நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. வினாத்தாள் கசிவு மற்றும் அதனால் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களுக்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 20-ஆம் தேதி முதல் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இப்போராட்டத்தில் தங்களை இணைத்துக்கொண்ட சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கும் நாளில் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்லப்போவதாக அறிவித்திருந்தார். ஆனால், அதற்குள் உடல்நலக்குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கியதை அடுத்து, அமைப்புகள் சார்பில் நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி நடத்தப்பட்டது. அப்போது பேரணியைத் தடுக்கக் காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கலவரத்தைக் கட்டுப்படுத்த முயன்றனர். இதில் பலர் படுகாயமடைந்த சம்பவம் நாடு முழுவதும் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதன் தொடர்ச்சியாகத் தமிழகத்திலும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. குறிப்பாக நேற்று பிற்பகலில் சென்னை தலைமைச்செயலகம் முன்பு தெருக்குரல் அறிவு நீட் தேர்வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை சந்தித்து பேசியது தலைமைச் செயலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பாலன் இல்லத்தில் நேற்று காலை பல்வேறு மாணவர் அமைப்பினரும், காக்ரோச் ஜனதா கட்சி ஆதரவாளர்களும் இணைந்து நீட் தேர்வுக்கு எதிராகத் தொடர் முழக்கப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். நேற்று காலை தொடங்கிய இந்தப் போராட்டம், இரவு முழுவதும் நீடித்தது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், “நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்; தேர்வில் நடைபெற்ற குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் நீட்தேர்வுக்கு எதிரான போராட்டம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தனது எக்ஸ் பதிவில், “நாட்டின் தலைநகர் புதுடெல்லியில் அடக்குமுறைகளை மீறி மாணவர்களின் போராட்டம் இரவு – பகலாக தொடர்ந்து நடைபெறுகிறது.
டெல்லி காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினரின் கொடூரமான தாக்குதலைக் கண்டித்து தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் போராடுவதற்கு காவல்துறை அனுமதி மறுப்பதும், தடுப்பதும், கைது செய்வதும் வன்மையான கண்டனத்திற்குரியது.
நேற்று மாலை DYFI -SFI சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை காவல்துறை வலுக்கட்டாயமாக கைது செய்து இரவு 10மணிக்கு மேல் விடுவித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு போராட்டங்களை காவல்துறையை ஏவி ஒடுக்குவதை ஒரு போதும் ஏற்கமுடியாது.
போராட்டத் தீ பரவட்டும்.” என தெரிவித்துள்ளார்.
