டே சென்றார், மீண்டும் அதே வழியாகத் திரும்பிச் செல்வார். இதை எல்லாம் பார்த்து கொண்டுதான் இருந்தோம்.

பெயர்களும் பேட்ஜகளும் இல்லாத சில மர்ம நபர்கள் அதிகாரிகள் என்ற போர்வையில் கூட்டத்திற்குள் புகுந்து அத்துமீறல்களில் ஈடுபட்டனர். போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். பல மாணவர்களின் கால்களும் கைகளும் அடித்து உடைக்கப்பட்டன.

அங்கே பெண் பிள்ளைகள் பட்ட கஷ்டங்களை வார்த்தைகளால் சொல்ல முடியாது; அவர்களின் பிரச்சினைகளை நினைத்தால் பாவம் என்று தோன்றும்.

அந்தப் பிள்ளைகள் அனைவரும் ஒருவரையொருவர் அணைத்தவாறு நெருக்கமாகப் படுத்துக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு மேலே சில உள்ளூர் மக்களும், சில பெற்றோர்களும் சிறிய காகிதங்கள் மற்றும் நியூஸ் பேப்பர்களைப் பிடித்து அவர்களுக்கு வெயில் படாமல் நிழல் தடுத்தனர்.

நீட் (NEET) போன்ற தேர்வுகள் மற்றும் தொடரும் வினாத்தாள் கசிவு (Paper Leak) பிரச்சினைகளால் பல லட்சம் மாணவர்களின் ஒட்டுமொத்த எதிர்காலமும், பெற்றோர்களின் பல வருட உழைப்பும் ஒரே நொடியில் சூறையாடப்படுகிறது.

முறைகேடுகளால் மன உளைச்சலுக்கு ஆளாகும் மாணவர்கள் சில சமயங்களில் தற்கொலை செய்யும் சோகமான விபரீத நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். ஆனால் அரசாங்கமோ இதைக் கண்டுகொள்ளாமல் கண்டும் காணாமல் மௌனம் காக்கிறது.

வினாத்தாள் கசிவு (Paper Leak) என்பது எவ்வளவு பெரிய கொடூரமான விஷயம்! எவனோ ஒருவன் 8 லட்சமோ 9 லட்சமோ பணத்தைக் கொடுத்துவிட்டு அந்த வினாத்தாளை முன்கூட்டியே விலைக்கு வாங்கி விடுகிறான். அவனுக்குத் தகுதி இருக்கிறதோ இல்லையோ, நாளையே அவன் ஒரு மருத்துவராக மாறிவிட்டால் எத்தனை பேரின் உயிரை அவன் பறிப்பான்? அவர்கள் வேறு யாருமல்ல, நம்முடைய பிள்ளைகள்தாம்! ஆபரேஷன் மேஜையில் படுப்பவர்கள் நாம்தான். அறிவு, திறமை, தகுதி ஆகியவற்றை வைத்து இப்படிப்பட்ட வியாபாரத்தை ஒரு அரசாங்கம் நடத்துவது எந்த விதத்தில் நியாயம்?

ஆனால் ஊடகங்களோ தர்மேந்திர பிரதானின் பதவி விலகல் மற்றும் வினாத்தாள் கசிவு குறித்துப் பேசினாலும், ஒட்டுமொத்தமாக நரேந்திர மோடியின் 12 ஆண்டு கால ஆட்சி முறைக்கு எதிரான ஒரு மிகப்பெரிய கண்டனக் குரலாக இந்த டெல்லி போராட்டம் வெடித்துள்ளது.

போராடும் இளைஞர்களைத் தேசவிரோதிகள் போலச் சித்தரிக்கும் கேவலமான போக்கை அரசாங்கம் உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

எதிர்க்கட்சிகளோ அல்லது வேறு அமைப்புகளோ நடத்தும் போராட்டங்களை விட, இந்த இயக்கம் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் சார்பற்றது; இது ஒட்டுமொத்த நாட்டின் குடிமக்களின் உரிமைப் போராட்டமாகும்.

நாட்டின் ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டுமெனில், சிவில் சொசைட்டி (Civil Society) எனப்படும் குடிமக்கள் சமூகம் விழித்தெழுந்து ஆட்சியாளர்களிடம் கடுமையான கேள்விகளைக் கேட்க வேண்டிய தருணம் இதுவாகும்.

அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் காட்டிய வழியில், வன்முறையற்ற முறையில் அமைதியான வழியில் மக்கள் தங்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராட வேண்டும் என நான் உரக்கக் கூறுகிறேன்.

இந்த நாட்டின் மீது சாமானிய மக்களுக்கு இருந்த நம்பிக்கை மெல்ல மெல்லப் போய்விட்டது. நம்மை ஒரு லீடர் காப்பாற்றுவார், இந்த கட்சி நம்மை காப்பாற்றும், இந்த நீதிபதி நம்மைப் பாதுகாப்பார், இந்த வக்கீல் நமக்கு நீதி பெற்றுத் தருவார் என்ற அத்தனை நம்பிக்கைகளும் காலப்போக்கில் அடிபட்டுப் போய்விட்டன. இது ஒரு மிகப்பெரிய ஜனநாயகப் பற்றாக்குறையாகும் (Democratic Deficit).
அதனால்தான் இதுபோன்ற மக்கள் இயக்கங்கள் வெடிக்கின்றன. இவ்வாறு பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share