”பாஜகவின் கொடுங்கோலான ஆட்சியில் டெல்லியில் போலீசார் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்திக்க கூட மத்திய அமைச்சரின் அனுமதி தேவைப்படுகிறது” என்று திமுக கடுமையாக விமர்சித்துள்ளது.
டெல்லியில் திமுக எம்.பிக்கள் ஆ.ராசா, ஜெகத்ரட்சகன், தயாநிதி மாறன், கான்ஸ்டாண்டைன் ரவீந்திரன், கிரிராஜன் ஆகியோர் இன்று ஜூலை 22-ந் தேதி ராம் மனோகர் லோகியா மருத்துவமனைக்கு, நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் போலீசார் தாக்குதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவோரை சந்திக்க சென்றனர். ஆனால் பாதிக்கபட்டவர்களை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் உறவினர்களை மட்டும் சந்தித்தனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. கூறியதாவது: நீட்டுக்கு எதிராக டெல்லியில் போராடிய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை மற்றும் ஒடுக்குமுறையில் காயமடைந்த, மயக்கமடைந்த, பாதிப்படைந்த மாணவர்கள் ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனை அறிந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர் முன்னாள் தமிழக முதல்வர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினராகிய எங்களை அனுப்பி, அவர்களை எல்லாம் சந்தித்து, அவசர சிகிச்சை பிரிவில் இருந்தால் அவர்களுடைய உறவினர்களை சந்தித்து ஆறுதல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இதன்படி இன்றைய தினம் மருத்துவமனைக்கு வந்து, மருத்துவமனையினுடைய கண்காணிப்பாளரை சந்தித்தோம். பெரும்பாலானவர்கள் வெளிநோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று சென்றுவிட்டார்கள். ஓரிருவர் அவசர சிகிச்சை பிரிவிலே அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களைப் பார்க்க அனுமதிக்க இயலாத சூழல் இருப்பதாக எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
அதனால் அவர்களுக்கு வழங்கப்படுகின்ற மருத்துவ சிகிச்சையை கண்காணிப்பாளரிடம் கேட்டறிந்தோம்; பாதிக்கப்பட்டோரின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினோம்.
இவர்களை எல்லாம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரின் அனுமதி இருந்தால்தான் சந்திக்க முடியும். அந்த அளவுக்கு இந்த மருத்துவமனையினுடைய கண்காணிப்பாளர் அரசால் மிரட்டப்பட்டிருக்கிறார்.
ஒரு நோயாளியை சந்திப்பதற்கு கூட ஒன்றிய அரசினுடைய, ஒன்றிய அமைச்சரின் அனுமதியைப் பெற்றுத்தான் சந்திக்க வேண்டும் என்று ஒரு கண்காணிப்பாளர் சொல்லுகின்ற அளவிற்கு ஒரு கொடுங்கோலான ஆட்சி இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதையும் இந்த நேரத்திலே நாங்கள் பதிவு செய்ய விரும்புகிறோம். இவ்வாறு ஆ.ராசா தெரிவித்தார்.
